எதற்காக எழுதுகிறேன்?
எழுதுவதின் லௌகீக தேவை இல்லாத என் போன்றோரிடம் எழுத்தின் தேவை பலவாறாக இருக்கலாம்; அவை காலப் போக்கில் மாறவும் செய்யலாம். நான் எழுதத் தொடங்கிய நாட்களில் இருந்து, இதோ இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் இன்று வரை எனக்கான எழுத்தின் தேவையும் மாறியே வருகிறது, என் எழுத்துக்களைப் போலவே.
மூன்று கால கட்டங்கள்; மூன்று விதமான தேவைகள். மூன்றையும் ஆராய்ந்து பார்க்கும்போது நான் எனக்காக மட்டுமே எழுதுகிறேன் எனப் புரிகிறது.
பதின்ம வயதின் இறுதிக்காலத்தில், புறக்கணிப்பும் (அல்லது அவ்வாறு நினைத்துக் கொள்கிற) அதனால் விளைந்த கொதிப்பும், கொந்தளிப்பும், உணர்வெழுச்சியும், மயக்கமும், பருவமும் அதன் தன்வயப்படலும், கற்று கடந்து விடக்கூடிய, கண்முன் தெரிவதாக நம்பிய தூரங்களும், அறிவின் கர்வமும், சகங்களின் அலைக்கழிப்பும், புலனழிவும், அழிந்து உருமாறுதலுமாக இருந்தபோது எழுதவாரம்பித்தேன்.
எழுத்து அப்போதெனக்கு வலியோடு கூடிய போகம் போல் காட்சியளித்தது. என்னிலிருந்து திமிறி விடுபட்டு, நானாக, என்னில் பகுதியாக, மூச்சுப்பரிதலாக ஆசுவாசம் தந்தது எழுத்து. சூனியங்களில் நிலைத்து, போதை போல் தொலைந்து நின்ற காலங்களில் மீண்டு வரும் வழியாகவும் எழுத்தே இருந்தது.
ஏதும் எதிர்பாராமல் எதுவும் அணிந்து கொள்ளாமல் நானாக இருக்கிற கட்டற்ற விடுதலை உணர்வே எழுத்தையும் என்னையும் பிணைத்திருந்தது.
வேண்டியன தயக்கமின்றி உரைத்தலும், கசடின்றி புனைவின்றி, சிலசமயம் சமநிலை பிறழ்ந்த, எளிதில் கோஷங்கள் போல் தோன்றிவிடக்கூடிய, ஆரவாரமான வெளிப்பாடு அன்றென் எழுத்தின் அடையாளம். அதைத் தரவேண்டிய தேவை எழுத்துக்கு இருந்தது.
காதலும் சகமும் பற்பல உயர்வுகளிலும் தாழ்வுகளிலும் என்னைக் கடத்திச் சென்ற இரண்டாவது காலகட்டத்தில் எழுத்தின் தேவை எப்படியிருந்தது?
ஓர் அடைக்கலமாக, வலியை கசந்து உமிழ்ந்தாலும் சகித்துக்கொள்கிற ஒரு தாதியாக, இரவுகளின் ஆயிரக்கணக்கான கண்ணீர்த்துளிகளை உள்ளிளுத்துக்கொள்கிற வெம்மையான அரவணைப்பாக எழுத்து மாறி விட்டிருந்தது.
பார்க்குமெவற்றிலும் வாழ்வின் உணர்வுகளை சித்தரித்து வடித்துவிடக் கூடிய ஒரு நிரப்பியாக எழுத்து உருமாறியிருந்தது.
இன்றோ, ஆயிரம் உறவுகள் சூழவிருந்தாலும், உள்ளளவில் தனிமை உணர்வதும், அத்தனிமையின் நிறைவில் மகிழ்வதுமான இந்நிலையில், எழுத்தென்பது என்னை எனக்கு பிரதிபலித்துக் கொள்ளும் ஓர் ஆடியாக மாறியிருப்பதைக் காண்கிறேன்.
சூனிய தரிசனங்கள், உறவுச் சிக்கல்கள், மரண பயங்கள் ஆகியவற்றின் உறுத்தல்கள் மெதுமெதுவே மட்டுப்பட்டு, மனிதம் மட்டுமேயான கருதுகோள் எதிலும் தோன்றும்போது, மனிதத்தின் ஒற்றைத்துளியான என்னை இம்மனிதத்தில் எப்படி பொருத்திப் பார்த்துக் கொள்வது என்று (இன்னும் கூட) சுய பரிசோதனை செய்துகொள்கிற ஓர் ஆடியாக எழுத்தின் தேவை இன்றிருக்கிறது.
நாளை, உயிரின் மதுவாக, கடைவழியின் இறுதிச்சுவையாக எழுத்து என்னுடன் பயணிக்கும் என்ற நம்பிக்கையில் இன்னும் எழுதுகிறேன். எழுதுவேன்.