பாரத் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து கொண்டிருந்தேன். முன்பே பதிந்திருப்பது போல, கல்லூரியின் இசைக்குழுவில் நான் தான் தபலா, த்ரிபல் காங்கோஸ் வாசிப்பவன்.
மிக கடுமையாக குழுவும் நானும் பயிற்சி செய்து (அதி முக்கிய காரணம், கல்லூரி முதல்வர் எங்களுக்கெல்லாம் அளித்திருந்த சிறப்பு சலுகைகள்) முதல் வருடம் தயாராகி, கல்லூரிக்குள்ளேயே வாசித்து பெயர் வாங்கி (அதுவும் சும்மா வந்து விடவில்லை, நியூ இயர் ஈவ் என்ற பெயரில் மூன்றரை மணி வாசித்து செத்து சுண்ணாம்பாகி விட்டோம் - யோசித்து பாருங்கள், கமல் நடித்து , ராஜா இசைஅமைத்து, மனோ பாடிய, கடினமான, நில்லாத தாளம் கொண்ட 'வேதாளம் வந்திருக்குது' பாடலை ஒன்ஸ் மோர் கேட்டே (நாலு தடவை) கொன்று விட்டார்கள் நண்பர் நண்பிகள்), அடுத்த வருடம் கூட்டை விட்டு ஒன்றிரண்டு அடியெடுத்து அக்கம் பக்கத்து கிளைகளுக்கு தாவிப் பழகும் குஞ்சுகள் போல், கல்லூரி அருகிருந்த மற்ற கல்லூரி கலை விழா லைட் மியூசிக் போட்டிகளுக்கு செல்லவாரம்பித்த சமயம்.
சில பல போட்டிகளில் இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு, சில சமயம் MCC யோ, லயோலாவோ வராத சில மொக்கை போட்டிகளில் முதல் பரிசு அடித்து நாளொரு மேடையும், பொழுதொரு பரிசுமாக வளர்ந்து கொண்டிருந்தோம். அப்போதுதான் சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரி கலை விழாவின் மெல்லிசை போட்டிக்கு அழைக்கப்பட்டோம்.
அப்பொழுதான் மூர் மார்கட் இடிக்கப்பட்டு, இப்பொழுதிருக்கும் புது சென்ட்ரல் புறநகர் போக்குவரத்து ரயில் நிலையம் கட்டும் பணிகள் அந்த இடத்தில் துவங்கியிருந்தது. சுற்றிலும் சாப்பாட்டு கடைகள், வைன் ஷாப்கள் என களைகட்டியிருக்கும் இடத்தை தாண்டிதான் பார்க் ஸ்டேஷனிலிருந்து கால்நடை மருத்துவ கல்லூரிக்கு சென்றோம். எடுக்கப்பட்ட லாட்டில், பாரத் கல்லூரி ஆறாவது இடமாகத்தான் மேடைக்கு அழைக்கப்படும் என்ற அறிவிப்புக்குப் பிறகு (ஒரு குழுவுக்கு கருவிகள் செட் செய்ய ஐந்து நிமிடம், மூன்று பாடல்கள் வாசிக்க பதினைந்து நிமிடங்கள் என மொத்தம் இருபது நிமிடங்கள்) இன்னும் குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஆகும் போலிருந்தது.
அரங்கின் வெளியே அமர்ந்து மீண்டும் பாடவிருந்த 1. சிங்கார பெண்ணொருத்தி 2. மன்றம் வந்த தென்றலுக்கு மற்றும் 3. பொன் மானை தேடுதே என்ற பாடல்களின் இடையிசை மற்றும் தாளங்கள், ஸ்டார்ட் - ஸ்டாப் டைமிங் போன்றவற்றை சரிபார்த்து கொண்டிருந்தோம். அப்போதுதான், குழுவின் கீபோர்ட் வாசிப்பாளன் அருண் நினைவூட்டினான், "மச்சிஸ், வர்ற வழியில பாத்தோமே வைன் ஷாப், போயி ஒரு பியர் வுட்டுட்டு வந்து ஸ்டேஜ் ஏறினோம்னா, கலக்குண்டா" என்று.
சூப்பர் ஐடியா என்று உடனே, பியர் அடிக்காத ட்ரம்ஸ் வனமாலி, வயலின் பிரபாகர் ஆகியோரை விட்டுவிட்டு (நல்ல வேலை, எங்கள் கோச் எலெக்ட்ரிகல் இன்ஜினியரிங் லெக்சரர் சுரேஷ் பாஸ்கர் அன்று வரவில்லை) உடனடியாக கிளம்பி விட்டோம் ஒரு ஆறு பேர். அப்போது மதியம் மூன்றரை மணியிருக்கும்.
