Tuesday, February 12, 2019

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் 3 கவிதைகள்

பதாகை மின்னிதழில்  வெளிவந்திருக்கும் 3 கவிதைகள்

https://padhaakai.com/2019/02/11/saranabhi-poetry-2/


நதி - 2

அத்வைதம் தேடிய 
சங்கரனைத் தேடி 
காலடி போனவொரு நாள் 
பயணங்கள் திசைமறந்த நாட்கள் 
பற்பல நாட்களில் 
பேசிய முதல் வார்த்தை 
அங்காமலி சங்கரன் அம்பலம் 
துகிலோடு நாணமும் களைந்து 
பெரியாறின் படிகளிலிறங்கி 
எதிர்கரை காணா 
இருளும் தொலைவும் 
நினைவில்லாது 
மயக்கம்போலும் ஓருணர்வில் 
முதலடி ஈரடி 
பனிக்குட வெம்மைக்குள் 

நாசியின்கீழ் உடலம்தழுவி 
நகர்ந்த நீர் பொழிந்ததெங்கு
வழிந்ததென்று 
புதைந்தமர்ந்திருந்தது 
எத்தனைக் காலம் 

நதி - 1

சாகச பயணம்போலும் 
தலையில் கட்டோடும் 
இடைநழுவும் முண்டோடும் 
நகர்நீங்கி நான்காம்நாள் 

கருமையும் பச்சையும் நீலமும் 
கலந்தடர்ந்த கானகம் 
புள்ளினங்களும் இயம்பா 
புலரிளங்காலை 

துயிலெழுப்பி விரிநீங்கி 
தந்தையின் தோளமர்ந்து 
மென்சருகென மினுங்கும் 
பம்பையின் கரையோரம் 

தோளிறக்கி துண்டுரித்து 
அடற்கருமையில் அசைவின்றி 
நெளியும் நீரோரம் அமர்த்தி 
நிகழ்வதென்ன அறியாதவன் 

பனிக்குளிர்நீரில் முதல்முழுக்கு 
ஆயிரம் ஊசிகள் ஓராயிம்துளைகள் 
விறைத்துநின்ற சிறுஉடல் 
சினம்கண்டு சிரித்த தகப்பன் 

நிகழும்

கருந்திரை கீழிறங்கியது 
கண்முன் ஒளிந்து மறைந்தது ஒளி 
சூழ நின்ற 
மலையடுக்குகளின் இடுக்கினூடே 
அலையென மிதந்து வரும் 
மென்னீர காற்று 
கமழும் உன் தோள் வாசம் 

எப்போதோ முகர்ந்தது 
இன்னும் புலன்களில் 
அழியா தடம் 
இப்போதும் 
முகர்ந்துகொள்ளும் அண்மையில் 

விருப்பங்களின் சின்னமென 
இடையில் எரியும் கணப்பு 
வழியும் ஹரிப்ரஸாதின் குழலிசை 
சகமொருத்தி சொன்னது 
இன்று இப்போது இக்கணம் 
நினைவில் மென்மையாய் அதிரும் 
'ஒரு குழல்,
ஒரு முணுமுணுப்பு,
ஒரு பெருமூச்சு,
ஒரு முனகல்,
ஒரு மெல்லிய அழுகை,
ஒரு தேன்சிட்டின் சிறகசைவு,
சுவாசம்,
தென்றல்,
மரங்களின் உயிர்ப்பு,
இடையோடும் நிசப்தம்,
சொற்களேதுமற்ற இந்நிலை...'

அநித்யங்களின் காதல் 
வலியது 

Thursday, January 10, 2019

தொலைவில் வழியும் இசை


அலுவலகம் செல்லும்
அவசரத்தில் அனைவரும்
தத்தம் பேசியில் புத்தகத்தில் உரையாடலில்
அமர்ந்திருந்த எனக்கெதிரே
தலைநிமிர்ந்து அமர்ந்திருந்தாள்
மறுமுறை நோக்க வைக்கும் முகம்
ஏதோவோர் எண்ணம்
ஏதோவொரு நாடகம்
எங்கோ நோக்கிய
தளும்பிய விழிகள்
கணப்போதும் இமைக்காமல்
பார்வையேதும் அசையாமல்
தன்னிச்சையாக மேலெழும்பும் கை
யாருமறியாமல்
நீரூறும் நாசியைத் துடைக்கும்
சிறிதே விரிந்த உதடுகளிலும்
உறைந்த சலனம்
யாருமே அவளைப் பார்க்கவில்லை
அவளைத் தவிர யாரையுமே நான் பார்க்கவில்லை
இருக்கையைவிட்டு எழாமல்
வெறித்து எதுவும் பார்த்துவிடாமல்
வழியப்போகிற அந்தத் துளிகள்
ஏன் என் தோள் வீழக்கூடாது

Friday, December 28, 2018

இல்லப்பணிப் பெண்டிரின் ஒருநாள்


எதிரும் புதிருமான
தெருக்களிலெல்லாம்
காலடி ஓசைகள்
அதிகாலை
அத்தனை பாதங்களும்
அழகிய பெரும் வீடுகளின்
தானியங்கிக் கதவுகள் திறந்து
சாலைகள் நோக்கி
சாரி சாரியாக நடக்கும்
பேருந்து நிறுத்தங்கள்தோறும்
இந்தோனேசிய தலைமுக்காடுகள்
இந்திய கைப்பைகள் குளிர்க் கண்ணாடிகள்
பிலிப்பினோ விரிந்த கூந்தல் அலங்காரங்கள்
சந்தனச் சுண்ணம் பூசிய பர்மிய கன்னங்கள்
குறைவும் நிறைவுமாக விதவிதமான ஆடைகள்
ஏதேதோ மொழிகள்
சுழலும் அத்தனைக் கண்களிலும்
ஒன்றே தாபம்
ஊடலும் கோபமும்
மகிழ்வும் பிணக்கும்
பேருந்து நிறுத்தங்களில் தொடங்கி
பேரங்காடிகளில் தொடர்ந்து
நிறுத்தங்களில் நிறையும் இன்று
சிங்கப்பூரில் ஞாயிறு

இல்லப்பணிப் பெண்டிரின் ஒருநாள்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை - இல்லப்பணிப் பெண்டிரின் ஒருநாள்


https://padhaakai.com/2018/12/23/saranabhi-poetry/#two