Monday, August 29, 2016

கடைவரி

செய்தி கிடைத்தவுடன்
விரைந்து சென்றேன்
அவள் கவிதைகளைப் போலவே
அவளையும் பிடிக்கும்

சிறிதே பிரிந்திருந்த
இதழ்களில்
கவிதை
இன்னும் தொக்கி நிற்பதுபோல்
ஓர் உறைந்த குறுநகை

எதிர் எதிரே அமர்ந்து
புகையும் காப்பிக்கோப்பைகளின்
உன்னத நறுமணத்திற்கிடையே
கடைப்பார்வை ஏதுமின்றி
கண்களை நேராய் கவ்வும்
உனது கவிதைகளுடனான
மாலைகள்

எரியும் மஞ்சள் சுடரின்
மெல்லிய ஒளியில்
சாய்ந்துகிடந்த
உன் நெஞ்சின்
தாளத்திற்கியைந்த கவிதைகள்
அறாதுதித்த
இரவுகள்

எத்தனையோ இடைவெளிகள்
எதெதெற்காகவோ பிணக்குகள்
ஒரு கவிதையின் தரிசனத்தில்
ஓர் அந்தரங்க சிலாகிப்பில்
இயற்கையாக
மிக இயற்கையாக
விரல்களின் பிணைப்பாக
முடிந்திருக்கின்றன

சூழவும் நோக்கினேன்

அவளின் கவிதைகள் வழியும்
அத்தனை முகங்கள்
அங்கே 

Monday, August 22, 2016

அபத்தக் கவிகளும் அற்ப மதுவும்


உடலை உருக்கி
சொற்களில்
வடிக்கும் வாதை
கரைந்து நெளிந்து உருமாறி
கனவுகள்
வழியும் ரசவாதம்
கோடியிலொருவனாய்
கற்ற வித்தை

ஆயிரமாயிரம் வருடம்
கோடானுகோடி பாக்கள்
கொட்டித் தேடி
சலித்து வடித்து
சுவை தேர்ந்து
உயர்த்தும் சமூகம்
அரற்றுவது ஒன்றே

அற்ப மது
தனியொருவனின் முயக்கம்

பீடம் தேர்ந்த
நீயோ
எங்களில் கோடியிலொருவன்
பேசாப் பொருள்
பேசத் துணிந்தவன்

பணயப் பொருளாய்
உயிரைத் தொலைப்பவன்

கூறவந்தது முடிந்ததா
தவறற்ற மொழியின்
தேர்வு
நிச்சயப்படுத்தப்பட்டுவிட்டதா
திரும்பிப் பார்ப்பதற்கும்
எதிர்நோக்குவதற்கும்
உன் தடம்
குழப்பமின்றி
பதிக்கப்பட்டுவிட்டதா

இல்லையெனின்
உன் அற்ப மது
உன்னோடு
எங்கள் ஆதங்கம்
எங்களோடு 

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை:

https://padhaakai.com/2016/08/21/homage-2/

Monday, August 8, 2016

ஹைட்டியின் பூகம்பத்தில் பிழைத்தவன்

அவன் 
வண்டியோட்டிக் கொண்டிருந்தான் 

கனத்த குரல் 
இடையறாத 
உற்சாகக் குரலோசையிடையே 
பரபரவென 
காற்றில் அலையும் 
கரங்கள் 
முழுதும் பாதியுமாய் 
வெண்சுண்ணம் பூசி 
உயராது நிற்கும் 
போர்ட் ஆ பிரின்ஸின் கட்டிடங்கள் 
காட்டி 
போக்குவரத்தின் நெரிசல் கண்டு 
பதறி நான் அலறும் போது 
சிரித்து காரை 
நெறிப்படுத்தும் 

இது எங்கள் தேவாலயம் 
இதுதான் நாடாளுமன்றம் 
இது என் தந்தை சிக்கிக் கிடந்த 
சிறைச்சாலை 
இது தான் என் தாய் 
நிலம்விளை பொருள்விற்கும் 
வாரச்சந்தை 
நானும் என் தங்கையரும் 
ஆடி மகிழ்ந்த பூங்கா 
பாதியில் நின்ற பள்ளி 
புன்சிரிப்பு வழியும் 
கனத்த குரலில் 
சொல்லிச்சென்றவனின் 
கரம்தொடர்ந்து 
பார்வை தொடர 
எதுவும் இல்லை 
எங்கும் 

இடையில் விழுந்த
அமைதி உணராது 
கூடைச்சுமை தாங்கித்திரியும் 
ஆடவர் பெண்டிர் 
கூட்டம் தவிர்த்து 
நிலைச்சின்னம் இருமருங்கும் 
தேடி 
திரும்பிப் பார்த்தேன் 
அவனை 

கண்ணாடியின் முன்னால் 
பதிந்திருந்த 
அவன் பார்வையில் 
இன்றுமில்லை 
நாளையுமில்லை 

விழித்து எழுந்தால் 
ஆடியிருந்த 
எந்தச்சின்னமும் இல்லை
கூடிமகிழ்ந்த 
பள்ளி இல்லை பூங்கா இல்லை 
சந்தை இல்லை வீடு இல்லை 
ஆலயம் இல்லை சாலையும் இல்லை 

பின்னிக் கிடந்த 
எந்த 
நினைவுகளும் இல்லை 

திரும்பிக் கேட்டான் 
கண்ணீர் வழிய 
என் புன்னகை உறைய 

துடைத்தெறியப்பட்டுவிட்ட 
எங்கள் நினைவுச்சின்னங்கள் 
சுவடின்றி மறைந்த  பாலியங்கள் 
புரியுமோ என்னவோ 
உங்களுக்கு 
புரியுமோ என்னவோ 

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை

https://padhaakai.com/2016/08/07/a-survivor-from-haiti/

Pandit Venkatesh Kumar and Raag Hameer