Thursday, March 17, 2016

அனைத்தும் உடலில் ஆரம்பித்து உடலில் முடிந்து விடுகிறது

யாரும் சீண்டாத, முதுமை குடியேறி, காலத்தால் நரை கண்டு விட்ட ஒரு ரயில் நிலையம்; 

துணை யார், நாள் பொழுது எப்படிக் கழியும், அதன் இருப்பில் வரும் போகும் வரும் போகும் வெயிலும், பனியும், கோடையும், கொடும் மழையும் ஆயினும், எவ்வித சலனமுமில்லாமல் வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் அதன்  வெளியுருவை எங்ஙனம் காட்சிப்படுத்துவது என எண்ணினேன்.

நடைமேடையும், நிறம் மங்கிய சருகுக் கூட்டமும், வரியோடிய விலா எலும்புகள் தெரியும் கட்டிடமும் துலங்கி கவிதை நகர்ந்தது. 

கிளர்ச்சி தரும் வருகை; அது தரும் குற்றவுணர்ச்சி என்ற படிமங்கள் தோன்றி அமைந்ததும், மற்ற வரிகள் அடுத்தடுத்து அமைந்து கொண்டன. 

ரயிலின் சலிப்பிலும், நிலையத்தின் குற்றவுணர்வு சூழ்ந்த கிளர்ச்சியிலும், அதை நினைத்துத் தனித்திருக்கும் இரவுகளிலும் - ஒரு முதிய மனித வாழ்வின் பொருந்தாக் காமத்தையும், அந்திமத்தை நோக்கி நகரும் ஒரு வழிப் பயணத்திலும் பகிரும் சகம் தேடும் இயல்பையும் காண்பதாய்த் தோன்றியது.

அனைத்தும் உடலில் ஆரம்பித்து உடலில் முடிந்து விடுகிறது  என்றொரு வரியும் இறுதியில் தோன்றியது.

பதாகை பதிவு

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் பதிவு:

http://padhaakai.com/2016/03/09/saravanan-abi-note/

Monday, March 7, 2016

யாரும் இறங்கா நிலையம்

கூரை நடைபாதை 
கற்குவியல்கள் 
இருப்புப் பாதை என எங்கும் 
உதிர்ந்த சருகுகள் 

நிறம் மங்கிய 
நீர்வண்ண ஓவியம் 
போலொரு 
களைத்த பொலிவு 

இற்றது போல்வன 
எனினும் 
இறாது நிற்கும் 
நிலையத்தின் 
மரவரிகள் 
ஒரு நூறு 
நினைவுகளின் மௌன சாட்சிகள் 

அவ்வப்போது 
பாதை தேய்த்து 
சலிப்புடன் பெருமூச்செறிந்து 
வந்து நின்று 

பொருமலுடன் 
நீர் சிந்தி 
வேண்டா வெறுப்பாக 
கிளம்பிச் செல்லும் 
புகையற்ற வண்டி தரும் 
கிளர்ச்சியின் 
குற்றவுணர்வுடன் 
இரவில் தனித்திருக்கும் 

பகிர்வுகளில் 
பேதமேதும் 
பாராட்டுவதில்லை 
இருப்புப் பாதையோரம் 
இன்று முளைத்த 
எருக்கம்செடிக்கும் 
நடைமேடையின் 
நடுவீற்றிருக்கும் 
முரட்டு அரசுக்குமிடையே  

செல்லமாய் வருடி  
செந்நிறப் புழுதியை 
வீசியடித்து கழுவும்  
எத்தனையோ மழைக்காலங்களில் 
ஒன்றைக் கடந்து செல்ல 
இன்று காத்திருக்கும் 
உடலம்

பதாகை இணைய இதழில்...

பதாகை இணைய இதழில் வெளிவந்திருக்கும் கவிதை:

http://padhaakai.com/2016/03/06/nobodys-station-saravanan-abi/

Pandit Venkatesh Kumar and Raag Hameer