Friday, January 22, 2010

நித்தியச் சிதறல்

நாமனைவரும்
அன்றாடம் பார்க்கும்
ஒரு முகம்
எப்படியும்
பிறந்தததிலிருந்து
பார்த்திருக்கும்
லட்சக்கணக்கான முகங்களுக்கும்
அதற்கும் வேறுபாடு
ஏதொன்றும் காண்பதற்கில்லை
பாதி செருகிய கண்களோ
அலைபாய்ந்து தோள் புரளும்
கூந்தலோ இல்லை
அபாய ஹஸ்தமும்
சின்முத்திரைகளும் இல்லை
அங்கிங்கு
அலைந்து காணும்
துறவியரின் ஞானியரின்
அடையாளமேதுமில்லை
எதிரமர்ந்திருந்த முகத்தில்
உடலில்
காணும்போதே
கடல் நிலைக்கும்
அமைதி வளரக் கண்டேன்
வண்ண வண்ணக் கொடிகள்
காற்றில் கிழிபட்டு
திருவிழா இரைச்சலில்
நாலாபக்கமும்
பதறிப் பறப்பதுபோல்
துடித்துத் துள்ளும்
என் பிரக்ஞையின்
நித்தியத்தை
நிலைநிறுத்திக் கொண்டு

Sunday, January 17, 2010

Letters to Jeyamohan - 8

அன்புள்ள ஜெயமோகன்,

பெண்மையில் ஆண்மையையும், ஆண்மையில் பெண்மையையும் பிரித்துணரும் வல்லமை அனைவருக்கும் வாய்ப்பதில்லை. இயற்கையின் இவ்விரு சக்திகளுக்கிடையே நாம் அனுதினமும், நமது வெளிப்பாடுகளையும், புரிதல்களையும், அனுசரணைகளையும் மாறுபடுத்த வேண்டியிருக்கிறது.

“தன் ஒவ்வொரு துளி இருபபலும் பிறிதொன்றுக்காக காத்திருக்க, தன்னை வந்தடையும் ஒரு சிறு தொடுகையில் பூரித்து கண்விழித்தெழ, தன்னுள் விழும் ஒரு துளி உயிர்த்தூண்டலை தன் மொத்த ஆன்மாவையும் உணவாகக் கொடுத்து உருவாக்கி எடுக்க பெண்மையாலேயே முடியும். உடலிலும் உள்ளத்திலும் உறுதியாகிவிட்ட ஆண்மையின் இறுக்கத்தை கரைத்து பெண்மையாகி நெகிழ எத்தனை தவம் எத்தனை கண்ணீர் தேவைப்பட்டிருக்கும்!”

மொத்த கட்டுரையின் சாரமாக நான் கருதும் இவ்வரிகள் தான் எத்துணை சத்தியமானவை! எத்துணை நெகிழ்ச்சியானவை!

சரவணன்

Letters to Jeyamohan - 7

அன்புள்ள ஜெயமோகன்,

எவ்வித எதிர்பார்ப்புகளும் அற்ற நிலையை மட்டுமே இயற்கையின் வல்லமையின் முன் கைக்கொள்ள தோன்றுகிறது. அனைத்தையும் கடந்த, அனைத்தையும் தோற்றுவித்த பரிபூரணத்தின் முன் என்னை ஆட்கொள், அருள் செய் என்று இறைஞ்சுவது கூட அவசியமா என்று தோன்றுகிறது. அப்படிக் கேட்பதே கூட அகண்ட சக்தியிலிருந்து என்னைப் பிரித்து உணர்ந்து விடுவதாகிவிடாதா?

விரிந்து கிடக்கும் பள்ளத் தாக்குகளிலும், காடுகளிலும், புரண்டோடும் நதிகளிலும், மலைகளிலும், கடல்களிலும், பாலைகளின் முன்னும் தன்னை கரைத்துக் கொள்வது தவிர வேறெது சிறந்தது? என்னைப் படைத்து வாழ்விக்கும், என் சந்ததியை வாழ்விக்கப் போகும் இப்ப்ரபஞ்சத்தினிடம் கேட்பதற்கு எதுவுமில்லை, தன்னில் என்னை ஈர்த்துக் கொள்ளும் கணங்களை நீட்டித்து தரும்படி கேட்பதைத் தவிர.

சில வருடங்களுக்கு முன், கேரளாவில் காலடிக்கு சென்றிருந்தேன். அப்போது பெரியாற்றின் கரையில் பெற்ற அந்த மனவெழுச்சியின் பதிவை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றி ஜெயமோகன்,

சரவணன்
சிங்கப்பூர்

இந்தக் கணம்

கொதிக்கும் தணல்
கடல் எழுந்து
வெண்ணிற உக்கிரம்
தருமந்த பகல்
விடும் மூச்சின்
ஆவி சூழ்ந்து
நாசி இறுக்கும்
நடந்து சலித்த
கால்கள் தேடும்
நிழலோ மஞ்சள்
மேனி எங்கும்
புதிதாய் முளைக்கும்
வியர்வை ஊற்றுகள்
நெற்றி மேடிறங்கி
புருவம் வழிந்து
கண்களில் கரைந்து
திரையிடும் பார்வை
மறையும் தருணம்
தோன்றி விடும்
அடுத்த அடி
விடுக்கும் மூச்சு
அல்ல என்
இறுதி மூச்சு
இருக்கலாம் ஒருவேளை
இருப்பினும் இருப்பினும்
தவழ்ந்தேனும் நகரும்
எனதிந்த அடி
ஒழுகியேனும் நழுவும்
விடுமிந்த மூச்சு

Saturday, January 9, 2010

நிகழ்வு

தலை சாய்க்கவில்லை
இமை செருக இயலவில்லை
உடலறுக்கும்
கவசமன்றி இருப்பதில்லை
கைகளினின்றும்
வாளையும் கேடயத்தையும்
கீழிறக்க இயலுவதில்லை
எப்பொழுதோ
நிகழப் போகுமொன்றுக்காக
எப்பொழுதும்
ஆயத்தமாய் இருப்பது
அலுத்து விட்டது

சேறு

புதுக்கிணற்றில்
பொங்குகிறது நீருற்று
குடிக்க
குளிக்க
வயலுக்கு பாய்ச்ச
தோட்டம் போட
தடையில்லை இனிமேல்
மிக்க
வசதிதான்
தற்கொலை செய்யவும்

Pandit Venkatesh Kumar and Raag Hameer