Monday, August 22, 2016

Monday, August 8, 2016

ஹைட்டியின் பூகம்பத்தில் பிழைத்தவன்

அவன் 
வண்டியோட்டிக் கொண்டிருந்தான் 

கனத்த குரல் 
இடையறாத 
உற்சாகக் குரலோசையிடையே 
பரபரவென 
காற்றில் அலையும் 
கரங்கள் 
முழுதும் பாதியுமாய் 
வெண்சுண்ணம் பூசி 
உயராது நிற்கும் 
போர்ட் ஆ பிரின்ஸின் கட்டிடங்கள் 
காட்டி 
போக்குவரத்தின் நெரிசல் கண்டு 
பதறி நான் அலறும் போது 
சிரித்து காரை 
நெறிப்படுத்தும் 

இது எங்கள் தேவாலயம் 
இதுதான் நாடாளுமன்றம் 
இது என் தந்தை சிக்கிக் கிடந்த 
சிறைச்சாலை 
இது தான் என் தாய் 
நிலம்விளை பொருள்விற்கும் 
வாரச்சந்தை 
நானும் என் தங்கையரும் 
ஆடி மகிழ்ந்த பூங்கா 
பாதியில் நின்ற பள்ளி 
புன்சிரிப்பு வழியும் 
கனத்த குரலில் 
சொல்லிச்சென்றவனின் 
கரம்தொடர்ந்து 
பார்வை தொடர 
எதுவும் இல்லை 
எங்கும் 

இடையில் விழுந்த
அமைதி உணராது 
கூடைச்சுமை தாங்கித்திரியும் 
ஆடவர் பெண்டிர் 
கூட்டம் தவிர்த்து 
நிலைச்சின்னம் இருமருங்கும் 
தேடி 
திரும்பிப் பார்த்தேன் 
அவனை 

கண்ணாடியின் முன்னால் 
பதிந்திருந்த 
அவன் பார்வையில் 
இன்றுமில்லை 
நாளையுமில்லை 

விழித்து எழுந்தால் 
ஆடியிருந்த 
எந்தச்சின்னமும் இல்லை
கூடிமகிழ்ந்த 
பள்ளி இல்லை பூங்கா இல்லை 
சந்தை இல்லை வீடு இல்லை 
ஆலயம் இல்லை சாலையும் இல்லை 

பின்னிக் கிடந்த 
எந்த 
நினைவுகளும் இல்லை 

திரும்பிக் கேட்டான் 
கண்ணீர் வழிய 
என் புன்னகை உறைய 

துடைத்தெறியப்பட்டுவிட்ட 
எங்கள் நினைவுச்சின்னங்கள் 
சுவடின்றி மறைந்த  பாலியங்கள் 
புரியுமோ என்னவோ 
உங்களுக்கு 
புரியுமோ என்னவோ 

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை

https://padhaakai.com/2016/08/07/a-survivor-from-haiti/

Monday, July 25, 2016

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் மொழியாக்கச் சிறுகதை - அத்தியாயம்– 6

