Thursday, May 5, 2016

எதற்காக எழுதுகிறேன்?

எதற்காக எழுதுகிறேன்?

எழுதுவதின் லௌகீக தேவை இல்லாத என் போன்றோரிடம் எழுத்தின் தேவை பலவாறாக இருக்கலாம்; அவை காலப் போக்கில் மாறவும் செய்யலாம். நான் எழுதத் தொடங்கிய நாட்களில் இருந்து, இதோ இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் இன்று வரை எனக்கான எழுத்தின் தேவையும் மாறியே வருகிறது, என் எழுத்துக்களைப் போலவே.

மூன்று கால கட்டங்கள்; மூன்று விதமான தேவைகள். மூன்றையும் ஆராய்ந்து பார்க்கும்போது நான் எனக்காக மட்டுமே எழுதுகிறேன் எனப் புரிகிறது.

பதின்ம வயதின் இறுதிக்காலத்தில், புறக்கணிப்பும் (அல்லது அவ்வாறு நினைத்துக் கொள்கிற) அதனால் விளைந்த கொதிப்பும், கொந்தளிப்பும், உணர்வெழுச்சியும், மயக்கமும், பருவமும் அதன் தன்வயப்படலும், கற்று கடந்து விடக்கூடிய, கண்முன் தெரிவதாக நம்பிய தூரங்களும், அறிவின் கர்வமும், சகங்களின் அலைக்கழிப்பும், புலனழிவும், அழிந்து உருமாறுதலுமாக இருந்தபோது எழுதவாரம்பித்தேன்.

எழுத்து அப்போதெனக்கு வலியோடு கூடிய போகம் போல் காட்சியளித்தது. என்னிலிருந்து திமிறி விடுபட்டு, நானாக, என்னில் பகுதியாக, மூச்சுப்பரிதலாக ஆசுவாசம் தந்தது எழுத்து. சூனியங்களில் நிலைத்து, போதை போல் தொலைந்து நின்ற காலங்களில் மீண்டு வரும் வழியாகவும் எழுத்தே இருந்தது.

ஏதும் எதிர்பாராமல் எதுவும் அணிந்து கொள்ளாமல் நானாக இருக்கிற கட்டற்ற விடுதலை உணர்வே எழுத்தையும் என்னையும் பிணைத்திருந்தது.

வேண்டியன தயக்கமின்றி உரைத்தலும், கசடின்றி புனைவின்றி, சிலசமயம் சமநிலை பிறழ்ந்த, எளிதில் கோஷங்கள் போல் தோன்றிவிடக்கூடிய, ஆரவாரமான வெளிப்பாடு அன்றென் எழுத்தின் அடையாளம். அதைத் தரவேண்டிய தேவை எழுத்துக்கு இருந்தது.

காதலும் சகமும் பற்பல உயர்வுகளிலும் தாழ்வுகளிலும் என்னைக் கடத்திச் சென்ற இரண்டாவது காலகட்டத்தில் எழுத்தின் தேவை எப்படியிருந்தது?

ஓர் அடைக்கலமாக, வலியை கசந்து உமிழ்ந்தாலும் சகித்துக்கொள்கிற ஒரு தாதியாக, இரவுகளின் ஆயிரக்கணக்கான கண்ணீர்த்துளிகளை உள்ளிளுத்துக்கொள்கிற வெம்மையான அரவணைப்பாக எழுத்து மாறி விட்டிருந்தது.

பார்க்குமெவற்றிலும் வாழ்வின் உணர்வுகளை சித்தரித்து வடித்துவிடக் கூடிய ஒரு நிரப்பியாக எழுத்து உருமாறியிருந்தது.

இன்றோ, ஆயிரம் உறவுகள் சூழவிருந்தாலும், உள்ளளவில் தனிமை உணர்வதும், அத்தனிமையின் நிறைவில் மகிழ்வதுமான இந்நிலையில், எழுத்தென்பது என்னை எனக்கு பிரதிபலித்துக் கொள்ளும் ஓர் ஆடியாக மாறியிருப்பதைக் காண்கிறேன்.

