Showing posts with label Saravanan Kavithaigal. Show all posts
Showing posts with label Saravanan Kavithaigal. Show all posts

Wednesday, November 4, 2015

அற்றது

நதி நிறம் மாறி 

கால்களுக்காக காத்திருக்கும்
வழுக்கும் பின்னிரவு

நீரின் அடுக்குகளில்
மெல்லிய அசைவுகளூடே
நெளியும் அரவத்தின்
அரவம்

இசை வற்றிய காற்று
அதிராத இலைகளில்
வழிந்து இறங்கி
நீர்ப்பதற்கு முன்
மயங்கி நிற்கும்
பாதத்தின் அழுத்தத்துடன்
பேசிப் பேசி மறையும்
புல்லிதழ்களின் நுனிகள்
எங்கோ ஒரு ஊரின் 
கேட்டு இல்லாமலாகி கேட்கும்
பாடல் 
இங்கு என்ன இந்த நேரம் 
என்று கேட்டால்
பதில் மட்டும் இல்லை என்னிடம்

பதாகை மின்னிதழ்

பதாகை மின்னிதழ்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் 'ஒற்றைப் பூ'

http://padhaakai.com/2015/11/04/flower/

Monday, October 26, 2015

நானும் நானும்

உணர்வின் வெளிப்பாடு 
இயலாமல் ஆகிவிட்டவன் 
சுயம் என்னவாகும் 

உணர்தல் இயலும் அதை 
உரைத்தல் இயலாதான  இது 
சுயமற்றவொரு சடப்பொருள் என 
சூழ்ந்து நின்று விவாதிப்பதை நான் 
விழியசைவின்றி கண்டும் 
உடல் நகர்வின்றி கேட்டும் 
கொண்டிருப்பதை 
எப்படி உணர்த்துவேன் 

நினைவுக் கோளங்களில் 
பளிச்சிடும் 
வெளிச்சத் துணுக்குகளில் 
உங்களைப் போல் நானும் 
அவ்வப்போது
விதிக்கப்பட்டவோர் ஒழுங்குடன் 
நடந்து கொள்வதாக 
நீங்கள் மகிழ்வது புரிகிறது 

எனினும் 
எனக்கும் உங்களுக்கும் 
என்ன வேறுபாடு 
என்னை உங்களைப் போலாக்கும்
தவிப்பெதற்கு

வலிகளில் எது பெரியது 
என்றுதான் 
நீங்களெல்லாம் பேசியும் 
நான் பேசாமலும் 
ஆராய்ந்து கொண்டிருக்கிறோம் 

விட்டுவிடுங்கள் 
நானும் நீயும் ஊடாடுவதின் மூலம் 
நாமும் அவர்களும் 
ஒன்றெனக் காட்ட முயலும் 
இந்தச் சமன்பாடு 
எனக்குப் பிடிக்கவில்லை

பதாகை மின் இதழ்

பதாகை மின் இதழில் வெளி வந்திருக்கும் கவிதை:

http://padhaakai.com/2015/10/25/i/

Monday, October 12, 2015

பதாகை மின்னிதழ்

பதாகை மின்னிதழில் வெளியாகியிருக்கும் கவிதை - 'இருண்மை'  

http://padhaakai.com/2015/10/11/irunmai/




இருண்மை


கேட்கப்படாத கேள்வியொன்று
நெய் குறையும் தீபத்தின்
சுடர் போல்
வளி கொண்டு அணையலாம்
ஆயினும்
இன்னும் கேட்கப்படாத கேள்வியின்
ஆன்மா
அங்கேயேதான் உறைகிறது
பிறிதொருகணம்
எனவொன்றில்லை
இறவாத அக்கேள்வியுடன்
தனித்து
அச்சுடர் நோக்கி
அமர்ந்திருப்பதில்
இடரொன்றும் இல்லை
அறிந்தது கொண்டு
அறிந்ததை அளத்தல்
இல்லாதது கொண்டு
இருப்பதை உணர்தல் போலும்
சுடரின் நுனி
துடித்தல் போலன்றி
தவித்தல்
எனவுணர்வதிலும்
இல்லை இல்லை
எனுமொரு நிலை
இல்லை இல்லை
கரைதலென்பதென்ன
இல்லாமற் போவதா
இன்னொன்றாய் இருப்பதா
வெற்றிடம் முழுதும்
நிறைந்து பெருகி
எனவொன்றில்லாத
பிறிதொருகணத்தில்
வழிந்தோடி வெற்றிடமாகி
இன்மையும் இருப்பும்
கரைதலென்பதென்ன
இல்லாமற் போவதா
இன்னொன்றாய் இருப்பதா
சுடரணைந்த இருளுக்குள்
தனித்தவொரு கேள்வியும்
சற்றுமுன்
வேறொன்றாய்
இருந்த ஒளியும்