https://padhaakai.com/2016/07/24/zilkowkskys-theorem-6/

சில்கோவ்ஸ்கியின் தேற்றம் : கார்ல் இயாக்னெம்மா

அத்தியாயம் 6

அடுத்த நாள் காலை தனது அலுவலக நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்த ஹெண்டர்சன் பால்பாய்ண்ட் பேனாவினால் தனது காப்பியை கலக்கிக் கொண்டார். இன்னும் 7 மணி ஆகவில்லை; வால்டர் H லேய்ட்டன் கணித ஆராய்ச்சிக் கட்டிடம் இன்னும் அமைதி கலையாமல் இருந்தது. இவ்வளவு சீக்கிரம் அவர் அலுவலகத்திற்கு இதற்குமுன்னர் வந்ததில்லை; அந்த ஆழ்ந்த, உன்னதமான அமைதி தனக்கு எவ்வளவு பிடித்திருக்கிறது என அவர் வியந்து கொண்டார். இன்னும் சிறிது நேரத்தில், ஷேவ் செய்யாத, நேற்றைய சமையலின் வாசம் இன்னும் வீசும் இளநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் வர ஆரம்பிப்aபார்கள். அடுத்து 8 மணி வகுப்புகளுக்கு பட்டப்படிப்பு மாணவர்கள் வருவார்கள்; .அடுத்து, அலுவலக பணியாளர்கள், மற்றவர்கள்… என கட்டிடம் கொஞ்ச நேரத்தில் தனது வழமையான  பரபரப்புக்கும், அவசரத்துக்கும் தாவி விடும். காப்பியை உறிஞ்சியவாறு ஹெண்டர்சன்  தனது மேசை மேல் சரிந்திருந்த, தூசித்துகள்கள் மின்னும் கதிர்க்கற்றைகளை   கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தார். அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படாவிட்டால், அவரது இந்த அலுவலக அறையை  விட்டுவிட வேண்டியிருக்கும் என்பது வருத்தத்தை அளித்தது. மொத்தக் கல்லூரியிலும் அவரது இந்த அறையில் மட்டுமே தனது இயல்போடு, நிம்மதியாக இருந்திருக்கிறார்.

அவரது யூனிக்ஸ் டெஸ்க் டாப்பில் புது அஞ்சல் மின்னியது: அனுப்புனர்: சோக்லோஸ், நேரம்: அதிகாலை – 2.17

அன்புள்ள ஜான் – படிக்க ஆரம்பித்த ஹெண்டர்சன் ஒரு கணம் தயங்கினார், அன்னியோனியமான அந்த விளி அவரைத் தாக்கியது – உனக்கு நன்றி தெரிவிக்க வேண்டி எழுதுகிறேன். மரியாவை மகிழ்ச்சியடைய செய்து விட்டாய்; ஆதலால் என்னையும் மிக்க சந்தோஷத்தில் ஆழ்த்தி விட்டாய். அவள் மனதிலிருந்து பெரும் பாரம் அகன்று விட்டது. ஓர் அற்புதமான குறுநகையுடன் தனித்தமர்ந்து மே மாதத்தில் நடக்கப் போகும் எங்கள் திருமணத்திற்கு செய்ய வேண்டிய காரியங்களை அவள் பட்டியலிட்டுக்கொண்டிருக்கும் காட்சி அரியது. என் வார்த்தைகளில் வடிக்க முடியாதது. நிச்சயம் உனக்கு அழைப்பு வரும் – நீ வருவாய் என நம்புகிறேன்.

 J.A.M –இன் ஆசிரியர் சில்கோவ்ஸ்கியின் தேற்றம் குறித்த ‘தவறான புரிதல்‘ திருத்தப்படுவது குறித்து ஒரு விளக்கம் டிசம்பர் மாத இதழில் பிரசுரிக்க ஒத்துக் கொண்டுவிட்டார்.  இது என்னை வருத்தத்துக்குள்ளாக்குகிறது. பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகளுக்கு தனது Ph.D பட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தி மரியா  ஒரு கடிதம் எழுதப் போகிறாள். இறுதியில், இதை என்னால் தடுக்க முடியவில்லை – மிக வருந்துகிறேன்.

நீ பெருங்கருணையுடையவன் என்று மரியா நம்புவதை நான் உன்னிடம் சொல்லித்தான் ஆக வேண்டும். அது உண்மையல்ல என்று நான் அவளிடம் சொன்ன போதிலும். நீ இதைப் புரிந்து கொள்வாய் என்று நம்புகிறேன். ஏனென்றால், அது உண்மையல்ல, அல்லவா? நீ கருணையுடையவன் அல்ல. சமீபத்திய உன்னுடைய பெருந்தன்மை உன்னில் நிலைகொண்ட நற்தன்மையின் சாட்சி என்று மரியா கருதுகிறாள். என்னால் அதற்கு பதிலொன்றும் கூற முடியவில்லை. இருக்கலாம் என்று சொல்ல முடியுமா? தெரியவில்லை.

மேற்கொண்டு எழுத அயர்ச்சியாக இருக்கிறது. நீ செய்தவற்றுக்கு மீண்டும் நன்றி. நீ ஏன் அதைச் செய்தாய் என்று முழுமையாக என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை எனினும் உனக்கு என் நன்றிகள்.

