Wednesday, July 11, 2018

பசியின் பிள்ளைகள் - அத்தியாயம் 2

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் எனது மொழியாக்கச் சிறுகதை:

பசியின் பிள்ளைகள் - அத்தியாயம்  2
(Children of Hunger – ஆங்கில மூலம் Karl Iagnemma)

https://padhaakai.com/2018/07/10/children-of-hunger-2/

பசியின் பிள்ளைகள்- அத்தியாயம் 2: மொழியாக்கம்

அத்தியாயம் – 2
அந்த குதிரைவண்டி ஜெபர்சன் வீதியில், கறுப்பினத்தவரின் தேவாலயம் தாண்டி, வறியவர்கள் விடுதியையும், காலியான மீன் சந்தையும் தாண்டிப் போய்க் கொண்டிருந்தது. “அவரது மறைவுச் செய்தி என்னை மிக்க சோகத்தில் ஆழ்த்தி விட்டது,” டாக்டர் பெயர்ஸ் சொன்னார். “அன்புக்குரியவர்களுக்கு மட்டுமல்ல, அவரது மறைவு இந்த நகருக்கும், மருத்துவத்துறைக்குமே கூட பேரிழப்பு.”
ஜூலியா ஒன்றும் சொல்லாமல் தலையசைத்துக் கொண்டாள்: ஓர் ஒத்திகை பார்க்கப்பட்ட, பண்பட்டதோர் மௌனம். மழை தூறிக் கொண்டிருக்கும்போதும் தொலைவில் எங்கோ தீயணைப்பு மணி ஒன்று ஒலிக்கிறது.
“இறக்கும்போது அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தாரா என்ன?” குறுகிய இருக்கைகளினூடே குனிந்து டாக்டர் பெயர்ஸ் கேட்டார். “உங்களுக்கு சிரமமொன்றும் இல்லையென்றால் சொல்லுங்கள் – ஏனென்றால் இதெல்லாம் உங்கள் தனிப்பட்ட விஷயம். அவர் திடீரென்று இறந்து போனார் என்றுதான் நான் கேள்விப்பட்டேன்.”
“அவர் நீண்ட நாட்கள் உடல்நலமின்றி இருந்தார்.”
டாக்டர் பெயர்ஸ் ஓர் எதிர்பார்ப்புடன் தலையாட்டிக் கொண்டார். ஆனால் மேற்கொண்டு ஏதும் பேசாமல் ஜூலியா தொலைவில் எங்கோ பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். நகரின்மேல் அந்தி ஓர் தெளிவற்ற மூடுபனி மூட்டம் போல் கவிந்துவிட்டது. நடைபாதையின் விளக்குத் தூண்களிலொன்றின் மேல் ஏணியில் நின்றவாறு விளக்கை ஏற்றுமொருவனின் கைகள் வெளிச்சத்தில் பளிச்சிடுவதை ஜூலியா கண்டாள். வில்லியம் இறந்தபோதிருந்த உடல் அவனுக்கு.
ஈமச்சடங்குகள் முடிந்தபிறகு அவளது மகன் ஜேக்கப்புடன் படியேறி வில்லியமின் படிப்பறைக்குச் சென்றதை அவள் நினைவுகூர்ந்தாள். சிதறிக் கிடந்த குறிப்பேடுகளை அடுக்கியவாறே அவனது கிழிந்த பழைய முகவரிப் புத்தகத்தைத் தேடினாள். மேசைக்குப் பின்னால், செடார் மரப்பெட்டிக்குள் அறுவை சிகிச்சைக்கு பயன்படும் பட்டு நூலினால் கட்டப்பட்ட நான்கு காகிதக் கட்டுகளை கண்டுபிடித்தாள். அவனது நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு மொடமொடத்துப் போன அந்தக் காகிதங்களைப் புரட்டினாள். பேராசிரியர்களுக்கோ, பதிப்பாளர்களுக்கோ அல்லது எந்தவொரு மருத்துவருக்குமோ, யார் யாருக்கெல்லாம் அனுப்பிய அத்தனைக் கடிதங்களுக்கும் ஒரு பிரதி அவன் எடுத்து வைத்திருந்தது போலிருந்தது. பெட்டிக்கு அடியில், அவளது அழகிய எழுத்தில் எழுதப்பட்ட சிறிய கடிதக்கட்டு ஒன்றும் தென்பட்டது. ஒன்றை உருவி சத்தமாகப் படித்தாள்.
அக்டோபர் 22, 1819
மிக இனிய, ஆனால் வருத்தம் தரும் விதம் தொலைவிலிருக்கும் வில்லியமிற்கு,
குளிர்காலம் துவங்கிவிட்டது. அன்னங்களும், கொக்குகளும், வாத்துகளும் தெற்கு நோக்கி பறந்துவிட்டன, இலையாடையின்றி நிர்வாணமாக நிற்கும் ஓக் மற்றும் மேப்பிள் மரங்களின் குளிர்தென்றலின் வழியனுப்புதலுடன். பறவைகள் தேடும் இதம் காரணமாக இருக்கக்கூடும், பிற மிருகங்களைப் போல் நமக்கும் இதமும் சுகமும் தேவையென்றாலும், நமது ஆசைகளை நாம் ஒழுக்கத்தின் பாற்பட்டு கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது அல்லவா? இதுவொரு கொடுமை என்று நான் சொன்னால் நீ ஏற்பாய்தானே?
உன்பால் பிரிய அர்ப்பணிப்புடன்,
ஜூலியா
தோன்றிய புன்னகை ஜூலியாவின் ஒரு சிறிய கேவலில் முடிந்தது. இன்னொரு கடிதத்தை எடுத்தாள்.
ஜூலை 9, 1820
என் பிரிய ஜூலியா,
நமது பிரயாணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டேன். வாக்-இன்-த-வாட்டர் என்ற கப்பலில் ஆகஸ்ட் 7ம் தேதி காலை 6.15க்கு நாம் கிளம்புகிறோம். மறுநாள் மாலை ராணுவ தளத்திற்கு சென்று சேர்வோம். நமது இல்லத்திற்கு தேவையான தட்டுகள், பாத்திரங்கள், துணிகள், திரைச்சீலைகள் கொண்டு வருவாய் என நம்புகிறேன்.
என் அன்பே, என் உடைமையே. நீ இல்லாதவரை நான் எப்படி முழுமையாக முடியும்? என் இதயம் உன் குரலின் நினைவில் துள்ளிக் கொண்டிருக்கிறது. என் குருதி உன் காலடி ஓசையின் வரவில் கொதிக்கிறது.
உன்பால் அர்ப்பணிப்புடன்,
வில்லியம்
அந்தக் கடிதத்தை அவள் கசப்பும், அற்புதமும், துக்கமும் ஒருசேர்ந்த கலவையான உணர்ச்சியுடன் நினைவுகூர்ந்தாள். வில்லியமிடம் அன்பு இருந்தது, பார்வைகளிலும், சில சைகைகளில், கடிதங்களில், சில வரிகளில் மட்டுமே வெளிப்படும் வண்ணம். எப்படி அவளால் அவனது கடுமையை ஏற்றுக் கொள்ளவும் விரும்பவும் முடிந்தது என்று இப்போது நினைத்துப் பார்க்கும்போது ஜூலியாவிற்கு திகைப்பாக இருந்தது. ஆனாலும் புருவங்கள் முடிச்சிட இதயத்தின் இறுக்கத்தை இளக்குவது போல் அவன் பார்க்கும் கடும்பார்வை அவளுக்கு விருப்பமாகவே இருந்திருக்கிறது. அவளது இளமையும், எளிதில் உணர்ச்சிவசப்படும் தன்மையும் அவனது கறார்தன்மையும், முதிர்ந்த அணுகுமுறையும் ஒன்றையொன்று சமன்செய்து கொண்டன போலும் என்று தனக்குள் அவள் சொல்லிக்கொண்டாள். உணர்ச்சிக் கிளர்வும் இளமையும் எதனாலாவது சமன் செய்யப்பட வேண்டுமா என்ன? துக்கத்தை மகிழ்ச்சி சமன் செய்து நிம்மதியை அளித்துவிட முடியுமா என்ன?