சூனிய தரிசனங்கள், உறவுச் சிக்கல்கள், மரண பயங்கள் ஆகியவற்றின் உறுத்தல்கள் மெதுமெதுவே மட்டுப்பட்டு, மனிதம் மட்டுமேயான கருதுகோள் எதிலும் தோன்றும்போது, மனிதத்தின் ஒற்றைத்துளியான என்னை இம்மனிதத்தில் எப்படி பொருத்திப் பார்த்துக் கொள்வது என்று (இன்னும் கூட) சுய பரிசோதனை செய்துகொள்கிற ஓர் ஆடியாக எழுத்தின் தேவை இன்றிருக்கிறது.

நாளை, உயிரின் மதுவாக, கடைவழியின் இறுதிச்சுவையாக எழுத்து என்னுடன் பயணிக்கும் என்ற நம்பிக்கையில் இன்னும் எழுதுகிறேன். எழுதுவேன்.

Monday, April 25, 2016

Padhaakai

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை - 'தேவதைகளின் இன்றைய களம்'  - https://padhaakai.com/2016/04/24/angels/

தேவதைகளின் இன்றைய களம்

பலிகளம்
தயாராகி விட்டது 

களமெழுதி திரையிறக்கி 
வண்ணமும் சுண்ணமும் சார்த்தி 
நான்மூலைகளில் 
தீபமும் தூபமும் பொருத்தி 
கொட்டும் முழக்கும் கூட்டி 
பலிகளம்
தயாராகி விட்டது 

அம்பும் வில்லும் 
வாளும் சூட்டி 
இளித்தும் அழுதும் 
இன்முகம் காட்டி
கனலென எரியும் 




























கண்கள் உருட்டி
காற்றில் நடிக்கும் 
உடைகள் பூட்டி 
பெருந்தெய்வங்களும்
குறுந்தேவதைகளும் 
களமாடும் நியதி 

கூடி வருவன தனித்து 
ஆடி வருவன 
என 
அவையனைத்தும் 
இந்தக் கதிர்மங்கும் 
அந்தியில் 
களம் வந்து சேர்ந்துவிட்டன  

விடியும் வரை அல்லது 
பலிகள் விழும் வரை 
சந்நதம் அடங்காதாடும் 
அவை 
பெரும்பலிகள் 
கொள்ள வேண்டி 
சினந்தவை இணைவதும் 
கூடியவை பொருதுவதும் 
காத்திருக்கும் பலிகள் 
கண்முன் நிகழ்வதுமோர் 
ஆட்டமே 

யாசித்தல் போல் கையேந்தும் சில 
அபயஹஸ்தம் காட்டும் சில 
உரத்த பாவனைகளில் 
மறைந்து கொள்ளும் சில 
முஷ்டி மடக்கி 
காற்றில் சமர் புரிந்து 
பலிகளை மகிழ்விக்கும் சில 
எனினும் 
கவலை வேண்டாம் 
குழம்ப வேண்டாம் 
தேவதைகளின் தெய்வங்களின் 
தேவை ஒன்றே 

களம்புகக் காத்திருக்கும் 
பலிகளின் 
சித்தத்தின் உறுதியை 
அவ்வப்போது சோதித்துக் 
கொண்டே ஆடுமவை 
பலிகள் 
ஒருநொடி 
கண்கிறங்கி 
உணர்வு மயங்கி 
சிரம் சாய்ந்தால் 
துள்ளிப் பாய்ந்து 
முதற்பலி ஏற்கும் 

துடிக்கும் தாளம் 
துவளா ஆட்டத்திற்கும்
தடுமாறும் பிரக்ஞை 
நிலைதவறும் சித்தத்திற்கும் 
இடையில் 
காத்திருக்கிறது
இந்த பலிகளம் 

அவை ஆடும்
அந்தக் களம் காத்திருக்கும்
சித்தம் சோரும்வரை

Wednesday, April 13, 2016

தாவர வாழ்க்கை - ஒரு குறிப்பு

'வாடிய பயிரை கண்ட போதெல்லாம்' வாடியவனும், 'வெள்ளத்தனைய மலர் நீட்டம்' என்று உவமை சொன்னவனும் பிற உயிர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவே சொன்னார்கள். 

