Tuesday, April 10, 2018

காட்சிப்பொருள்



Image result for ashokamitran
(அசோகமித்திரனின் 'காட்சி' சிறுகதையின் தாக்கத்தில்)

ஏன் போக வேண்டும்
யாரும் வழியறியா ஓரிடம்
ஏறும் இறங்கும் பயணிகள்
கலையாத சாம்பல் முகங்கள்
இறப்பதற்காக காத்திருக்கிறார்கள்
இறப்பதற்காக போகிறார்கள்
எரித்துவிட்டு
எரிக்கப்பட வருகிறார்கள்
இருப்பதினிமித்தம் மரணம்
இருண்மையின்
இருநிலைகளினிடையே
இழப்பதற்கேதுமற்ற
இந்த மனமும் உடலும்
போர்க்களங்களிலும்
போரல்லாத களங்களிலும்
பகடைகளாக மடிந்துபோகும்
அத்தனை உடலங்களிலும்
மரிக்காது நினைவில்
தரிக்கும் இவை
அவரவர் பிறந்த பூமி
யாரெங்கிலும்
எங்கேயேனும்
பாடிவிடுங்கள்
நேற்று நேர்ந்ததே
நாளையுமென
ஆயிரம் கோடி
உயிர்களை மூட்டியெரித்த
எங்கள் சிதைகள்
இன்று எரியும்
இந்த மண்
எங்கள் நிலமென 

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை: காட்சிப்பொருள்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை: 

காட்சிப்பொருள்

Saturday, February 10, 2018

நனவின் நீட்சி

கதிரணையும் அந்தி
இலைகளுதிர்த்த எலும்புக்கரங்கள்
பற்றிப் பிடித்திருக்கும்
செந்நிற கருங்கல் கட்டிடம்
கற்பலகைகள் பாவிய படிகளில்
தாவிப் பாய்ந்து இறங்குகிறேன்
யாருமில்லாத தாழ்வாரங்களில்
இறங்கும் படிகள்
மீண்டும் மீண்டும்
கொண்டென்னைச் சேர்க்கும்
அத்தனை வாயில்களுக்குள்ளும்
பார்மலின் திரவக்குடுவைகளில்
மிதக்கும் அரைகுறை உருவங்கள்

புகைவண்டி சன்னல் கம்பிகளின்
காலைநேர குளிர்ச்சியும்
கரிப்புகை தூசியும்
முகம்பூசும் பயணம்
ஏறியதெங்கென்றும்
இறங்குவதெங்கென்றும் அறியாது
இடைவழி நிற்காது நீளும்
இளம்பருவத் தனிமை


சிறுகுழந்தையாய் வாழ்ந்திருந்த
வீட்டின் பின்புறம்
யாருமில்லாத பின்னிரவில்
மரங்களின் பின்னிருந்தும்
தரையின் குழிகளிலிருந்தும்
தீராதெழுந்து
விரட்டும் பிரேதங்கள்

கரைகாணாது
தரை அறுந்து
முடிவற்று வீழ்ந்துகொண்டேயிருக்கும்
இரவின் ஆழங்கள்

விரல் நுழையவியலா
துவாரம்
உடல் சுருக்கிச் செலுத்தும்
விசைகள் வலிகள்

களிப்பூட்டவென்று
ஏறி நின்ற மேடை
ஆயிரம் கண்களின்முன்
ஒரு வார்த்தையும் விரியா
விளங்கவியலா கணம்

போதாமைகள் குறைகள்
அச்சங்கள் இருண்மைகள்
நம்மை நாம் படிக்க
நனவில்லாததும்
ஓர் வழி

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை: நனவின் நீட்சி

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை: நனவின் நீட்சி

https://padhaakai.com/2018/02/10/dreamscape/

Thursday, January 11, 2018

பிற்பகல் நேரச் சலனம்

நண்பகல்
அரவமின்றி உதிர்ந்துகொண்டிருக்கிறது

கிழக்குவானின் கவிந்துவரும் இருளும்
ஈரம் பொதிந்துவரும் காற்றும்
அசாதாரண தூய்மை உறுத்தும்
இந்த பாண்டுங் நகரின் சாலையில்
இலைக் குப்பைகளையும் என்னையும்
தலைமுக்காடில்லா இளம்பெண்ணொருத்தி
உணவு பரிமாறும்
சாலையோர கடைக்குள் தள்ளுகின்றன
வரவேற்று அமரச்செய்து
குப்பையை காலால் வெளித்தள்ளி
நாஸி படாங் தட்டுகளை
மேசைமீது பரப்புகிறாள்
புளியுடன் மசித்தரைத்த
பச்சைமிளகாய்த் துவையலை
கீரையுடன் கலந்துகொண்டே
ஆப்பிரிக்க ஆசிய அருங்காட்சியகம்
போகும் வழி வினவுகிறேன்