“அந்தப் புத்தகம் பிரசுரமாகி முப்பத்தியைந்து வருடங்களாகி விட்டன என்றால் நம்பக் கடினமாக இருக்கிறது.” தலையை வியப்பில் அசைத்தவாறு மழை சடசடக்கும் சன்னல் கண்ணாடியைப் பார்த்தார் டாக்டர் பெயர்ஸ். “நான் சின்னஞ் சிறுவன். முழுகால் சட்டைகூட அணிந்திருக்கவில்லை.”
ஒருவேளை அவள் மிக சுயநலமியோ? சொல்லப் போனால், வில்லியமின் படைப்பு அவளை பாரிஸுக்கும், ஹாம்பர்கிற்கும் அழைத்துச் சென்றிருக்கிறது; மென்சிவப்பு முத்துச்சரமும், தந்த கூந்தலணிகளும், அழகிய மொரோக்கோ வேலைப்பாடுகள் கொண்ட விலையுயர்ந்த கண்ணாடி பாத்திரங்களும்… மேலும், அவளுக்கு ஒரு மகனை, ஜேக்கப் இல்லாத வாழ்வை, ஒரு கணம் கற்பனை செய்ய முயற்சித்தாள். அந்த எண்ணம் அரைக்கணம் கூட நீடிக்காமல் கசப்பான சுழலாய் உடனே மறைந்தது. டாக்டர் பெயர்ஸை நோக்கிப் புன்னகைத்தாள்.
“இன்றிரவு நீங்கள் கொண்டாடப்படுவீர்கள்,” அவர் கூறினார். “அவரது பிரபலமான ஆராய்ச்சிகளின் ஒரே சாட்சி நீங்கள் அல்லவா! அந்தச் சிறுவனைத் தவிர.”
“நான் ஒரு சாட்சியல்ல.”
டாக்டர் பெயர்ஸ் கவனமாக தலையசைத்தார்..
“அது முழுக்க முழுக்க, நோயாளிகள் அறையில் வில்லியமும் அந்தப் பையனும் சார்ந்த விஷயம்.” ஜூலியா தோள்களை குலுக்கினாள்: ஒரு தெளிவற்ற, நிராதரவான பார்வையுடன். “அவ்வளவாக என்னால் அந்த நாட்களை நினைவுகூர முடியவில்லை.”
****
செப்டம்பர் மாதம் நீரிணையிலிருந்து குளிர்காலக் காற்றைக் கொண்டு வந்தது. ஜூலியாவை கோடைக்காலம் முழுதும் வாட்டிய சுரத்தையும் நடுக்கத்தையும் போக்கியது. காலையுணவுக்குப் பின் போர் வீரர்கள் தங்குமிடம்தோறும் தொடர்ந்து சென்று அவர்களுக்கு வேண்டியன விற்கும் சட்லர்கள் கடையில் மாவு, முட்டைகள், சில அடி நீளத்திற்கு துணி கொஞ்சம் வாங்கிக்கொண்டு, மெதுவே நதியோர புல்வெளியில் நடந்தவாறே, மெல்லிய பருத்திச் சட்டைகளும் கோவணங்களும், கால்களில் மொக்கஸின் சப்பாத்துகளும் அணிந்த நாடோடிகள் தங்கள் படகுகளில் பொருட்களை ஏற்றுவதை பார்த்தாள். அணிந்திருந்த தடித்த கம்பிளியாடையின் கனம் அவளைச் சோர்வால் நிறைத்தது; அவள் நடுங்கினாள். நீரிணைக்கு எதிரே, அவர்களது குடிலின் புகை கசியும் சிம்னியும், மேற்கூரையும் தெரிய, மனம் சிறிது தெளிந்தது; பின் வில்லியமின் மேல் எண்ணங்கள் குவிந்தன.
பையன் வந்த பிறகு அவன் உற்சாகமாகவே இருந்தான், எனினும் ஒரு தொலைவு இருக்கத்தான் செய்தது: அதிகாலையில் எழுந்து, கணப்படுப்பில் தீயை மூட்டிவிட்டு, பையனைப்  பரிசோதித்துவிட்டு மருத்துவமனைக்கு புறப்பட்டு விடுவான். அந்தியில் திரும்பி, ஒரு குவளை தேநீர் அருந்திவிட்டு, பையனின் அறைக்குள் மறைந்து விடுவான். சமையலறை மேடையின்மீது நிறைவடையாத ஒரு கடிதமும், அதன் முன்பு ஜூலியாவும் இருப்பார்கள். அவளது பேனா எழுதும் சத்தம் தவிர வேறெதுவும் அற்ற நிசப்தம்.
ஓரிரவு வில்லியம் அந்த அறைக்குள்ளிருந்து அவசரமாக வெளிவந்து அவனது குறிப்பேடுகளைப் புரட்டும் சரசரப்பு கேட்டது; பின் நீண்ட அமைதி. சிறிது நேரம் கழித்து கைகளை இடுப்பின் இருபுறம் வைத்துக்கொண்டு எதிரில் வந்து நின்றான்.
பையனுக்கு ஒன்றுமில்லையே?
கைகளால் காற்சட்டைப்பைக்குள் காசுகளை சலசலத்துக்கொண்டே புருவங்கள் நெரியக் கேட்டான். உணவெடுக்காமல் கிடக்கிறான், பசியெடுக்கிறது. சாப்பிடுகிறான், பசி மறைந்துவிடுகிறது. ஏன் என்று உனக்கு தோன்றுகிறதா?
ஜூலியா எச்சரிக்கையாக புன்னகைத்தாள்.
சொல்லு, என்றான் வில்லியம்.
கிசுகிசுப்பின் கூட்டிசை போல காற்று மரக்குடிலின் கதவைக் அறைந்து கடந்து சென்றது. ஜூலியா தலையசைத்தாள், எனக்குத் தெரியவில்லை.
ஆம், உனக்குத் தெரிந்திருக்காது. அவன் சிரித்தான். அவள் பிடரியின் மயிர்கற்றைகளை கோதினான். யாருக்குமே தெரியாது, அன்பே.
அவள் ஒன்றும் சொல்லாமல் அவன் கைகளை பற்றினாள். ஒரு வலிந்த புன்னகையுடன் அவள் விரல்களை அவன் மணிக்கட்டிலிருந்து பிரித்துவிட்டு சொன்னான். பிறகு முயற்சிப்போம். இன்றிரவு – சத்தியமாக.
மறுநாள் காலை வயிற்றில் ஒரு சுருள்வலியோடு விழித்தாள்.
