அத்தியாயம் 6
அடுத்த நாள் காலை தனது அலுவலக நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்த ஹெண்டர்சன் பால்பாய்ண்ட் பேனாவினால் தனது காப்பியை கலக்கிக் கொண்டார். இன்னும் 7 மணி ஆகவில்லை; வால்டர் H லேய்ட்டன் கணித ஆராய்ச்சிக் கட்டிடம் இன்னும் அமைதி கலையாமல் இருந்தது. இவ்வளவு சீக்கிரம் அவர் அலுவலகத்திற்கு இதற்குமுன்னர் வந்ததில்லை; அந்த ஆழ்ந்த, உன்னதமான அமைதி தனக்கு எவ்வளவு பிடித்திருக்கிறது என அவர் வியந்து கொண்டார். இன்னும் சிறிது நேரத்தில், ஷேவ் செய்யாத, நேற்றைய சமையலின் வாசம் இன்னும் வீசும் இளநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் வர ஆரம்பிப்aபார்கள். அடுத்து 8 மணி வகுப்புகளுக்கு பட்டப்படிப்பு மாணவர்கள் வருவார்கள்; .அடுத்து, அலுவலக பணியாளர்கள், மற்றவர்கள்… என கட்டிடம் கொஞ்ச நேரத்தில் தனது வழமையான பரபரப்புக்கும், அவசரத்துக்கும் தாவி விடும். காப்பியை உறிஞ்சியவாறு ஹெண்டர்சன் தனது மேசை மேல் சரிந்திருந்த, தூசித்துகள்கள் மின்னும் கதிர்க்கற்றைகளை கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தார். அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படாவிட்டால், அவரது இந்த அலுவலக அறையை விட்டுவிட வேண்டியிருக்கும் என்பது வருத்தத்தை அளித்தது. மொத்தக் கல்லூரியிலும் அவரது இந்த அறையில் மட்டுமே தனது இயல்போடு, நிம்மதியாக இருந்திருக்கிறார்.
அவரது யூனிக்ஸ் டெஸ்க் டாப்பில் புது அஞ்சல் மின்னியது: அனுப்புனர்: சோக்லோஸ், நேரம்: அதிகாலை – 2.17
அன்புள்ள ஜான் – படிக்க ஆரம்பித்த ஹெண்டர்சன் ஒரு கணம் தயங்கினார், அன்னியோனியமான அந்த விளி அவரைத் தாக்கியது – உனக்கு நன்றி தெரிவிக்க வேண்டி எழுதுகிறேன். மரியாவை மகிழ்ச்சியடைய செய்து விட்டாய்; ஆதலால் என்னையும் மிக்க சந்தோஷத்தில் ஆழ்த்தி விட்டாய். அவள் மனதிலிருந்து பெரும் பாரம் அகன்று விட்டது. ஓர் அற்புதமான குறுநகையுடன் தனித்தமர்ந்து மே மாதத்தில் நடக்கப் போகும் எங்கள் திருமணத்திற்கு செய்ய வேண்டிய காரியங்களை அவள் பட்டியலிட்டுக்கொண்டிருக்கும் காட்சி அரியது. என் வார்த்தைகளில் வடிக்க முடியாதது. நிச்சயம் உனக்கு அழைப்பு வரும் – நீ வருவாய் என நம்புகிறேன்.
J.A.M –இன் ஆசிரியர் சில்கோவ்ஸ்கியின் தேற்றம் குறித்த ‘தவறான புரிதல்‘ திருத்தப்படுவது குறித்து ஒரு விளக்கம் டிசம்பர் மாத இதழில் பிரசுரிக்க ஒத்துக் கொண்டுவிட்டார். இது என்னை வருத்தத்துக்குள்ளாக்குகிறது. பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகளுக்கு தனது Ph.D பட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தி மரியா ஒரு கடிதம் எழுதப் போகிறாள். இறுதியில், இதை என்னால் தடுக்க முடியவில்லை – மிக வருந்துகிறேன்.
நீ பெருங்கருணையுடையவன் என்று மரியா நம்புவதை நான் உன்னிடம் சொல்லித்தான் ஆக வேண்டும். அது உண்மையல்ல என்று நான் அவளிடம் சொன்ன போதிலும். நீ இதைப் புரிந்து கொள்வாய் என்று நம்புகிறேன். ஏனென்றால், அது உண்மையல்ல, அல்லவா? நீ கருணையுடையவன் அல்ல. சமீபத்திய உன்னுடைய பெருந்தன்மை உன்னில் நிலைகொண்ட நற்தன்மையின் சாட்சி என்று மரியா கருதுகிறாள். என்னால் அதற்கு பதிலொன்றும் கூற முடியவில்லை. இருக்கலாம் என்று சொல்ல முடியுமா? தெரியவில்லை.
மேற்கொண்டு எழுத அயர்ச்சியாக இருக்கிறது. நீ செய்தவற்றுக்கு மீண்டும் நன்றி. நீ ஏன் அதைச் செய்தாய் என்று முழுமையாக என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை எனினும் உனக்கு என் நன்றிகள்.
