கருந்திரை கீழிறங்கியது
கண்முன் ஒளிந்து மறைந்தது ஒளி
சூழ நின்ற
மலையடுக்குகளின் இடுக்கினூடே
அலையென மிதந்து வரும்
மென்னீர காற்று
கமழும் உன் தோள் வாசம்
எப்போதோ முகர்ந்தது
இன்னும் புலன்களில்
அழியா தடம்
இப்போதும்
முகர்ந்துகொள்ளும் அண்மையில்
விருப்பங்களின் சின்னமென
இடையில் எரியும் கணப்பு
வழியும் ஹரிப்ரஸாதின் குழலிசை
சகமொருத்தி சொன்னது
இன்று இப்போது இக்கணம்
நினைவில் மென்மையாய் அதிரும்
'ஒரு குழல்,
ஒரு முணுமுணுப்பு,
ஒரு பெருமூச்சு,
ஒரு முனகல்,
ஒரு மெல்லிய அழுகை,
ஒரு தேன்சிட்டின் சிறகசைவு,
சுவாசம்,
தென்றல்,
மரங்களின் உயிர்ப்பு,
இடையோடும் நிசப்தம்,
சொற்களேதுமற்ற இந்நிலை...'
அநித்யங்களின் காதல்
வலியது