Sunday, September 25, 2011

எங்கேயும் எப்போதும் - ஆனந்த விகடன் விமர்சனம்


மிகத் தரமான ஒரு படத்திற்கு மிக அழகான விமர்சனம்.  மற்றுமொருமுறை விகடன் புதுத் திறமைகளை அடையாளம் கண்டு வரவேற்கும் தலை வாசல் என்ற எண்ணம் உறுதிப்பட்டது.  

வழக்கம் போல் உங்கள் விமர்சனம் படித்து விட்டு படம் பார்த்து முடித்ததும் இயக்குனர் சரவணன் படத்தின் முடிவில் சொல்ல நினைத்திருக்கக் கூடிய இன்னொரு கோணம் தோன்றியது.  

ஜெய் - அஞ்சலி காதலில் அனைத்து நிகழ்வுகளுமே முன்கூட்டி தீர்மானிக்கப் பட்டவை. அவள் அவன் அறைக்குள் புகுந்து சம்பளம் என்ன என்று பார்ப்பதிலிருந்து, தன் தந்தையை பார்க்கச் சொல்வது, அவன் தாயிடம் சொல்லச் சொல்வது என அவள் அவனுடனான தற்கால வாழ்க்கை மட்டுமல்லாது எதிர்கால பந்தத்தையும் சேர்த்தே திட்டமிடுகிறாள். "அம்பது வருஷம் உன் கூட வாழ வேண்டாமா?" என்று கேட்கிறாள்.

ஆனால் எதிர்பாராத அந்த விபத்து அவர்களை பிரிக்கிறது.

அனன்யா-சர்வா காதலிலோ எதுவுமே திட்டமிட்டவை அல்ல. அவர்கள் சந்திப்பு, அந்த ஒரு நாளில் அவர்கள் ஏறி இறங்கும் பயணங்கள் என முன்னறிவிப்பில்லாமல் நகர்கிறது. பேருந்தில் அவனருகில் இருக்கை காலியானதும் அமர எழுந்து, அந்த நிறுத்தத்திலேயே இறங்கும் அந்த ஏமாற்ற தருணங்கள் உட்பட.  பெயரோ, தொலைபேசி எண்ணோ கூடத் தெரியாத ஒரு நிச்சயமின்மை.  வாழ்வில் இனி எப்போதும் சந்திப்போமா என்ற சந்தேகம் அவர்களை இயக்குகிறது. 

அவர்களின் நிச்சயமற்ற தருணங்களை அந்த விபத்து அவர்களை சேர்ப்பதின் மூலம் நிறைவு செய்கிறது.

இயக்குனர் தேர்ந்தெடுத்த முடிவின் மூலம் இந்த கான்ட்ராஸ்ட்-ஐ அடையாளப்படுத்துகிறார்  என நினைக்கிறேன்.

மிகத் தெளிவாகவும் மிக நேர்த்தியாகவும் சரவணன் இந்த கான்ட்ராஸ்ட்-ஐ படம் நெடுகிலும் முடிவை நோக்கி கொண்டு சென்றிருக்கிறார்.

ரசனையின் எதிர்பார்ப்பில் மற்றொரு நல்ல படத்தை விரைவில் தருவார் என எதிர்பார்க்கும்,

சரவணன் 

Pandit Venkatesh Kumar and Raag Hameer