உன் நண்பன்,
மிக்லோஸ்
ஹெண்டர்சன் மீண்டும் ஒருமுறை படித்து விட்டு மின்னஞ்சலை அழித்தார். கணினியை அணைத்தார். நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டார். என்ன செய்தாரோ, என்ன நடக்க அனுமதித்திருக்கிறாரோ – அவற்றைப் பற்றி அவர் நிம்மதி கொள்ளலாம் என்றுதான் முதலில் தோன்றியது. ஆனால், அவர் நிம்மதியாக இல்லை. அவர் செய்தவற்றின் விளைவாக, இறுதியாக, யார் பயனடைவார்கள்? மரியா, நீட்சியாக சோக்லோஸ்.
ஆனால் ஹெண்டர்சன்? எப்போதும் போல், ஏமாற்றப்பட்டு, கீழ் நிலையில், வருத்தத்துடன். துயரம் கலக்காத மகிழ்ச்சியை அதன் பரிசுத்த நிலையில் அடைவது சாத்தியமா? சில சமயம் முடியலாம் என்று தோன்றியதுண்டு என்றாலும், பல நேரங்களில் அது சாத்தியமேயல்ல என்றுதான் ஹெண்டர்சன் உணர்ந்திருக்கிறார். மகிழ்ச்சி என்பது ஒரு ஸீரோ-ஸம் விளையாட்டு; ஒருவர் மகிழ்ச்சிக்கு இன்னொருவர் கட்டாயம் வருத்தப்பட்டே தீர வேண்டும். பல காலமாக, ஹெண்டர்சன் இந்தச் சமன்பாட்டின் தவறான பக்கத்திலிருந்து கொண்டிருக்கிறார்.
மனதை இந்த எண்ணம் நிறைக்க, ஹெண்டர்சன் மேசை அறையிலிருந்து கடித உறையொன்றை எடுத்தார். சோக்லோஸின் அலுவலக விலாசத்தை எழுதி உறைக்குள் மரியாவின் இரு ஊதாநிற உள்ளாடைகளை இட்டு மூடினார்.
வெளியே, கணினியியல் துறை கட்டிடத்திற்கு மேல் சூரியன் எழுந்து விட்டது. இளந்தென்றல் புதிதாக விழுந்திருக்கும் இலைகளினூடாக சலசலத்துக் கொண்டிருந்தது. நான்கு மாணவர்கள் – ஒரே போல் நீல நிற டீ ஷர்ட்டுகளும் காக்கி அரைக்காற்சட்டைகளும் அணிந்துகொண்டு, இலையுதிர் காலத்தின் குளிரையோ, அது கொண்டு வரப்போகும் கல்விகுறித்த கவலைகளோ இன்றி நடந்து சென்று கொண்டிருந்தார்கள். புது வருடம்; புது விரிவுரையாளர்கள்; பணிநீட்டிப்பு விவாதங்கள்; புது வரவுகள்; நீக்கங்கள்; அவர்களின் கவலையற்ற உற்சாகத்தை ஒரு கணம் பொறாமையுடன் பார்த்த ஹெண்டர்சன், மறு கணம் கார் நிறுத்துமிடம் நோக்கி விரைந்தார்.
நகரின் குறுக்காக காரை செலுத்திய ஹெண்டர்சன் ரேடியோவை இயக்கினார் – எந்தவொரு நிலையத்தையும் குறிப்பாக வைத்துக்கொள்ளும் கவனம் இல்லாமல். சோக்லோஸ் பணியாற்றிய கல்லூரியின் கணிதத்துறை அருகே காரை நிறுத்திவிட்டு கட்டிடத்தின் உள்ளே இருந்த பல்கலை வளாக அஞ்சல்பெட்டியை அடைந்தார். மரியாவின் உள்ளாடைகளின் கனமொன்றும் அவ்வளவாக இல்லாத அந்த உறையை அஞ்சல் பெட்டியின் வாயில் நுழைத்தவண்ணம் ஒரு கணம் தயங்கினார். பின் உள்ளே உறையை போட்டுவிட்டு அது பெட்டியின் உள் விழுந்ததை உறுதி செய்து கொண்டார். அனுப்புனர் விலாசம் இல்லை; அஞ்சல் முத்திரை இல்லை; வெறும் பெறுநரின் பெயர் மட்டுமே. சோக்லோஸ் யார் அனுப்பியிருப்பார்கள் என்று சந்தேகிக்கக் கூடும், ஆனாலும் ஒருக்காலும் உறுதியாக கண்டுபிடித்துவிட முடியாது. நல்லது, குழம்பட்டும் என்று எண்ணிக்கொண்டார் ஹெண்டர்சன்.