நீர் கொதிக்க வைத்துவிட்டு, சமையறைக்குள்ளேயே பத்து பன்னிரெண்டு தடவைகள் சுற்றி வந்தாள். மறுபடியும் தோற்றுவிட்டேன், என்று எண்ணிக்கொண்டாள். மனதை இனிய நினைவுகளில் பதிக்கும் விதமாக அடுத்து எப்போது சூசனின் கடிதம் கொண்டுவரும் படகு வருமோ என்று நினைத்தாள். நேற்றிரவு, வில்லியமின் உணர்ச்சிகளைத் தூண்டும் முயற்சியில் மீண்டும் தோற்றுப் போனாள்: அவனது கடுமையான தொடர்ந்த உழைப்பே அவனது வீர்யத்தை செயலிழக்கச் செய்துவிடுகிறதோ என்று கசப்புடன் எண்ணிக்கொண்டாள். நான் தோற்றுவிட்டேன்நான் தோற்றுவிட்டேன், நான் மீண்டும் தோற்றுத்தான் விட்டேன். இந்த வார்த்தைகளை ஒரு துக்ககரமான, படைவீரர்களின் நடைப்பாடலின் சந்தத்தில் தனக்குள்ளே பாடிக்கொண்டாள்.
சமையலறையைக் கூட்டி துடைப்பத்தை தரைப்பலகைகளின் மேல் தட்டினாள். வில்லியமுடனான உரையாடல்களில் நிலவும் எரிச்சலூட்டும் தயக்கங்களை, அவனது ஒவ்வொரு தொடுகையிலுமிருக்கும் தாங்கவே முடியாத நிச்சயமின்மையை, அவள் வெறுத்தாள். இப்போதெல்லாம் அவளுக்கு, அவர்களிருவரும் தலை நரைத்து, இளக்கம் சிறிதுமில்லாது, காலையுணவுக்கு மேசையின் இருபுறமும் ஒரு வார்த்தையும் பேச இன்றி அமர்ந்திருக்கும் இரு அந்நியர்கள் என்பது போல் அடிக்கடி தோன்றும் காட்சி, தவிர்க்க முடியாத சினத்தையும் சோகத்தையும் ஒருசேர ஏற்படுத்திக் கொண்டிருந்தது. ஒரு குழந்தை அவர்களது பிரச்னைகளை தீர்த்துவிடக்கூடும்: வில்லியமின் சேய்மை, அவளது தனிமை. வீடு முழுதும் அவளது தளர்ந்த, உற்சாகம் குன்றிய மூச்சுக்காற்றினால் நிறைந்திருப்பதாக தோன்றியது.
அடுப்பைக் கூட்டும்போது, பையன் மற்றொரு அறைக்குள் நடக்கும் சத்தம் கேட்டது. கூட்டுவதை நிறுத்தினால், நடப்பதும் நின்றது. பிறகு மணி ஒலித்தது.
அறைக்குள் எட்டிப் பார்த்தாள். காலை வணக்கம், திரு ரோலு.
வணக்கம் மேடம். இந்தப் பனியை நீங்கள்தான் கொண்டு வந்தீர்களா?
ஜூலியா பணிவாக புன்னகைத்தாள். ஒரு குவளை தேநீர் கொண்டு வரவா?
எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு பெண், வெண்ணிற கூந்தல் கொண்ட பனிமகள் – தன் தலையசைவில் பனியை கொண்டுவருபவள். வானின் குறுக்கே, பனிமான்கள் இழுக்க விரையும் தங்க ரதத்தில், தன் ஒரு தலையசைவில், தான் செல்லும் வழிதோறும் பனிப்பொழிவை உண்டாக்குபவள். அவள் நீதான் போல, இல்லையா?
அவள் மீண்டும் புன்னகைத்தாள். அவளை விட மூன்றே வயது சிறியவன் எனினும் இன்னும் குழந்தைகள் போல் எளிய பகடிகள் செய்வதில் விருப்பம். ஆனாலும் முட்டாள் அல்லன்: சில மதியங்களில் அவனது அறைக்குள் அவன் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் சத்தம் கேட்கும், ஆனால் வில்லியமிடம் கையைக்கூட தூக்க முடியாதது போல் பாவனை செய்வான். படிக்கத் தெரியாது, ஆனால் ஓராயிரம் படகுப் பாடல்கள் தெரிந்து வைத்திருந்தான். அவற்றை அவ்வப்போது தனது கரடுமுரடான, ஆனால் அதேசமயம், இனிமையாகவும் தொனிக்கும் குரலில் பாடவும் செய்வான்.
நான் போய் உனக்கு தேநீர் கொண்டுவருகிறேன், என்றாள்.
தயவுசெய்து என்னோடு பேசு. இன்னும் கொஞ்ச நேரம்.
ஜூலியா சமையறைக்குள் சென்றாள், பின்னாலேயே அவனின் முனகல் கேட்டது.
அவளும் பிணியாளர்களை பேணியிருக்கிறாள், ஆனால் மூன்று நாட்களுக்கு மேலாக பார்த்துக் கொண்டதில்லை; இந்தப் பையனோ ஐந்து வாரங்களுக்கு மேலாக இங்கிருக்கிறான். சனிக்கிழமை காலைகளில் வில்லியம் பையனின் கட்டை அவிழ்த்துவிட்டு வேறு கட்டு போடுவான். அப்போதெல்லாம் கதவோரம் நின்று கேட்டுக்கொண்டிருக்கும் ஜூலியாவிற்கு, பையனின் பரிதாபமான குரலும், வில்லியமின் திருப்தி தோய்ந்த குரலும் பொறாமையைத் தூண்டும்.
கொதித்த நீரை எடுத்து குவளையில் தேநீர்த் தூளில் ஊற்றிக்கொண்டே ஏதோவொரு, நினைவில்லாத, இனிய பாடல் ஒன்றைப் பாடினாள். அது பையன் பாடும் பல படகோட்டும் பாடல்களில் ஒன்று என்று சட்டென்று தோன்றியபோது திடுக்கிட்டுப் போனாள்.
எனக்குத் தெரிந்த சிப்பேவா இனப்பெண்ணொருத்தியை நீ நினைவுபடுத்துகிறாய், என்றான் அவள் திரும்பி வந்தபோது. இல்லை – தவறாக ஒன்றுமில்லை, கோபப்படாதே.
அவள் தேநீர்க்கோப்பையை அவனிடம் நீட்டினாள். பின் திறந்திருந்த அறைக்கதவினருகே நின்றுகொண்டாள்.
அவள் மணமானவள், ஆனால் அதுவொன்றும் அவர்களினத்தில் ஒரு விஷயமே அல்ல.பெண்கள் பிற ஆண்களுடன் செல்வது அங்கே அனுமதிக்கப்பட்டிருக்கிறது, புரிகிறதா? லாக் டு போய்ஸ் பிளாங்க் அருகே அவர்களது கிராமம் அருகே சில நாள் தங்கியிருந்தோம், புயலொன்று ஓய்வதற்காகக் காத்திருந்தபோது. அப்போது அவள் எங்கள் முகாமுக்கு வருவாள், எரியும் தீயினருகே அமர்ந்திருப்பாள். மிக்க சோகத்துடன் இருப்பாள், உன்னைப் போலவே, எப்போதும் ஒரு சோகப் புன்னகை. அவள் – கண்கள் சுருக்கிக்கொண்டு, உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டான் – அவள் ஒரு மரத்தைப் போல, முழுக்க கனிகள் காய்த்து நிற்கும் மரத்தைப் போல இருந்தாள். உனக்குப் புரிகிறதா?
யோசித்துப் பேசு, என்றாள் ஜூலியா, தயவுசெய்து.