இலக்கேதுமின்றி
இடம்மட்டும் கேட்குமென்னை
எப்போதும் எல்லாரும்
பார்ப்பது போலல்லாமல்
இருவீதிகள் தள்ளியிருக்கும்
வழி சொல்லித்தருகிறாள்

தேனும் சிறுஎலுமிச்சைச்சாறும் கலந்ததொரு
மிக அற்புதமான தேநீரைப் பருகியபின்
அவள் புன்னகையை
என் முகத்திலணிந்துகொண்டு
சுத்தத்தைசீண்டும்
சூறைக்காற்றில் நுழைகிறேன்

மென்குளிருறைக்கும்
நெதர்லாந்திய கட்டிடம்
பதறிப் படபடக்கும் என்மனம்போல்
துடிக்கும் கொடிகள்
மங்கிய மஞ்சள் விளக்கொளியில்


பதிவுகளாக மிதக்கும்

கடந்துசென்ற காலங்கள்
நாடுகள் நேசங்கள் துரோகங்கள்

யாருமற்ற பிற்பகல்
எரிந்தடங்கிய தங்குபான் பராஹு
எரிமலையின் ஓரம்
இயற்கை வெந்நீரூற்று
கந்தக மணம் மேவும் காற்றில்
நீரிலிறங்க மனமின்றி
அசையாது நிற்கும்
மரத்தின்நிழல்
மேல்விழும்
சலனமற்ற உக்கிரம்

இன்னும் இந்த நாள் முடியவில்லை
இன்னும் பார்ப்பதற்கு
இன்னும் செல்வதற்கு
காத்திருக்கின்றன
இடங்களும் பயணங்களும்
புகைகசிந்து பேசும் அந்த
எரிமலைமட்டும்
எரிந்தடங்கி விட்டால் போதும்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை: பிற்பகல் நேரச் சலனம்

https://padhaakai.com/2018/01/10/late-noon/

Wednesday, December 13, 2017

ஆதி கதை

Image result for animals gods humans

கதை சொல்லத் தொடங்குகிறேன்

இன்று போலல்ல
அது தேவதைகளும் யக்ஷிகளும்
மிருகங்களும் மனிதர்களும்
தத்தமது உலகம் வாழ்ந்த காலம்

கூடியும் ஊடியும்
களியென யக்ஷிகள்
ஒருநாள் மனிதத்தடம் பதிந்திராத
கருமலைகளின் விண்பொதிந்த
உயரங்களினின்று
மண்வந்து சேர்ந்தன

சிகரங்களின் பனிமுகில்கள்
கொடுமுடிகள் விட்டிறங்கி
கானகத்தின் இலைப்படுகை
கால்நுனி தீண்டிப்பார்க்கும்
அந்நீர்தொடர்ந்து ஆடிவந்த
தேவதைகளும் யக்ஷிகளும்
பிறிதொரு கரைநின்ற
விலங்குகளும் மனிதமும்
கண்டுகொண்டன

அதன்பின் கடந்துமறைந்த
காலங்கள்தோறும்
யாருக்கு பூசனை யாரிடும் படையல்
யாருக்கு ப்ரீதி யார் செய்வதென
கனவுகளிலும் தீரா போர்களில்
கழிந்தன தலைமுறைகள்

ஒருபோது மனிதம் வேண்டி
யக்ஷிகள் தெண்டனிடும்
மறுபோதோ
படையலும் பலியும் கொள்ளுமவை

எழுந்தும் அமிழ்ந்தும்
அவை சன்னதம்
அடங்காதாடும்தோறும்
அவற்றிலொன்றென ஆயினும்
இதுவேதும் கலவா தேவதைகளோ
கூர்பார்வையும் அரிதென சிரியுமென
பனிமூடிச்சிகரங்கள் ஏறியவாறிருந்தன

போர்களில்
படைப்பும் காதலும் ஊக்கமும்
அழிந்துகிடந்த
யக்ஷிகள் மனிதர்கள்முன்
தோன்றின தேவதைகள் ஒருநாள்
யாரும் கேட்டிரா ஒலிகளில் உன்னதம்நிறைத்து
யாரும் கண்டிரா வினைகளில் மர்மம்புதைத்து
தேவதைகள் கூறும்
வேடம் மாற்றுக
முகமூடி களைக
யக்ஷியும் நீ மானுடமும் நீவிர்
விலங்கினமும் நாம்
அனைத்தும் நாமே
வீழ்ந்தன அனைத்தும்
பணிந்தன பாதம்

கதைமுடிந்தது
எனினும்
கனவுமுடியாதென
நாமும் அறிவோம்
அவையும் அறியும்

Pandit Venkatesh Kumar and Raag Hameer