Monday, November 13, 2017

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை: நீட்சி

https://padhaakai.com/2017/11/10/in-extenso/

நீட்சி

செயலின்மையின் செய்நேர்த்தி
உச்சம்கொண்ட
ஒரு காலம் கடந்தோம்
மனிதத்திரளின் அத்தனை உன்னதமும்
உறைந்து கிடந்ததோர்
காலமும் கடந்தோம்
விடிவதும் கதிர் முடிவதும்
இடையே
எழுவதும் விழுவதும்
உண்பதும் கழிப்பதுமான
தொடர்நியதிகளின் சூழ்வே
வாழ்வென விதித்துக்
கிடந்ததொரு காலமும் கடந்தோம்
ஒரு குரலில்லை அழுகையில்லை
அழுந்திக் கிடக்குமோர் உணர்வுமில்லை
செய்தே அறியமுடியுமெனின்
யாதும் செய்யாதிருத்தல்
யார் நலன் பொருட்டு
என்றும் வினவாதிருந்தோம்
இன்றோ
தவறெனப்படும் பாதைகளிலும் பயணம்
குறையொளியெனினும் திரியேறும் சிறுதீபம்
இயைந்தெழும்
இயக்கத்தின் வெளிப்பாடு
காண்கிறோம்
ஆயினும் கேட்கிறோம்
இன்னும் புதிதாய் சில குரல்கள்
இத்தனைக் காலம்
உறங்கிக் கிடந்த குரல்கள்
பாதையின் வளைவை இடரை
ஒளியின் போதாமையை
சுட்டும் குரல்கள்
அவலம் சிறிதும் தொனிக்கா
கயமைக் குரல்கள்
வேண்டுவது ஒன்றே
இயக்கமின்றி
இம்மானுடத்திரள் தேங்கியழிதல்
முன்னகர்வில்லை
இயங்காதிருப்பின்
இயக்கம் போற்றுதும்
இயக்கம் போற்றுதும்
இன்மை களையும்
இயக்கம் போற்றுதும்

Wednesday, October 4, 2017

வேட்கை

Image result for bird drinking water + busy road

பசுமஞ்சள் அலகைச் சாய்த்துச் சாய்த்து
கையகல நீர்த்தேக்கத்தை
துளித்துளியாய் அருந்துகிறாய்
அடுத்தப் பேருந்து வந்து
நீர்த்தேக்கத்தை சிதறடிக்குமுன்
உன்சிறு நாவின் வேட்கை
தணியுமோ ஆறாதோ
தவித்தவாறு நடைமேடையில் நிற்கும்
என்னருகே தாவி நின்று
வந்த பேருந்து கிளம்பக் காத்திருக்கிறோம்
நீயும் நானும்

Padhaakai - Kavithai

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை:

https://padhaakai.com/2017/10/04/desire/

Monday, July 31, 2017

இக்கவிதை

வானின்று பொழியும் நீர்ச்சரங்களில்
மழை வில்லை மண் இறக்கிவிடும்
பிரயத்தனங்களின் கனமில்லாத கவிதை

பதிந்து சென்ற தடங்களின் அழுத்தமும்
புதுப்பாதை சமைக்க நேரும்
நிர்பந்தங்களின் எடையுமற்ற கவிதை

தன் சிறகின் இளைப்பு தவிர
எதன்பொருட்டும்
தோள்தர நேர்ந்துவிடும் கட்டுப்பாடற்ற கவிதை

எளிதில் உருவழிந்துபோகும்
எதிலும் குறிக்கப்பெறா
இந்தக்கணம் போலும்
இக்கணம் வாழும்
இக்கவிதை

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை

https://padhaakai.com/2017/07/23/this-poem/


Tuesday, July 11, 2017

பால்மயக்கம்

Image result for sukhumvit street bars

இறுக்கம்கூடிய
திரைகளையும் திறந்துவிடும்
நுட்பமறிந்தோர் மட்டுமே
நிறைந்ததோர் உலகம்
வண்ணம் வழியும் வீதியின்
இருமருங்கும் இடப்பட்டிருக்கும்
உணவு மேசைகளினின்று
ஏந்த யாருமின்றி
சிந்துகின்றன சுவைமிகுந்த மதுக்கள்
அங்கே நடனமாடுவதுபோல் நடிப்பதற்கும்
நடப்பதுபோல் கிடப்பதற்கும்
ஊக்கம் தரும் மிகச் சிறந்த லாகிரிகள்
அவை மட்டுமல்ல
நடைபாதையின் மேலேறி
உதட்டினருகே குவளையைக்
கொணர்கிறாள்
மிக மிக சிவந்த இதழ்ச்சாயம்வழி
ஒன்றையே குறிப்புணர்த்தும்
வியட்நாமிய இளம்பெண்
பர்மிய இசைபொழியும்
மதுக்கடையின் அடுத்து
தாய் உணவகம்
இசை என்று பிரித்தறிய முடியா ஒலிகள்
இன்ன நிறம் என்று பகுத்தறிவியலா ஒளிகள்
இவ்வினம் இது
இச்சுவை அது
எதுவும் கூடும்
விரித்துக் கிடக்குமிந்த பாங்காக் நகரத்து
சுகும்வித் வீதியில்
ஆணோவென்னும் பெண்ணும்
பெண்ணோ எனும் ஆணும்
ஏன் உணர வேண்டும்
இதுவென்ன மயக்கமென

Pandit Venkatesh Kumar and Raag Hameer