நாங்கள் கிளம்புவதற்கு எங்கள் படகுகளில் பொருட்களை ஏற்றிக் கொண்டிருக்கும்போது, என் சட்டையை அவள் பிடித்திழுத்தாள். நான் சியக்ஸ் குழுவால் பிடித்துச் செல்லப்பட்ட அவள் கணவனைப் போலிருக்கிறேன் என்றாள். அவள் பெயர் பசுமைப் பள்ளத்தாக்கின் பெண். அல்லது பசும்பெண், ஏதோவொரு பசுமையின் பெண், அல்லது அது போல் ஏதோவொன்று.
நீ அங்கே அவளை விட்டு வந்துவிட்டாய், அப்படித்தானே.
பையன் சிரித்தான். நான் என் சட்டையை அவளிடம் தந்தேன், அதன்பின் மூன்று வாரங்கள் எனக்கு அணிந்துகொள்ள சட்டையொன்றும் இல்லாமல் போனாலும். அடுத்த கோடையில் அவளைக் கண்டுபிடிப்பேன்.
உனக்கு நல்ல அதிர்ஷ்டம் அமைய வாழ்த்துக்கள், என்றாள் ஜூலியா.
கதவை சார்த்திவிட்டு, துடைப்பத்தை எடுத்துக்கொண்டு முன்னறைக்கு வந்து வீசிக் கூட்டினாள். அவன் சொன்ன கதை அவளுக்கு எரிச்சலூட்டியது; உறைந்து போன நதியில் தன்னந்தனியே அழுதபடி அலையும் ஒரு பழங்குடிப்பெண் அவள் முன் தோன்றினாள். தன் நினைவுகளை வில்லியம் பக்கம் திருப்ப முயன்றாள்: அவன் அந்தியில் வீடு திரும்பிவிடுவான்; அவள் அவனுக்காக வெங்காய சூப்பும் நேற்றைய இரவின் மீன்கறியும் தருவாள். பையனின் உடல்நலம் பற்றி விசாரிப்பாள். அல்லது மருத்துவமனையில் பிற நோயாளிகள் பற்றி கேட்பாள். பசியைப் பற்றி வினவுவாள்.
அவள் மறுபடி பையனின் அறைக்குச் சென்றாள். பையன் இரு கைகளையும் நெஞ்சின் குறுக்கே கட்டியபடி கட்டிலில் சிரித்தபடி அமர்ந்திருந்தான். அவனது செந்நிற சடைமுடி தோள்களில் புரண்டு கொண்டிருந்தது. தேநீர்குவளையை ஜூலியாவிடம் நீட்டினான். அவள் அதைப் பற்றியபோது அவன் குவளையை விடாமல் பிடித்துக் கொண்டான்.
இது நியாயமில்லை இல்லையா?
அவள் மூச்சு ஒருகணம் தடைபட்டது; புன்னகைக்க முயன்றாள். எது நியாயமில்லை?
என் காயத்தை நான் உனக்கு காட்டிவிட்டேன், அவன் கேட்டான், உன் காயத்தை நீ எனக்கு காண்பிக்கவில்லையே?

Wednesday, June 20, 2018

பசியின் பிள்ளைகள் - Karl Iagnemma's Short Story - Children of Hunger

அத்தியாயம் – 1
சௌல்ட் செயின்ட் மேரி, 1822
துப்பாக்கிப்புகையின் மணம் நீரிணை மேல் மிதந்து வந்த அந்த இரவை அவள் நினைவுகூர்ந்தாள். துடிக்கும் நெருப்புத்தழல்கள் ஆங்காங்கே நிழல் போல் நடனமாடும் வழிப்போக்கர்களைச் சித்தரிக்கின்றன; அவ்வப்போது பழங்குடி இளம்பெண்ணொருத்தி நெருப்பின் முன் தோன்றி ஆடுகிறாள். வியாபாரிகளும் பழங்குடி ஆண்களும் ஒழுங்கற்ற சிறுசிறு வட்டங்களாக அமர்ந்திருக்க, பனிமூட்டம் போல் கொசுக்கூட்டம் மிதக்கிறது. ஒற்றை வயலினின் கிரீச்சிடும் ஸ்தாயி சாம்பல் நிற வானில் கலந்து மறைகிறது.
குருமார் தேவாலயத்தின் அருகே அவர்களது சிறுமரக்குடிலுக்குள் ஒரு முனகல்; ஈரச்சதையின் மேல்விழும் ஓர் அறையின் சத்தம்; சன்னல் வழி நழுவி, தலையணையில் பரந்து கிடக்கும் அவள் வெண்ணிற தலைமுடியைச் சுட்டும் நிலவு விரல். கூர்ந்த கவனத்துடன், மெல்லிய பட்டுச்சருகு போல் சுருக்கங்களுடன் மூடிக்கிடக்கும் தன் கணவனின் கண்ணிமைகளை வெகு அருகே ஜூலியா பார்க்கிறாள். அந்தக் காட்சி அவளை மயக்குகிறது; ஏனோ மேலும் கிளர்ச்சியூட்டுகிறது. அவன் சட்டை அவள் கைகளில் கசங்குகிறது.
அப்போது மரக்கதவின் மேல் யாரோ படபடவென தட்டும் ஒலி: கரடுமுரடான பிரெஞ்சு மொழியில்: டாக்டர், அவசரம், கதவை திறவுங்கள்! தயவுசெய்து, டாக்டர்!
அவள் தனது கால்களை அவன் பின்புறம் பின்னிக்கொண்டாள். முடித்துவிடு, என்றாள்.
என்னை எழுந்திருக்க விடு.
வில்லியம், போகாதே, தயவுசெய்து.
கதவுக்குப்பின் இப்போது சத்தம் உரத்துக் கேட்கிறது, டாக்டர் கொஞ்சம் வருகிறீர்களா? தட்டலில் சமையலறை கொண்டியில் தொங்கும் சட்டிகள் ஆடி ஓசையெழுப்புகின்றன.
ஒரு நிமிடம்! அவள் கால்களை விலக்கிவிட்டு தள்ளாடி எழுந்தான். முட்டாள் பெண்ணே, என்றவாறு தன் கால்சட்டையை அணிந்து கொண்டான். இது போன்ற நேரங்கள் எவ்வளவு முக்கியம் என்று தெரியுமா உனக்கு?
வியர்வை பூத்த புருவத்தை அவள் நீவிக்கொண்டாள். யாராவது கலப்பின ஆள் வயிற்றுவலி என்று வந்திருப்பான்.
வில்லியம் எரிச்சல் தெரிய தனது காலணிகளை அணிந்து கொண்டான். சிறுபிள்ளை போல் நடந்து கொள்கிறாய்; அதற்கேற்றாற்போல் நான் நடத்தினால் குறை மட்டும் பட்டுக்கொள்கிறாய். யாருக்கும் ஒன்றும் ஆகியிருக்கக் கூடாதென்று வேண்டிக்கொள்; உன்னைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்காமல்.
தயவுசெய்து அப்படி சொல்லாதே வில்லியம். மனைவியுடன் படுக்கையில் இருக்கச்சொல்வது அப்படியொன்றும் மோசமான வேண்டுகோள் இல்லையே?
