Friday, February 5, 2016

இருவர்

கருவறையின் இருட்டில் 
குறைபட்ட கையிறக்கி 
குருட்டு ஈயை 
காப்பாற்றி மகிழ்ந்தார் 
தேவன் 

பல்லிக்கு 
படியளப்பதெப்படி என 
கவலையில் மூழ்கினாள் 
தேவி 

திரிபுரமெரித்த தேவன்மாரும் 
பழத்துக்கு பிள்ளையை 
பரிதவிக்கவிட்ட தேவியரும் 
நிறைந்த இப்பூவுலகில் 
இப்படியும் இருவர் 

Friday, January 29, 2016

எவ்வித இழிவில் நாமிருக்க நேரலாம், நாளையோ பிறகோ?

பதாகை  இணைய இதழில் வெளிவந்திருக்கும் 'காலமருள்' கவிதைக்கான குறிப்பு 
http://padhaakai.com/2016/01/25/sarvanan-abhi-note/
காலமருள் குறித்து சரவணன் அபி-
அன்றாட வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளில் மகிழ்வதும் வருந்துவதும் வழமையாகிப் போன ஒரு நாளில் ஒரு நிலைகுலைவின் பின்புலத்தை ஆராய்ந்து கொண்டிருந்தபோது தோன்றியது, இயற்கையின் எந்தவொரு நிகழ்வும் மற்றொன்றின் மேல் ஒரு நீடித்த பாதிப்பை ஏற்படுத்துவதில்லை; புலரியும், அந்தியும் போலவே புயலும், வெள்ளமும் கடந்து போகின்றன.
அது போலவே ரசனையில் திளைக்கும் சில வேளைகளில் தோன்றும்- எவ்வித இழிவில் நாமிருக்க நேரலாம், நாளையோ பிறகோ? அப்போது மனதின் சமநிலை எப்படியிருக்கும்? இந்தத் தருணத்து ரசனையை இழிவின் கணத்தில் நினைவு கூர முடியுமா?
முடியக்கூடும் சமநிலை வாய்த்து விடும்போது, வாழ்வின் சமன்பாடு பிடிபட்டுவிடும் எனத் தோன்றியது.
இந்த எண்ணம் தோன்றிய பிறகு, அனைத்திலும் ஒரு மேன்மையை காண முடியும் எனவும் பட்டது.
ஜெயகாந்தனின் சிறுகதையொன்றில் குஷ்டரோகி ஒருவன் பிச்சையெடுத்த உணவை உண்டுவிட்டு குறைபட்ட கையால் பீடி பிடித்துக் கொண்டு தனக்குத்தானே அனைத்தையும் ரசித்துக் கொள்வது போல் வரும். காற்றைச் சுகிப்பான்; நிலவை ரசிப்பான்; எச்சில் கலந்த பிச்சைச் சோற்றையும் பாராட்டிக் கொள்வான்.
சரவணன் அபியின் கவிதை இங்கு – காலமருள்

காலமருள்

இலைகள் விழுந்து சருகாவதிலும் 
சருகாகி காற்றில் வீழ்வதிலும் 
நியதிகள் எங்கும் மீறப்படாதபோது 

கதிர்க்கற்றைகள் நிறம் தேய்ந்து
சுடர்  அடங்கி அணைந்தாலும் 
ஒற்றை விளக்கின் திரியிழுத்து 
இருளின் கருமையில்  இணைந்தாலும் 
புலரியின் பொலிவு குறைபடாதபோது 

சொற்களின் குறைவில் பிறந்தாலும்  
மிகுசொல் சேர்ந்து நிறைந்தாலும் 
கவிகளின் வீச்சு கறைபடாதபோது 

அலை வீசி ஆர்ப்பரித்து
கரை தாண்டி சென்றாலும் 
கால்தடவி கலம்தாங்கி 
கட்டுக்குள் நின்றாலும் 
ஆழியின் அற்புதம் புரிபடாதபோது

அனைத்தும் ருசிக்க
அனைத்தும் புரிய
அனைத்திலும் இழுபட
அனைத்திலும் இழிபட

நான் 
காத்திருப்பதில் தவறென்ன?

பதாகை-யில் கவிதை

பதாகை இணைய இதழில் வெளிவந்திருக்கும் கவிதை - காலமருள்

http://padhaakai.com/2016/01/24/kaala-marul/


Wednesday, January 20, 2016

அற்றது கேட்கின்



குறுகித் திணிந்த
முடியா துவாரம்

பத்திரம் தேடி
நுழைய வேண்டுமொரு யோனி

ஓயத் துரத்தும்
அருவங்கள்

விழுந்தும் தீரா
இருளடர்ந்த ஆழம் 

கால்கள் தளைத்தும்
படுக்கை நனைக்கும் நனவு 

சளைத்து அறும்
உடலவயங்கள்

தொடவியலா முலைகள்
விழித்து எழினும் அதே

Pandit Venkatesh Kumar and Raag Hameer