Monday, November 9, 2020

சொல்வனம் மின்னிதழில் வெளிவந்திருக்கும் மூன்று கவிதைகள்

 என்னவென்பது


நியதிகளேதுமற்றதே போல் தோன்றும்
இந்தக் கானகத்தில்
பற்ற ஒரு நியமம் தேடியலைகிறேன்
எப்போதும் உடுத்து அலையும்
வெண்ணிற உடையில்
களிகூடி மிதந்து
காடே சொந்தம்போல்
இறங்கிவரும் பட்டுப்பூச்சிகள்
அவ்வப்போது தீற்றிச் செல்வதை
கறையெனக் கொள்வதா
வண்ணமா

உயிர்பற்றிக் கொண்டாடும்
இவ்வாழ்வில்
கால்கள் இடறியும்
கலைகள் பயின்றும்
கைகள் பிணைக்குற்றும்
மாண்பை தரிசித்தும்
இன்னும்
இன்னுமோர் தருணம்
என்றலைதல்
ஆட்டத்தின் ஓரங்கம் என்பதா
அதுவே ஆட்டமென்பதா

பற்றிலேதும் வரவின்றி
உதித்து விரைந்து
உதிரும் நாட்களுக்குள்
கணக்கேதுமின்றி
எதையும் பதியாமல்
தடமெதுவும் இல்லாமல்
மகிழ்வேதும் தாராமல்
துயரதுவும் கொள்ளாமல்
மறைந்து போவது
குறைவென்பதா அன்றி அதுவே
நிறைவென்பதா

உரைகல்

வீதியெங்கும் வழியும்
உன்னதம்பொழியும் இசை
யாருமுணரா வித்வம்
விரல்களின் நர்த்தனம்
அரங்கம் ஒன்றிருந்தால்
கோடிகள் பெறும் படைப்பு
தெருமுனையில் தன்னந்தனியே
தவிப்பேதுமின்றி
தன்னிலை நினைப்பேதுமின்றி
வாசிப்பவனின் யாசகம்
யாதாக இருக்கக்கூடும்
கடந்தவர் நின்றவர்
விரைந்தவர் இரந்தவர்
யாவரும் யாரவன்
என்றறியாதவரே
ஏந்திய குவளையில்
சிந்திய இக்காசுகள்
இழந்துபோன நுண்ணுணர்வுகள்
வீழ்ந்துபோன அறிதல்
வணிகமே வாழ்வென்றாதல்

  • ஜீன் வெய்ன்கார்ட்டென் (Gene Weingarten), ஜோஷுவா பெல் என்ற புகழ்பெற்ற அமெரிக்க வயலின் இசைக்கலைஞரைக் கொண்டு நடத்திய ‘த கிரேட் சப்வே வயலின் எக்ஸ்பெரிமெண்ட்’ – டின் தாக்கத்தில்.

கடந்த வழி

காண்பதெதுவும் புதிதல்ல
யாரும் மாறிவிடவோ
மாற முயற்சிக்கவோ
ஒன்றுமில்லை
பதற வேண்டாம்
இருண்ட கண்டத்திலிருந்து
கிளம்பிப் பரவிய
காலங்களிலிருந்து
இப்படித்தான் இருந்திருக்கிறது
ஓரங்கள் வெடிப்புற
அடிப்பாதம் தேயத்தேய
நடந்து கடந்த
மலைகளும் நதிகளும்
வனங்களும் பாலைகளும்
எதையும் எப்போதும்
மாற்றி விடவில்லை
இணைப்பதை விட
பிரிப்பது எளிது
ஆக்குவதை விட
அழிப்பது
எளிய வழிகள்
எல்லாருக்குமானவை
எனவே என்றுமுள்ளவை
உங்கள் வழியை
இன்றே தேர்ந்தெடுங்கள்
அவ்வப்போது எழும்
அவ்வரிய குரல்களைக்
கேட்டு பதற வேண்டாம்
நம் வழி
மனிதத்தின் வழி

***

சொல்வனம் மின்னிதழில் மூன்று கவிதைகள்

 சொல்வனம் மின்னிதழில் வெளிவந்திருக்கும் மூன்று கவிதைகள் 


https://solvanam.com/2020/11/08/%e0%ae%89%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3/


Monday, October 5, 2020

ஒற்றைச் செருப்பு

இருபுற சாலையின்

ஒருபுற பாதையில்
ஒரேபுறமாக
அடித்து செல்லப்படுமந்த
ஒற்றைச் செருப்பு
திரும்பிச்செல்லவோ
எதிர்ப்புறம் விரையவோ
இணையுடன் சேரவோ
எதற்கும் இயலாத
எதற்கும் உதவாத
எதற்கும் மசிகிற
எதிர்ப்பேதும் இல்லாத
இல்லாத
இருப்பு