பதிலொன்றும் பேசாமல் ஓர் உறுமலுடன் தனது தோல்பையை எடுத்துக்கொண்டு நடந்தவன் கதவருகே சிறிது நிதானித்தான். கழுத்து நனைந்திருக்க, நெற்றியில் கேசம் வியர்வையில் ஒட்டிக்கிடந்தது. ஓங்குதாங்கான உடல்; எளிதில் எரிச்சலடையக்கூடியவன், தனது வேலையில் ஒரு வீம்புடன் ஈடுபடக்கூடியவன். குறிப்பேடுகளில் மணிக்கணக்காக எழுதிக் கொண்டிருக்கும்போது அவனை அழைப்பதோ அல்லது அவனில்லாத நேரங்களில் அவனது பாடப்புத்தங்களை தூசித்தட்ட தொடுவதோகூட அவளுக்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. அறையின் ஒரு மூலையில் தோல் உறையிட்டு ஒருவித வாசனை பரப்பியபடி குவிந்து கிடக்கும் புத்தகங்களை பார்க்கும்போது, ஒருசேர அவனது ஈடுபாட்டையும் அது அவளுக்கு உண்டாக்கும் தொல்லையையும் நினைத்துக் கொள்வாள். சில மாலைகளில், நிமிராமல் உணவை முடித்து, ஒரு வார்த்தையும் பேசாமல் சட்டையை மாற்றிக்கொண்டு படுக்கையில் சரிந்துறங்கும் அவனுக்கு தானொருத்தி இருப்பதே நினைவிருக்கிறதா என்றுகூட சமயங்களில் சந்தேகமாக இருக்கும். ஆனால் குறிப்பேட்டில் விசித்திரமான சொற்கள் நிறைந்த, அவர்களிருவரும் ஆளற்ற கடற்கரையில் தனித்திருப்பதாக, அவன் எழுதி வைத்திருக்கும் கவிதைகளை சிலசமயம் படிக்க நேரும்போதெல்லாம் ஜூலியாவுக்கு எங்கோ ஒருமூலையில் நம்பிக்கை துளிர்க்கும்.
ஒரு வார்த்தையும் கூறாமல் திறந்த கதவை அடைத்தவாறு அவன் வெளியேறினான்.
டெட்ராய்ட், 1860
ஜூலியாவைப் பற்றி பல வருடங்களாக நினைத்துக் கொண்டிருப்பதாக டாக்டர் பெயர்ஸ் கூறிக் கொண்டிருந்தார். காப்பியின் கசப்பான மணம் சுவாசத்தில் வீச அவளருகே சோபாவில் அமர்ந்திருந்தார். நாற்பது வயதிருக்கலாம் என்று ஜூலியா அனுமானித்தாள். ஆனால் தாடியை இளமையாக அலங்காரம் செய்துகொண்டு ஒரு துடுக்கான தன்னம்பிக்கையுடன் பேசுவதை பார்த்தால் குறைத்துச் சொல்லலாம் போலிருந்தது. டாக்டர் ஜேக்கப்ஸனையும் டாக்டர் லீயையும் விட இவர் பரவாயில்லை. அவர்களிருவரும் ஏற்கனவே இரவுணவுக்கான அழைப்பை நிராகரித்து விட்டவர்கள்.
“என்னைப் போல் ஒரு முதிய பெண்ணுக்கு துணையாக வருவதற்கும் தாராள மனம் வேண்டும்,” என்றாள் ஜூலியா. “அறை முழுதும் குடிபோதையில் பழம்பெருமை பேசிக்கொண்டிருக்கும் டாக்டர்கள் நிரம்பி வழியும் இது போன்ற மாலைகள் எளிதில் போரடித்துவிடக்கூடும்.”
“அது என் கௌரவம்,” என்றார் டாக்டர் பெயர்ஸ். “நகரின் அத்தனை முக்கியமான மருத்துவர்களும் இன்றிரவு இங்கிருப்பார்கள்; மட்டுமல்ல – உங்களுக்கொன்றும் அத்தனை வயதாகிவிடவில்லையே. உங்கள் மலர்ச்சியும் இளமையும் அமைந்தால் எந்த இளம்பெண்ணும் அதிர்ஷ்டசாலி என்றே கூறுவேன்.” அவர் பார்வை ஒரு நொடி அவளது க்ரினொலின் உள்ளாடையைத் தடவிச் சென்றது.
ஓரளவு இன்னும் அழகாகவே இருக்கிறேன் என்று அவள் நினைத்துக் கொண்டாள். கூந்தல் நரைத்து விட்டாலும் பளபளப்பும் அடர்த்தியும் குறையவில்லை. அவள் கணவனின் சக மருத்துவர்கள் எத்தனை பேர் ஓர் எதிர்பார்ப்போடு கூடிய ஆர்வத்துடன் அவளைப் பார்த்திருக்கிறார்கள்? ப்ரூசார்ட், மெக் ஆடம், லோவல். கிப்சன் – அந்த அழகிய இளைஞன். வேறுவேறான மனிதர்களாக இருந்தாலும் அவர்களின் பொறாமையின் அச்சு வில்லியம் செய்துவந்த அந்த ஆராய்ச்சி.
“நான் அவருடைய மாணவன்,” தொடர்ந்தார் டாக்டர். “அற்புதமான ஆள் உங்கள் கணவர் என்று எங்கள் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. ஒரு நாள் – எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது – அவர் அன்று எடுக்க வேண்டிய பாடத்திற்கான குறிப்பேட்டைக் கொண்டுவர மறந்துவிட்டார் என நினைக்கிறேன், எந்த உதவியும் இல்லாமல் நினைவிலிருந்தே அன்று இரண்டு மணிநேரம் பாடம் நடத்தினார் என்றால் பாருங்கள். நம்ப மாட்டீர்கள், அந்த பாடத்தின் குறிப்புகளை இன்னும்கூட வைத்திருக்கிறேன்!”
குறுஞ்சிரிப்புடன் தன் கோட் பைக்குள்ளிருந்து ஒரு சிறிய, கசங்கிய செந்நிற தோலட்டை போட்டிருந்த, முனைகளும் முதுகும் வளைந்துபோன ஒரு புத்தகத்தை எடுத்தார். வில்லியம் பார்பர் M. D எழுதிய ‘பசி பற்றிய பரிசோதனைகள் மற்றும் செரிமானத்தின் உடலியல் கூறுகள்’. ஜூலியா அதை வாங்கி புரட்டி பார்த்தாள்.
தான் அதைப் படித்ததில்லை என்று ஒரு சிறு குற்றவுணர்ச்சியுடன் எண்ணிக்கொண்டாள். ஆனால் அதன் பெரும்பாலான பக்கங்கள் அவளை பல இரவுகளில் படுக்கையில் தனியே புரள விட்டுவிட்டு வில்லியம் எழுதிய குறிப்புகளிலிருந்து உருவானவை என்பது அவளுக்குத் தெரியும். மறுநாள் காலைகளில் பேச்சொன்றும் இல்லாமல் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு ராணுவ மருத்துவமனைக்கு அவன் போய்விட்டபிறகு ஜூலியா மேசையிலிருந்து அந்தக் குறிப்புகளை எடுத்து படிப்பாள்.
டாக்டர் மேலே தொடர்ந்தார்: “ஒரு நான்கு வருடங்களுக்கு முன் பேராசிரியர் பென்சன் வீட்டில் நானும் உங்கள் கணவரும் இரவுணவு அருந்திக் கொண்டிருந்தோம் – அப்போதுதான் முதல்முதலாக உங்களைப்பற்றி அவர் பேசிக் கேட்டேன் .”
வியப்பை மறைத்தபடி அவள் கேட்டாள், “என்ன சொன்னார் என்று தெரிந்து கொள்ளலாமா?”