போய் பாட்டில்களை வாங்கி கொண்டு பார்த்தால் தான் தெரிந்தது, அமர்ந்து குடிப்பதற்கு ஒரு இடமோ கடையோ கூட இல்லை (இந்தக் காலம் போல் அரசுகள் டாஸ்மாக் கொண்டு வராத காலம்). சரிதான், மூர் மார்க்கட் உடைக்கப்பட்டு கிடந்த இடம்தான் தோது என்று, சுற்றிலும் கம்பி வேலி போட்டிருந்த காலி மனைக்குள் குனிந்து வளைந்து நுழைந்தாகி விட்டது. பல்லாலேயே கடித்து மூடி கழற்றி சியர்ஸ் சொல்லி சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். எதிரே பிசியான ரோடு. பக்கத்தில் சென்ட்ரல் ஸ்டேஷன். நடுவே கிடந்த காலி மைதானத்தில் ஆறு பேர் நட்ட நடுவே நின்று கொண்டு மட்ட மதியானத்தில் பியர் அருந்திக் கொண்டிருந்தோம்.
திடீரென்று லீட் கிடார் வினு கத்தினான், "மச்சி, போலிஸ்டா". அவ்வளவுதான், சுற்றி பார்த்தால் ஒரு நான்கைந்து காவலர்கள் லத்திகளை சுழற்றி கொண்டு நாலா பக்கத்திலிருந்தும் ஓடி வருகிறார்கள். பாட்டில்களை போட்டு விட்டு தாவி குதித்து எந்த பக்கம் ஓடினாலும் அங்கிருந்து ஒரு PC வர, செத்தோம் இன்னைக்கு என்ற படி, "ஓடு மச்சி ஓடு, மாட்டிக்காத" என்று ஒரே கூக்குரல்.
குனிந்து வளைந்து பதவிசாக நுழைந்த கம்பி வேலிக்குமேல் ஒரே ஜம்ப். ரோட்டில் விழுந்து, வாரி சுருட்டி எழுந்து, ரிப்பன் பில்டிங் பக்கத்தில் இருக்கும் மெயின் ரோடுக்குள் நுழைந்து ஆறு பேரும் தாறு மாறாக ஓடினோம். சத்தியமாக சொல்கிறேன், உண்மையிலேயே அந்தக் காவலர்கள் மாசக் கடைசிக் கஷ்டத்தில் இருந்தார்களா, அல்லது கடமை தவறாத உத்தமர்களா தெரியாது, அவர்களும் அப்படித் தாவி குதித்து துரத்தினார்கள். யாரவது பார்த்திருந்தால், ஏதோ பயங்கர கொலை குற்றம் செய்து விட்டு ஓடுகிற கூட்டத்தை தான் இப்படி துரத்துகிறார்கள் போலிருக்கிறது என்று நினைக்கும் வண்ணம் ஒரு ஆவேசத் துரத்தல்.
கால்நடை கல்லூரிக்கு கால் வழி மிச்சமிருக்கும்போது, பக்கத்திலிருந்த டீக்கடைக்குள் நுழைந்து மூச்சு வாங்கி லேசாக வெளியே எட்டிப் பார்த்தால் யாரும் துரத்தி வருகிற மாதிரி தெரியவில்லை. போன ஆறு பேரில் நான்கு பேர் தான் கடைக்குள் இருந்தோம். போச்சு, ரெண்டு பேர் மாட்டிக்கிட்டாங்க போல, இன்னிக்கு காம்பெடிஷன் காலி என்றபடி நொந்தவாறு கலூரிக்கு திரும்பினோம்.
மிச்சமிருந்த டீமோடு உட்கார்ந்திருந்தார்கள் அவ்விருவரும். கொஞ்ச நேரம் மூச்சு வாங்கி, தண்ணீர் குடித்து, டி குடித்து, சிகரட் புகைத்த பிறகு சிரித்த சிரிப்பிருக்கிறதே, இப்போதும் மறக்க முடியாத தருணம்.
வேர்த்து விறுவிறுத்து, சட்டை அங்கங்கே கிழிந்து அழுக்காக, அன்று வாசித்த அற்புதப் பாடல்கள் எங்களுக்கு முதல் பரிசை வென்று தந்தன.