Sunday, September 6, 2020

ஷிவர்

ஏன் உன்னை 

இன்னும் யாரும் 

அடித்துக் கொல்லவில்லை 

என்று கொலைவெறியோடு கேட்கிறார்கள் 


ஏன் இல்லை 

இதோ என் முன் 

கையில் பல கவிதைகளுடன் 

வார்த்தை விளையாட்டுகளுடன் 

இணையமும் 

சிற்றிலக்கிய சாகசமும் 

இருக்கிறது 

தூக்குக் கயிற்றின்முன் நிற்கும் 

மரணதண்டனைக் கைதியைப்போல் 

அவற்றின்முன் நிற்கிறேன் 


அவற்றின் 

அறிவார்ந்த முதல் தொடுகையில் 

உடலெங்கும் 

அருவருப்பிலும் கூச்சத்திலும் 

புல்லரித்து நடுங்குகிறது 


ஒரே கணத்தில் 

நடுக்கம் மறைந்து 

நானும் அவற்றின் ஒரு பகுதியாக 

கவிதையெழுதத் துவங்குகிறேன் 


நான் எப்போதும் 

முழு முட்டாள்தனத்துடன் 

எதையும் எழுதுவதிலிருந்து 

இத்தனைக் காலம் 

தப்பித்து வந்துகொண்டிருந்தவன் 

ஆயினும் 

அள்ளிப்பூசும் அசூயை 

என்னை மேலும் மோசமாக 

எழுதத் தூண்டுகிறது 


செய்வதறியாது 

கவிதை என்றறிந்ததை செய்யாது 

உறைந்துபோய் 

யோசித்துக் கொண்டிருக்கிறேன் 


எவ்வளவு முயற்சித்தும் 

அடித்து ஊற்றிக்கொண்டேயிருக்கும் 

இத்தகைய கவிதைகளிலிருந்து 

சட்டென்று 

தப்பித்து விட முடிவதில்லை 


கவிதை என்பது 

கவிதை மட்டுமல்ல 

புலன்களை உறைந்துபோகச் செய்யும் 

வல்லமை கொண்ட 

வன்முறையும் கூட 

எழுதியும் அறிந்தும் 

ஏற்றிக்கொண்டிருக்கும் 

உன்னதங்களை 

உருவியெடுத்து 

வெளியில் வீசும் 

வேலையையும் 

கவிதை செய்கிறது 


இலக்கிய வன்முறையின் 

மிகப்பழைய படிமம் 

யாவரும் எதுவும் தெரியாத 

இரசனை அறிவிலிகள் 

என்றெண்ணி 

கவிதையெழுதுதல் 

என்பதை இன்று 

உணரவைத்த 

கவிதை போல் 

வேறேதேனும் உண்டா?


அள்ளிக்குடித்த காடியைப்போல் 

அப்பட்டமான கவிதை 

வாயெங்கும் கசந்து 

உடலெங்கும் பரவுகிறது 


படித்துமுடித்தபிறகும் 

நினைவில் சிந்திச்சிதறும் 

கவிதை வரிகள் வார்த்தை விளையாட்டுகள் 

பற்பல நாட்கள் 

புன்னகையும் வேதனையையும் 

ஒருசேர விளைவித்துக்கொண்டிருக்கின்றன 


ஒரு கவிதை 

ஒரே கவிதை 

இருந்தால் போதும் 

ஈராயிர வருடங்களை 

அற்றுப் போகச் செய்துவிடலாம் 


மேலும் கவிதை 

எவ்வித 

எதிர்பார்ப்பும் இல்லாதது 

சுயகட்டுப்பாடோ 

அவைநாணமோ 

என்றுமில்லாத அதற்கு 

எப்போது நிறுத்திக்கொள்ள 

வேண்டுமென்றும் தெரிவதில்லை 


அந்தக் கவிதையின் பாதிப்பில் 

நீங்களும் கவிதையெழுதினால் 

அந்தக் கவிதையை ஏற்றுக்கொள்ளும் 

அனைவரும் 

உங்கள் கவிதையை 

ஏற்க வேண்டுமென்பதில்லை 

ஏனென்றால் அது அந்தக் கவிதை 

Tuesday, September 1, 2020

பெருகாத கோப்பைகள்

பருகப்படாமல் காத்திருக்கின்றன

புகையும் இரு தேநீர் கோப்பைகள்
சரிந்திறங்கும் மாலைவெயிலில்
சருகுபோல் அலைகிறது தேநீர் வாசம்
இருபுறமும்
இருவேறுதிசைகள் நோக்கி
எதையோ காத்து நின்ற
எண்ணங்கள்
ஒன்றையொன்று நோக்கக்
குவிந்துவிட்டால்
பருகப்பட்டு விடலாம்
காத்திருக்கும் இக்கோப்பைகள்

என்னை நிறைத்துக்கொள்ளும்
ஒரு கோப்பை
ஏதென்று
அறியாதிருந்தது ஒரு  காலம்
எதற்கென்று
அலைபாய்ந்தது இன்னொரு காலம்
நிறைக்கமுடியாது
நிறைந்துவழிவதாய்
நினைவிலழியும்
ஈதொரு முடியாக்காலம்

இரு கவிதைகள் - பெருகாத கோப்பைகள்

 பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் இரு கவிதைகள்: 


https://padhaakai.com/2020/09/01/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/


Thursday, August 13, 2020

கோப்பைகள்

உன் கோப்பை மதுவை

எனக்கு தந்துவிடு
நாம் பேசிமுடித்த
இரவுகளில்
என்னிடம் நீ
பெற்றதும் கற்றதும்
தீராத மதுவைப் போலென்று
நம்பித்தான் கேட்கிறேன்
இன்று
உன்னிதழ் படிந்த
அந்த மதுக்கோப்பையை

***

குலம் காக்கும்
குருதிநிறை
குடுவையின் மேலுறைந்த
சின்னம்
உந்தன் எந்தன்
கோப்பைகள்
அவனளித்த கொடை
பெருகிவழியும்
இக்கோப்பைகளை
ஞானம் பெற்றானபின்  
என்ன செய்வது

***

எதையோ தேடி
எதையோ கடைந்து
எதையோ அடைந்து
அதையே பருகி
தேவர்களும்
அசுரர்களும்
ஆனார்கள்
அசுரர்களும்
தேவர்களுமாய்

Pandit Venkatesh Kumar and Raag Hameer