விரைந்து காரை எடுத்துக்கொண்டு கல்லூரி வளாகத்தை விட்டு நீங்கி, அழுக்குப்படிந்த வீடுகள் நிறைந்த போர்த்துகீசியர் குடியிருப்பை தாண்டி செலுத்திக் கொண்டு போனார். திடீரென்று ஓர் எண்ண உந்துதலில், சருகுகள் பரவிக் கிடந்த, ஆளரவமற்ற ஓர் சந்துக்குள் காரை திருப்பி நிறுத்தினார். ஏதோவொரு தவறு செய்ததுபோல் உறுத்தல்; கழிவிரக்கம் போல் ஏதோவொன்று குடைந்தது. மனதிலிருந்து எடுத்தெறிந்து விட்டு நடந்தார். சலவையகம், வங்கிக்கட்டிடம், மீன் சந்தை…
சந்தின் எதிர்புறம் இருந்தது அந்த தேவாலயம். வண்ணங்கள் பளிச்சிடும் கண்ணாடிசன்னல்களின் கீழ் திறந்த பெரு வாயிற்கதவுகளை நோக்கி அகன்ற படிகள் மேலேறிச் செல்லும் கருங்கல் கட்டிடம். படிகளில் அமர்ந்து புகைத்துக்கொண்டிருந்த வீடற்ற ஒருவனின் அருகே சிறிய அறிவிப்பு – ‘இயேசு காக்கிறார் – சனிக்கிழமை 6 ஞாயிறு 9 1030 1215’.
ஹெண்டர்சன் சந்தைக் கடந்து படிகளில் ஏறி, கனத்த கதவுகளைத் திறந்து உள்ளே நுழைந்தார். தூசியில் நனைந்த ஒளிக்கதிர்கள் உயரத்திலிருந்த சன்னல்களின்வழி வழிந்திறங்கி யாருமற்ற இருக்கை வரிசைகளில் மீது படிந்து கிடந்தன. காற்றில் தூபப் புகையும், ஈரக் கருங்கற்களும் மணத்தன. கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்ட ஹெண்டர்சன், நிமிர்ந்து மேற்கூரையின் அழகிய வடிவமைப்பை வெறித்துப் பார்த்தார். என்ன அழகான இடம்! இதன் வெறுமை, இந்த அமைதி, தோள்களில் ஒரு போர்வையைப் போல் கவியும் வெதுவெதுப்பான அடர்த்தியான இந்தக் காற்று… எங்கோ தொலைவில் ஒரு காரின் அலாரம் அலறுவது சர்ச்சுக்குள் ஒரு குகைக்குள் கேட்பது போல் ஒலித்தது.
கடவுளின் இருப்பை டிடெரோட்டுக்கு ‘நிரூபித்த’ ஆய்லரின் சமன்பாடு ஹெண்டர்சனுக்கு நினைவு வந்தது. முட்டாள்தனம். ஆனால் பாஸ்கலின் வாதம் ஒன்று உண்டு: ஆராயும் அறிவுள்ள மனிதர்கள் கடவுளை நம்பத்தான் வேண்டும். ஏனென்றால் சொர்க்கத்தின் அனுகூலங்கள் நரகத்தின் இடர்களை விட மிக அதிகம். கைகளை கோர்த்தபடி, கீழுதட்டை கடித்தவாறு ஹெண்டர்சன் அமர்ந்திருந்தார். பாஸ்கலுக்கு மட்டும் நிகழ்தகவு கோட்பாடு தெரிந்திருந்தால் ஒருவேளை தனது கடவுள் இருப்பு வாதத்தை நிலைநிறுத்தியிருக்க முடிந்திருக்கலாம். யார் கண்டது, எத்தகைய இழப்பு இதுவென்று.
ஓர் இளம் பாதிரி இருபுற இருக்கைகளியிடையே தந்தநிற மெழுகுவர்த்திகள் இரண்டையேந்திக் கொண்டு நடந்து வருவதைக் கண்டார். பாதிரியின் கண்களின் கவனத்தை ஈர்க்க முயன்றார். ஓர் எண்ணம் – தான், ஜான் ஹெண்டர்சன் – துறவியாகி விட்டால்? ஒரே நேரத்தில் அச்சமும், பரவசமும் மேலெங்கும் பரவ அவரது உடல் நடுங்கியது. யார் விண்ணப்பித்தாலும் ஏற்றுக் கொள்வார்கள் தானே, இல்லை ஏதாவது விதிகள் இருக்குமா? என்னைப் பாருங்கள் – முகம் கவிழ்ந்து மெதுவே நடந்து வந்து கொண்டிருந்த பாதிரியின் முகத்தைப் கூர்ந்து நோக்கியவாறு ஹெண்டர்சன் நினைத்துக் கொண்டார். துறவு பூண்டு, மதத்தையும், நம்பிக்கையையும் சிந்தித்துக்கொண்டு, மன்னிப்பை இறைஞ்சியவாறு தன் நாட்களை கழித்து விடலாம். ஆம். திருச்சபையின் பிரார்த்தனைக் கூட்டத்தின் முன் நின்று தன் தனிமை நிறைந்த நாட்கள் எப்படி அச்சத்துடனே கழிந்தன என்று அவரால் கூற முடியும். என்னைப் பாருங்கள், தயவுசெய்து என்னைப் பாருங்கள், ஹெண்டர்சன் மனதுக்குள் இறைஞ்சினார்.
ஆனால் இளம் பாதிரி நீண்ட அங்கி மென்மையாக சரசரக்க கடந்து சென்றார்.
– நிறைந்தது –