Sunday, May 15, 2011

உயிர்த்தவம்

உன் நினைவுகளை
என் மனபீடத்தில்
வேள்வித்தீயாய்
வளர்த்தேன்

கடைசியில்தான் தெரிந்தது
நினைவுகள் மட்டுமல்லாது
நானுமே
ஆகுதியாய் ஆகிவிட்டேனென்று

ஆயினும்
இத்தனைத் தவத்திற்குப் பின்னும்
நீயேன்
இன்னுமுன்
அவிர்ப்பாகத்தை
அடையவரவில்லை காதலி?

- 04/09/1985


மென்மை

நான்
அவளுக்காக காத்திருக்கிறேன்
நேரம்
நிசப்தக் கத்தியைக் கொண்டு
என்னை அறுக்கிறது ...

அதோ, பூக்கள் மலரும்
சப்தம் கேட்கிறது
வந்தது
என் காதலி

- 07/08/1985

நண்பனின் கடிதங்கள்

ரமேஷ் சண்முகம்
02-03-88

நண்பா,

              நீ
              நின் மனிதம்
              உன் கவிதைகள்
              உன் கவித்துவம்
              உன் நேசம்
             உன் நியாயம்
             ....
             ....

                     இவை என்னை பொறாமைப்பட தூண்டுவன. பாராட்டக் கட்டளையிடுகின்றன. 

                     உனக்கு ஒரு முத்தம்.

                     உன் பேனாவுக்கு....
                     ....கோடி முத்தங்கள்.

                                                                         அன்புடன்,
                                                                          ரமேஷ்.

விந்தை

இருளில் பார்க்கவியலோதோ

கண் சன்னலின்
இமைக்கதவுகளை
இழுத்து மூடி
இருட்டுப்படுத்தினாலும்
உன் முகம்தான்
பிரகாசமாய் தெரிகிறது
உன் நினைவே
அனலாய் எரிகிறது

- 10/02/1986

அறிமுகம்

உன்னை
சிந்திக்கவும்
சந்திக்கவுமே
வார்த்தைகளைத் தேடி
நான் களைத்த
போதுதான் -

உன்னால்
சிந்தனைக் கருவுற்று
வார்த்தைகளைப் பிரசவித்த
களைப்பில்
இருந்தபோதுதான் -

நீ
மௌனமொழியை
அறிமுகம் செய்தாய்.

12/02/1986


கார்காலம்

 இலைச்சருகுகளில் காற்று
காதல் மொழி பேசும்
கார்காலம் அது.

என் கையிணைந்த அவள் கைகள்
ஒரு காவியசுகம் பிரிவதை 
தடுப்பதைப் போலெனை
அணைக்கின்றன

என் கண்களுக்குள் அவள் தேடல்
இதயச்சுவடிகளை வருடி
இசையாய் இதழ்களை நிறைக்கிறது

காலத்தை
நினைவுகளைப் போல்
தள்ளிவைத்து விட்டோம்

ஊமை மனதாசைகள்
உள்ளுக்குள் இடம்மாறுகின்றன
கரைகள் காலம்கடந்தே தோன்றுகின்றன

அதிகாலைப் பனியின் வெண்மையில்
முகம் பார்க்கும் இயற்கையே
எங்களுடை

இசைக்கனலின் கதகதப்பில்
கேட்காத 
காலத்தின் குளிர்மூச்சுகள்

அவள் கன்னக்கதுப்பில்
நான் வரைந்த கோலங்கள்
எந்த மார்கழிக்கும் சொந்தமில்லை

நாங்கள் நிறைந்து விட்டோம்
வெள்ளம் நுரைத்து படர்ந்தது
படர்ந்த அலைகள்
காதல் காதல் காதல்
என்று கரையை
ஆதுரத்துடன் முத்தமிட்டன

ஒரு முத்துக்காக
இருவரும் மூழ்கினோம்

22/05/1988

உயிர்க்கலைஞன்

ராகங்கள் நாவடக்கி 
சேவகம் செய்வதை பார்க்கிறேன்
தனிமனிதன் இசையின்
தரணி ஆள்வதை காண்கையில் 
இவன் எந்த
பரணியில் பிறந்திருப்பான் என
எண்ணத் தோன்றுகிறது

எவருக்கும் இளையாதவனாய்
இசைக்கு மட்டும் வளைபவனாய்
வந்துதித்த தேசத்தில்
வாழ்கின்ற பேறு பெற்ற
எம்மையும்
இசை வந்து தீண்டட்டும்
கருவிகளை இசை
அருவிகளாய் ஆக்குபவனும்
எம் நாத தேவனுமாகிய
இளையராஜா
நீடூழி வாழ்க
நல்லிசை தருக. 

- 23/07/86

Pandit Venkatesh Kumar and Raag Hameer