Thursday, October 8, 2015

இன்மையின் எண்

றந்து விட்ட நண்பனின்  
கைபேசி எண்ணை 
என்ன செய்வது 

அழைப்பே வராமல் 
ஆயிரம் எண்கள் 
இருப்பினும் 
அழித்தாக வேண்டிய கட்டாயம் 
வேறெந்த எண்ணுக்கும்
இல்லையே  

கைபேசித் திரையில் 
அடுக்கடுக்காக நகரும் 
பெயர்களில் 
நண்பனின் பெயரும் 
படமும் எண்ணும் 
துணுக்குறாமல் 
கடந்து செல்ல முடியவில்லை 

நானழைக்க முடியாமலும் 
அவனழைப்பை எதிர்நோக்க 
இயலாமலும் 
துயருறும் இந்நிலையை 
நீங்களெப்படி 
எதிர்கொள்வீர்கள் 

அழித்துத்தான் ஆகவேண்டுமா 
அந்த எண்ணை
 
இருந்தால்தானென்ன 
அடிக்கடி 
இருப்பின் திடுக்கிடல் 
தரும் வலியோடு 


Sunday, April 26, 2015

நானெழுதிய வெளிவராத திரைப்பாடல்

நீ நான் ஏன்
பொல்லாத  இன்பங்கள் கொண்டாடும்போது

ஆண்:

இவள் இதழ் அது சிந்தும் துளியில்
இதோ இதோ உன் காலடியில்
அவள் விரல் அது அசையும் திசையில்
உயிரே உயிரே போய் விடு போ

இவள் அங்கம் என் தேகம் தீண்ட
விலை விலையென உயிர் பிரிவேன்
அவள் மேலென் வாசம் விரவ
பாதங்கள் மேவிட உடல் விரிப்பேன்

சரணம் 1

வா என் வாசல் வந்து
நீ காத்திரு
என் என் தேவை தந்து
நீ வேர்த்திரு
நான் ஓர் வேகம் கொண்ட
தீ காட்டுத்தீ
ஆண் தேகம் அது எல்லாம்
நுனி புல் நுனி
நீ - என் பார்வை பட்டு
நீ - என் வாடை சுட்டு
நீ - என் பாதம் தொட்டு
வா ஒரு ராமனா





விடுமுறை விடுகதை

சனி ஞாயிறு காலைப் பொழுதுகள்
ஏன்
சனி ஞாயிறு காலைகளைப்
போலிருக்க வேண்டும்
வார நாட்களில்  எப்போதாவது
வரும்
விடுமுறைகளின் காலைகளைப்
போல் ஏன்
இருக்கக் கூடாது 

Sunday, August 24, 2014

மறத்தல்:பறத்தல்

விண்ணில் பறத்தல்
மண்ணை மறத்தலே

சிறகசைவுகளின் இடையே
மண்ணின் ஈர்ப்பு
தரையிறக்கும் கால்களை

















கூரலகை விண் நோக்கி
எழும்பி விட்டாலோ
மண்ணழிந்து போகும்
அடுத்தொரு காற்றலை வரும் வரை

கொடுங்காற்று
சிறகடர்த்தியை பறித்தாலும்
அலகு விண்ணே நோக்கும்
விசை குறைந்தே பறந்தாலும்
நினைவை சென்றடையும்

சுயமும் இருப்பும்
முயங்கும் வெளியில்
மறத்தலும் பறத்தலும்
மறைந்தே போகும்
இருத்தலும் இறத்தலும்
கரைந்தே தீரும்

Monday, November 12, 2012

5 குறுங்கவிதைகள்

கற்றுக் கொண்டவைகளை கணக்கு வைத்திருக்கவில்லை
கணக்கும் கற்றுக் கொண்டது  தானே


ஒழுகி விழுந்தது ஒழுக்கம் இடையில்
நழுவித் தொலைந்தன கற்பிதங்கள்



என்னிலிருந்து இறங்கிச் சென்றவனை கண்டேன்
கண்டவனை கண்டு கொண்டேன்


சொற்களை சிந்தி எண்ணங்களை விதைத்து
செயல்களை வேண்டினேன்
அவநம்பிக்கை கிளைத்து அனர்த்தங்கள் விளைந்து
உன்மத்தம் சித்தித்தது


உடனுறைந்தும் தானுணரா தத்துவம்
அனைத்தும் நிறைந்தும் ஆருமறியா  சித்தாந்தம்
உணரக் கூடாத வினைகள்
புரிந்தவை கொண்டு
அளக்க முற்படும்
அறிவின்மை
அளக்க முடியா
அறிவின்மையை அறிவதே
அறிவல்லவா

 

Sunday, November 27, 2011

பொய்மெய்

புதுமை ஒன்றுமில்லை

உறவற்ற உறவையும்
நிரந்தரமான நிரந்தரமின்மையையும்
மறுதலித்தால்
எப்படி சித்திக்கும்
ஞானம்

Pandit Venkatesh Kumar and Raag Hameer