மரங்கள் தன் சுயம் இழப்பதில்லை; பொறாமையில் போட்டியிடுவதில்லை; தன்னளவிலான நிறைவும், நிறைவின் பெருமிதமற்ற வெளிப்பாடும் நிறைந்தவை. நீர்தேடி வேரனுப்பும் சாகசமும் மண்ணுக்கடியே. மானுடம் கற்றுக்கொள்ள குரலின்றி அநேகம் உரைப்பவை. 

ஒரு நான்-லீனியர் விவாதத்தின்படி, ஆறறிவில் குறைந்தவை இவ்வளவு ஆழமான பொருள் பொதிந்து நிற்கையில், ஆறறிவு கைகூடிய மானுடம் என்னவெல்லாம் சாதிக்கக் கூடும்? எத்தனை அணுக்கமான உறவு இப்புவியுடனும் சக மனிதருடனும், பிற உயிர்களுடனும் பேண இயலும்?

புலனடக்கத்தோடு, தீமைகளையும் துரோகங்களையும் செரித்து, நன்மை ஈயக்கூடிய ஒரு தாவரத் தன்மை மானுடத்திற்கு வாய்த்து விட்டால் எப்படியிருக்கும்...

Monday, April 11, 2016

தாவர வாழ்க்கை

என் குணங்களை 
யாவரும் அறியும்வண்ணமே 
வைத்திருக்கிறேன் 
விருட்சம் தன் 
அத்தனை இலைகளையும் 
கதிரொளிக்கென 
விரித்தே 
அடுக்கியிருப்பது போல் 

பழகுமிடம் தோறும் 
பகை பொறுத்து 
பண்பருளும் 
விவேகம் 
விதிக்கப்பட்டிருக்கிறேன் 
கரியமிலம் உண்டு 
உயிர்வளி தருதல் போல் 




















வேரோட்டம் போலவே 
பசை தேடி 
போராட்டம் 

பட்டையைச் 
செதுக்கினாலும் 
சுரத்தல் கூடும் 
பால் மரங்கள் போலும் 
சேதம் சகித்தல்

 
ஆறிலொன்று குறைந்தால் 
ஆகாதா என்ன 

Padhaakai

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை:
தாவர வாழ்க்கை - https://padhaakai.com/2016/04/10/arboreal/

Friday, April 8, 2016

‘நிச்சலனம்’ குறித்து...


பின்னிரவில் ஓர் அழைப்பு. நண்பனின் தாய் இரு வருட புற்றுநோய் போராட்டத்தின் முடிவில் மறைந்த செய்தி. என் தாய் மிக நீண்ட நோய்ப்படுக்கையில் கிடந்து மறைந்த  வருடத்திற்குள் இன்னொரு அன்னையின் ஈமச்செய்தி. சிறு வயதில் அவன் வீட்டிற்கு விளையாடச் சென்று எத்தனையோ நாள் அவள் கையால் பசியாறியிருக்கிறேன். கனிவே குரலும் உருவுமானவள்.

நண்பன் மிக அமைதியானவன்; உணர்வுகள் மீதான கட்டுப்பாடு பிடிகிட்டிய வரம் பெற்றவன். அழாமல், குரல் நடுங்காமல் சொன்னான் - 'அருகிலிருந்தேன், கையைப் பற்றியிருந்தாள். முகத்தைப் பார்த்தவாறிருந்தேன் - வேறெங்கும் நான் பார்த்திருந்திருக்கலாம். ஆனால் பார்க்கவில்லை. ஒரு விக்கல், இமையின் ஓர் அசைவு. என் கைவழியே போய்விட்டாள்'.

அவன் எப்படி அந்தக் கணத்தைக் கடந்தானோ தெரியாது. 

நான் எப்படி அந்தக் கணத்தைக் கடக்கப் போகிறேன் என்றும் தெரியவில்லை. 

யாரின் தாயும் யாவரின் தாய்தானே. 

Pandit Venkatesh Kumar and Raag Hameer