“அவரது ஆராய்ச்சிகளுக்கு நீங்கள் அதி முக்கியம் என்றார். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது: ‘ஒவ்வொரு இளம் மருத்துவனும் தன் முதல் கருவியை வாங்குவதற்கு முன்பே செய்ய வேண்டியது, நான் செய்தது போல எதற்கும் ஒத்துப்போகிற ஒரு மனைவியைப் அடைவதுதான். அதுவே உங்கள் மருத்துவப்பணியில் செய்யக்கூடிய ஆகப்பெரிய முதலீடு.”
சட்டென்று எழுந்த சினம் ஜூலியாவிற்கு விரக்தியாக மாறியது. ஆம், முதலீடுதான். மிகச்சரியான வார்த்தை; மிகச்சரியான வர்ணனை. அவனது பணி முன்னேற்றத்திற்கு ஈடாக அவளுக்கு வில்லியம் என்ன கொடுத்தான்? நிச்சயமற்ற கணங்களை எண்ணிக் காத்திருந்த கணக்கற்ற நாட்கள்; ஒவ்வொரு சிறு சந்தோஷத்தையும் தொடர்ந்து ஆவலோடு ஓடி ஏமாற்றத்திலும் வேதனையிலும் முடிந்த நாட்கள். ஒரு மகன், ஜேக்கப், பிறந்ததனால் இந்த ஏற்பாடு அவ்வளவு ஒன்றும் மோசமில்லையோ என்னவோ?
“உங்கள் அன்பிற்கு நன்றி. நான் கிளம்ப வேண்டும், என் மகன் அங்கே இரவுணவிற்கு வருவதற்குள் நான் அங்கிருக்க வேண்டும்.”
“சரி, வண்டியை வரச் சொல்கிறேன்,” தடுமாறியபடி எழுந்தார் டாக்டர் பெயர்ஸ்.
புத்தகத்தை வாங்கும்போது அவள் கையை உரசிச்சென்றது அவர் கை. அந்த கணநேர வெம்மை அவள் கையில் படிந்திருக்க, முன் கதவைச் சாத்திக்கொண்டு அவர் வெளியேறும் சத்தம் கேட்டபிறகு அவள் மெல்ல படியேறி வில்லியமின் நூலகத்திற்குள் நுழைந்து கதவைச் தாழிட்டுக்கொண்டாள். சன்னமான செந்நிற ஒளி அரைகுறையாக மூடப்பட்டிருந்த சன்னல்வழி அறைக்குள் வழிந்து கிடந்தது. ஓர் ஈர மற்றும் பைப் புகை வாசம் காற்றில் விரவிக் கிடந்தது. அவன் கைவிரல் ரேகைகளைப்போல சன்னமான சுருக்கங்களுடன் பலவகையான மருத்துவ குறிப்பேடுகள்; தோல் அட்டையிட்ட புத்தகங்கள். குளிர் அறையை நோட்டம்விட்ட ஜூலியாவிற்கு அவளது முதலிரவு நினைவில் தோன்றியது. படுக்கையில் போர்வைக்குள் உடலெல்லாம் வலிக்க அவள் படுத்திருக்கிறாள்; வில்லியம் ஜன்னலுக்கு அருகே நின்றுகொண்டு தனது இதயத்துடிப்பை ஸ்டெதாஸ்கோப் வைத்து தானே கேட்டு கொண்டு தொலைவிலெங்கோ பார்த்துக்கொண்டு மேற்சட்டையில்லாமல் நின்றுகொண்டிருக்கிறான். என்ன ஓர் அற்புதம், அவள் எண்ணிக்கொண்டாள், எத்தனை உறுதியுடன் இருந்திருக்கிறேன், எவ்வளவு நம்பிக்கை, என்னுடனே எத்தனை போராட்டம். இருந்தும், இதோ இந்த இரவில் இங்கு நின்றிருக்கிறேன். மதகுருக்கள் சொல்வதுபோல் உலகமொன்றும் அத்தனை பயங்கரமானதில்லை போலும்.
***
மரக்குடிலின் நோயாளிகளுக்கான அறையில் அவர்கள் அடிபட்ட அந்தப் பையனைக் கிடத்திவிட்டுப் போன பிறகான நான்கு நாட்களுக்கு அவன் காய்ச்சலுக்குள் விழுவதும் நினைவு திரும்புவதுமாகக் கிடந்தான், ஏதேதோ பிதற்றிக்கொண்டும் உதடுகள் வலியில் சுளித்துக் கொண்டும். ஓரிரு வேளைகளில் அவன் அம்மாவென்று அலறியதில் ஜூலியா திடுக்கிட்டு ஓடிப்போய் பார்த்ததுமுண்டு. ஐந்தாம் நாள் காலை, அறையின் கதவுவழியே பார்த்தபோது அவள் கணவன் பையனின் காயத்தை துடைத்து மருந்திட்டுக் கொண்டிருக்கக் கண்டாள்.
கதவை சாத்திவிட்டு சாப்பிட்ட பாத்திரங்களைச் சேகரித்துக்கொண்டு கழுவச் சென்றாள் . குடில் சிறியதுதான். ஒரு சேமிப்பறை, ஒரு புகை படிந்த சமையலறை, ஒரு சிறிய படுக்கையறை மற்றும் நோயாளிகளை வில்லியம் பார்க்கும் அறை – அனைத்தும் நடுவிலிருந்த கணப்புமேடையைச் சுற்றி. தனியே மேசையேதும் இல்லாததால், சமையல் மேடையின் மீதே ஜூலியாவின் பொக்கிஷங்கள் வீற்றிருந்தன; பீங்கான் குடுவைக்குள் பதப்படுத்திய போன்சாய் மரமொன்று, தலையை சாய்த்துப் பார்க்கும், பஞ்சடைக்கப்பட்ட சிறுகுருவியொன்று; குழலூதும் தேவதை படம் போட்ட சிறுபெட்டி ஒன்று. தனது வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் பார்க்கவென்று அவள் டெட்ராய்ட்டில் இருந்து கொணர்ந்தவை. ஆனால் ராணுவ மருத்துவமனையில் வெறும் சிப்பாய்களும், வியாபாரிகளும், கருநிற தலைமுடி கொண்ட பழங்குடிமக்களும் புழங்குமிடத்தில் அவள் வீட்டிற்கு ஏது விருந்தாளிகள்? அவள் மட்டும் வீட்டின் மரப்பலகைகளின் ஒவ்வொரு முடிச்சையும் கீறலையும் அறிந்துகொள்ளவே நேர்ந்தது.
தண்ணீரைக் கொதிக்கவைத்துவிட்டு பாத்திரங்களை சுத்தம் செய்தாள். இனி வில்லியமின் கையுறைகளை தைக்க வேண்டும், படுக்கையறையை கழுவி சுத்தம் செய்யவேண்டும். பொதுவாக வெறுத்துப்போக வைக்கும் இந்த வேலைப்பட்டியல் அன்று ஏனோ வயிற்றில் ஒரு அமிலச்சுரப்பாக, வாயில் கசப்பாக உருவெடுத்தது.
பாத்திரங்களை அடுக்கி வைத்துவிட்டு, வில்லியமின் மேசையிலிருந்து தாளொன்று உருவி கடிதமெழுதத் தொடங்கினாள்.
