Monday, June 26, 2017

நிலையா கணத்தின் கவிதை​

இன்றிரவு மிகச்சரியாக
ஒரு நொடிப்பொழுதில்
இரையிட்டு நெய்சேர்த்து
அணிசேர்த்து ஊன்வளர்த்த
இளமை
முன்வாசல் வழியாக
கடந்து மறையும்
என்பது எப்படித் தெரிந்தது

பிறந்தது முதல் இக்கணம் வரை
ஏற்றிக் கனத்த அனுபவப்பொதிகளில்
கிழிந்தொழுகியது போலும்
நுண்ணுணர்வு

நோயில் புரள்பவனின் சத்தமற்ற வாதை
தொடநீளும் விரல்களின் உதாசீனங்கள்
நிறைந்திருக்கும் இந்த இரவில்
இதுபோன்று யுகங்கள்தோறும்
இளமைகள் கரைந்து வந்திருக்கின்றன
புதிதொன்றுமில்லை

கரைந்துகூடி வரும் முகிற்கருமையின் முன்னே
வாயிலை வெளிச்சப்படுத்தி
விளக்கொன்றும் ஏற்றுவதற்கில்லை
காத்திருப்பவனின் அனுபவம் என்றுமே சிறந்தது

நிலைச்சட்டத்திற்குள் நிலையாது
அசையும் திரைச்சீலையில்
அகப்படாதலையும் வண்ணக்குலைவு

இத்தனை பெரிய அறை
எத்தனையோ சன்னல்கள்
இருப்பினும்
வலமிருந்து குதித்து இடம் செல்கிறது
தொலைவில் பதிந்திருக்கும்
மின்னும் கண்களுடன்
கரிந்து கவிந்துவரும்
இருளின் நிறம்தோய்ந்த கரும்பூனை

எனைத் தவிர எதுவும்
உடைந்துவிடக்கூடாதென்பதில்
உறுதியாகவிருக்கிறேன்
வாடித்தலைக்கவிழ்ந்த பூச்சருகுகளை
மென்மையாக வருடும் இந்த இரவின்
கூதற்காற்றை என்ன சொல்வது

விளக்கின்றி என் வெம்மை மட்டுமே
துணையிருக்கும் இந்த அறையில்
கனத்த சத்தமெழுப்பாத மெத்தையில்
கால்கள் மடித்துக் காத்திருக்கிறேன்
குளிர்காற்று மெதுவே நகரும்
முன்வாசலை நோக்கியபடி

எனக்கு மிகுந்த நேரமில்லை
புலர்வதற்குள் பார்த்துவிடவேண்டும்
கடக்கும் கணத்தை ​

Pandit Venkatesh Kumar and Raag Hameer