ஆகஸ்ட் 10, 1822
அன்பும் அற்புதமுமான என் அழகிய சூசனுக்கு,
இன்று காலை ஒரு நூறு அணில்கள் என் வயிற்றுக்குள் ஓடி விளையாடுவதுபோல் ஒரு படபடப்புடன் கண் விழித்தேன். ஹென்றியை நீ சுமந்தபோது இப்படித்தான் உனக்கும் இருந்ததா? விரைவில் எழுதுவாயா? தினமும் எழுதுவேன் என்றாய், நான்கே கடிதங்கள்தான் வந்தன. என்ன கொடுமை! தனியே பேசிக்கொண்டு அலைகிறேன் என்பது உனக்கு தெரியும்; அதைவிட உன் கடிதங்களை படிப்பது மேலென்றும் உனக்குத் தெரியும். இருந்தும் இப்படிச் செய்கிறாய்!
எங்களுடன் ஒரு கனடிய படகோட்டும் பையனொருவன் இருக்கிறான், வயிற்றில் சுடப்பட்டு படுகாயத்துடன். சாவுடன் போராடிக்கொண்டு. வில்லியம் அவன் நினைவாகவே, அவனையே கவனித்துக்கொண்டு இருக்கிறார். டெபோராவின் தமக்கை மகனைத் தெரியுமல்லவா – அந்த உயரமான முரட்டுச் சிறுவன்? இந்தப் பையனும் அவனை போல…
அறைக்குள்ளிருந்து வெளிப்பட்ட வில்லியம் இரத்தக்கறை படிந்த துணியை மேசைமேல் எறிந்துவிட்டு, கோட்டை எடுத்து அணிந்துகொண்டான்.
ஏதோ சத்தம் கேட்டதே? பையன் விழித்திருக்கிறானா? என்றாள் ஜூலியா.
அவன் படுக்கையருகே மணி வைத்திருக்கிறேன். அடித்தானென்றால், வெண்ணிறமான உணவு ஏதேனும் கொடு – ரொட்டி, பால், உருளைக்கிழங்கு, பாலாடைக்கட்டி இப்படி. புரிந்ததா?
வெண்ணிற உணவு.
வில்லியம் தனது காற்சட்டைப்பையை தட்டிக் காண்பித்தான். இந்த வீட்டில் ஒரு சுத்தமான கைக்குட்டைகூட இருப்பதில்லை…
கோட் பொத்தான்களை அணிந்துகொள்வதை பார்த்தாள். அவன் கை மணிக்கட்டில் இரத்தக்கறையை பார்த்தாள். நாளை துவைத்து வைக்கிறேன், என்றாள்.
அவளை உற்றுப்பார்த்தான். அவன் பார்வை அவள் எழுதிக்கொண்டிருந்த கடிதத்தின் மேல் விழுந்தது. உன் அக்காவையும் எட்வர்டையும் கேட்டதாக சொல்லு. புதுப் பத்திரிக்கைகள் உனக்கு அனுப்பச் சொல்லு. எவ்வளவு நாள்தான் நீயும் பழையதையே படித்துக்கொண்டிருப்பாய்?
ஒரு கணம் அன்று காலையில் எழுந்த படபடப்பை அவனிடம் சொல்லவேண்டுமென தோன்றியது. வேறொன்றும் இல்லை, எல்லாம் பதட்டமென்று ஏதாவது தூக்க மருந்தைக் கொடுத்து விடுவான் என்று பட்டதால் சொல்லும் எண்ணத்தை கைவிட்டாள். எனக்கே உறுதியாகட்டும், பின் அவனிடம் சொல்லி அவன் முகம் மலர்வதை பார்க்கிறேன்.
சரி, எழுதுகிறேன். உங்கள் மருத்துவப் பத்திரிக்கைகள் வந்திருந்தாலும் அனுப்பச் சொல்கிறேன்.
எங்கோ நினைவாக புன்னகைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறி ஏதோ நினைவாகவே நடந்துபோகும் தன் கணவனைப் ஜன்னல் வழியே பார்த்தாள்.
அவர்களின் முதல் சந்திப்புகளிலேயே அவனுக்குள்ளிருந்த இறுகிய தன்மையை அவள் உணர்ந்தாள். ஆனால் அவன் கடிதங்கள் அவளுக்குப் பிடித்திருந்தன. ‘இன்றிரவு நான் தனிமையில் நடந்து வரும்போது விண்மீன்களை பார்க்க விரும்பவில்லை; உன் கண்களின்முன் அவை எம்மாத்திரம்?’ அன்பின் வெளிப்பாட்டில் சிறிதென்ன பெரிதென்ன? அவனால் இன்னும் அவள்மேல் ஈர்ப்புடனும் அன்புடனும் இருக்கமுடியுமென்று அவளுக்குத் தோன்றியது.
டெட்ராய்ட் நகர் மருத்துவக்கழகத்தின் விருந்து நடன முதல் சந்திப்பின்போது அவள் கூறியது அவளுக்கு நினைவுக்கு வந்தது. மருத்துவர்கள் தேவதைகள்; வீழ்ந்த தேவதைகள். வலியும் துயரும் கொண்டு வரும் தேவதைகள். வெறும் ஒரு பார்வையிலேயே துக்கம் தருவிக்கக் கூடியவர்கள்… அவன் சங்கடத்துடன் புன்னைகைத்தான். ‘என்னைப் பார்ப்பது எப்படியிருக்கிறது?’ அவளும் பதிலொன்றும் சொல்லாமல் புன்னைகை செய்திருக்கிறாள். அவனது முப்பத்தி ஐந்து வயதிற்கு அவள் பதினான்கு வருடங்கள் இளையவளாய் இருந்தும், அபாரமான தன்னம்பிக்கை கொண்டிருந்தாள். ஆட அழைப்பான் என்ற எதிர்பார்ப்பை பொய்யாக்கிவிட்டு அவன் திடீரென்று எழுந்து, விரைந்து நடன அரங்கை விட்டு வெளியேறியதும் நடந்தது.
இப்போது அவனது மேசைக்குள்ளிருந்து அவனது குறிப்பேட்டை எடுத்து நேற்றைய இரவின் பதிவை படிக்கத் தொடங்கினாள்.
ஆகஸ்ட் 9, 1822
இன்று மாலை பையனின் சுரம் நின்றது; காயத்தின் வீச்சமும் குறைந்திருக்கிறது. இரத்தத் தமனியின் அழுத்தத்தைக் குறைக்க பதினைந்து அவுன்ஸ் இரத்தம் வெளியேற்றப்பட்டது. காயத்தின் பிளவைப் பிரித்து ஆராய்ந்ததில், பட்டாணி அளவுள்ள மூன்று ரவைக்குண்டுகள் தென்பட்டன. காய்ந்த வெளித்தோலை பிரித்தெடுக்க தொடங்கியிருக்கிறது. காயம் பொருக்கோடி இப்போது பார்ப்பதற்கு சுருக்கங்கள் நிறைந்த ஒரு வாய் போலிருக்கிறது. நாளை காலை வெளிச்சத்தில் அவன் உணவெடுத்த பிறகு, வெளியில் கொந்தளிக்கும் கடலைப் போல் நொதித்துப் புரளும் அவன் வயிற்றுக்குள் பார்க்கவேண்டும்.
பையனின் உடல்நிலை பிரமாதம்: அவனது செரிமான உறுப்புகளின் உட்புறச் செயல்பாட்டை என்னால் தெளிவாக பார்க்க முடிந்தது. டாக்டர் டங்க்ளிசனோ அல்லது டாக்டர் மகெண்டியோ அவர்களது கனவில்கூட இப்படியொரு வாய்ப்பை கற்பனை செய்துபார்த்திருக்க முடியாது.
ஹார்ன்பெக்குக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
கடலை நுரைக்கச் செய்யும்
அந்தக் காற்றில்
மலைக்குன்றின் முகட்டில் நின்றேன்
கடவுளின் பார்வையின் கீழ், தனியே
என் மன்றாடல்கள்
நீள்வெளிவானின் விரிவில்
கலந்து மறைய
அழைப்பு மணி ஒலித்தது. ஒரு கணம் தானில்லாத வில்லியமின் கவிதை உறுத்த, குறிப்பேட்டை மூடிவைத்துவிட்டு நோயாளிகள் அறைக்கதவை திறந்தாள்.
பையன் விழித்துக் கொண்டுதானிருந்தான். கண்கள் சுரத்தால் கனத்திருந்தன. அவன் தொடைகள் மேல் ஒரு போர்வை போர்த்தியிருக்க, வெறும் கால்களும் கைகளும் சிறிய கட்டிலின் இருபுறமும் விரிந்து கிடந்தன. கறைபடிந்த சாம்பல்நிற கட்டு இடையைச் சுற்றி.
காலை வணக்கம், என்றாள். இப்போது எப்படியிருக்கிறது?
அவளை வெறித்துப் பார்த்தான். ஒரு பிணத்தைப் போல.
அவன் கன்னங்கள் சதைப்பிடிப்புடன் வெளுத்திருந்தன. மெல்லிய ஆரஞ்சுநிற தாடி. வளைந்த உதடுகளுக்குள் முன்னிரண்டு பற்களில்லை. கழுத்திலிருந்து இருபுறமும் விரைத்த தசைநார்கள் செம்புள்ளிகள் படர்ந்த தோள்களில் பிணைந்தன. பதினேழு அல்லது பதினெட்டு வயதிருக்கலாம். பையனுமில்லாமல் இளைஞனுமில்லாமல், ஏதோ ஒரு பக்கத்திற்கான தகர்ந்த இலட்சியம் போல். அவன் பெயர் கில்லாமோ ரோலு.
ஒரு குவளை தண்ணீர் வேண்டுமா?
ரம். பற்களில்லாத இடைவெளியினூடே வார்த்தைகள் துப்பியதுபோல் விழுந்தன. அல்லது பிராந்தி. கொஞ்சம் மாமிசம் .
எங்களிடம் ரம் இல்லை. என்னால் பாலும் ரொட்டியும் கொண்டு வர முடியும், என்றாள்.
அதற்கு நீ என்னை இன்னொரு தடவை சுட்டுவிடலாம். சிரிக்க முயற்சி செய்தான். சிரிப்பு தவிர்க்கவியலாத இருமலில் முடிந்தது. சமையலறைக்குப் போகத் திரும்பினாள் ஜூலியா.
கொஞ்சம் இரு. இரு விரல்களை உயர்த்தினான். நான் அதைப் பார்க்கவேண்டும்.
அவள் தயங்கினாள். எங்கே இந்த வில்லியம்? மருத்துவமனையில் காசநோயில் உருக்குலையும் படைவீரர்களைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். அல்லது, சதுப்புக் காட்டுக்குள் ஏதேனும் வேர்களைத் தேடிக் கொண்டிருக்கலாம். அல்லது படைவீட்டுக்குள்ளே, கைகளை பின்னே கட்டிக்கொண்டு, அவர்களது வீட்டிலிருந்து ஒரே நேரத்தில் நூறடியோ அல்லது ஆயிரம் மைல் தூரத்திலோ நடந்து கொண்டிருக்கலாம்.
கட்டிலருகே முக்காலியை நகர்த்திப் போட்டு அமர்ந்தாள். அவனது இடையைச் சுற்றியிருந்த கட்டுத்துணியை மெல்ல அவிழ்த்தாள். பின் காயத்தின் மேல் காய்ந்துபோயிருந்த துணியையும் விலக்கினாள்.
மெதுவே, பையன் முனகினான். வலிக்கிறது.
பாத்திரத்தை எடுத்து அவன் வயிற்றின் மீதிருந்த துணியின் மீது நீரைச் சொட்ட விட்டாள். வெண்ணிற வயிற்றுப் பிரதேசத்தில் நீலநிற நரம்புகள் குறுக்கும் நெடுக்கும் பரவிக் கிடந்தன. துணியைப் பிய்த்து எடுத்தாள். இன்னும் ஆறாத, மென்சிவப்பில் திறந்துகிடக்கும் காயம் நெஞ்சின் கீழே தோன்றியது. காயத்தைச் சுற்றிலும் தோல் உரிந்தும், நெருப்பில் பொசுங்கியது போல் கறுத்துமிருந்தது. திறந்து கிடந்த காயத்திற்குள், வளைந்த நெஞ்செலும்பொன்றின் கீழ் செந்நிற நுரையீரலின் நுனி, ஜூலியா பார்த்துக் கொண்டிருக்கும்போதே சுருங்கி, விரிந்தது.
அவள் கணவனின் குறிப்பேட்டின்படி அது ஒரு விபத்து. துப்பாக்கியின் கோளாறால் ஏற்பட்ட வெடிப்பில் துணிச்சுருளைகளும், பறவைகளின் மிச்சங்களும் அவனது நெஞ்சுக்குள் புதைந்து விட்டன. அவனது சட்டை துப்பாக்கிக்குழலின் நெருப்பில் எரிந்துவிட்டது. வில்லியம் எழுதியிருந்த அன்றைய இரவின் குறிப்பு சுருக்கமாகவும், கச்சிதமாகவும் இருந்தது:
காயத்தின் வெளிப்புறம் இருந்த பிறபொருட்கள் துடைத்து சுத்தம் செய்யப்பட்டன. நொதித்த பௌல்டிஸ் மற்றும் அம்மோனியா கரைசலின் கலவை பூசப்பட்டது. காயத்தை பரிசோதிக்கையில், உள்ளிருந்து ஏறக்குறைய செரிமானமாகியிருந்த, கஞ்சி போன்றதொரு திரவம் வழிந்து தரையில் சிந்தியது. நிச்சயம் நாளைக் காலைக்குள் இறந்துவிடுவான்.
அதை மூடிவிடு, அவன் மூச்சிரைத்தான்.
அவள் ஒரு புது கட்டுத் துணியை காயத்தின்மேல் வைத்தாள். காயத்தின் வீச்சம் அவன் உடலின் வெங்காய வாடையுடன் கலந்து வீசியது.
வலது கையை நெஞ்சின் மேல் வைத்தவாறு கேட்டான், எப்பொழுது துடுப்பு வலிக்குமளவிற்கு எனக்கு தெம்பு வரும்?
எனக்குத் தெரியாது, மன்னித்துக் கொள்.
அவள் கையிலிருந்த அழுக்கு கட்டுத்துணியைப் உற்றுநோக்கினான். உன் பேரென்ன?
ஜூலியா.
ஜூலியா, திரும்ப சொல்லிக்கொண்டான். இங்கு கிடந்த இந்த இரவுகளில், உன்னை என் கனவுகளில் பார்த்திருக்கிறேன். நிச்சயமாகவே நீயொரு தேவதைதான்.
(தொடரும்)

பசியின் பிள்ளைகள் - அத்தியாயம் 1

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் எனது மொழியாக்கச் சிறுகதை:

பசியின் பிள்ளைகள் - அத்தியாயம் 1
(Children of Hunger – ஆங்கில மூலம் Karl Iagnemma)

https://padhaakai.com/2018/06/17/children-of-hunger-1/

Pandit Venkatesh Kumar and Raag Hameer