 உன் நண்பன்,
மிக்லோஸ்

ஹெண்டர்சன் மீண்டும் ஒருமுறை படித்து விட்டு மின்னஞ்சலை  அழித்தார். கணினியை அணைத்தார். நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டார். என்ன செய்தாரோ, என்ன நடக்க அனுமதித்திருக்கிறாரோ –  அவற்றைப் பற்றி அவர் நிம்மதி கொள்ளலாம் என்றுதான் முதலில் தோன்றியது. ஆனால், அவர் நிம்மதியாக இல்லை. அவர் செய்தவற்றின் விளைவாக, இறுதியாக, யார் பயனடைவார்கள்? மரியா, நீட்சியாக சோக்லோஸ்.

ஆனால் ஹெண்டர்சன்? எப்போதும் போல், ஏமாற்றப்பட்டு, கீழ் நிலையில், வருத்தத்துடன். துயரம் கலக்காத மகிழ்ச்சியை அதன் பரிசுத்த நிலையில் அடைவது சாத்தியமா? சில சமயம் முடியலாம்  என்று தோன்றியதுண்டு என்றாலும், பல நேரங்களில்  அது சாத்தியமேயல்ல என்றுதான் ஹெண்டர்சன் உணர்ந்திருக்கிறார்.  மகிழ்ச்சி என்பது ஒரு ஸீரோ-ஸம் விளையாட்டு; ஒருவர் மகிழ்ச்சிக்கு இன்னொருவர் கட்டாயம் வருத்தப்பட்டே தீர வேண்டும். பல காலமாக, ஹெண்டர்சன் இந்தச் சமன்பாட்டின் தவறான பக்கத்திலிருந்து கொண்டிருக்கிறார்.

மனதை இந்த எண்ணம் நிறைக்க, ஹெண்டர்சன் மேசை அறையிலிருந்து கடித உறையொன்றை எடுத்தார். சோக்லோஸின் அலுவலக விலாசத்தை எழுதி உறைக்குள் மரியாவின் இரு ஊதாநிற உள்ளாடைகளை இட்டு மூடினார்.

வெளியே, கணினியியல் துறை கட்டிடத்திற்கு மேல் சூரியன் எழுந்து விட்டது. இளந்தென்றல் புதிதாக விழுந்திருக்கும் இலைகளினூடாக சலசலத்துக் கொண்டிருந்தது. நான்கு மாணவர்கள்  – ஒரே போல் நீல நிற டீ ஷர்ட்டுகளும் காக்கி அரைக்காற்சட்டைகளும் அணிந்துகொண்டு, இலையுதிர் காலத்தின் குளிரையோ, அது கொண்டு வரப்போகும் கல்விகுறித்த கவலைகளோ இன்றி நடந்து சென்று கொண்டிருந்தார்கள். புது வருடம்; புது விரிவுரையாளர்கள்; பணிநீட்டிப்பு விவாதங்கள்; புது வரவுகள்; நீக்கங்கள்; அவர்களின் கவலையற்ற உற்சாகத்தை ஒரு கணம் பொறாமையுடன் பார்த்த ஹெண்டர்சன், மறு கணம் கார் நிறுத்துமிடம் நோக்கி விரைந்தார்.

நகரின் குறுக்காக காரை செலுத்திய ஹெண்டர்சன் ரேடியோவை இயக்கினார் – எந்தவொரு நிலையத்தையும் குறிப்பாக வைத்துக்கொள்ளும் கவனம் இல்லாமல். சோக்லோஸ் பணியாற்றிய கல்லூரியின் கணிதத்துறை அருகே காரை நிறுத்திவிட்டு கட்டிடத்தின் உள்ளே இருந்த பல்கலை வளாக அஞ்சல்பெட்டியை அடைந்தார். மரியாவின் உள்ளாடைகளின் கனமொன்றும் அவ்வளவாக இல்லாத அந்த உறையை அஞ்சல் பெட்டியின் வாயில் நுழைத்தவண்ணம் ஒரு கணம் தயங்கினார்.  பின் உள்ளே உறையை போட்டுவிட்டு அது பெட்டியின் உள் விழுந்ததை உறுதி செய்து கொண்டார். அனுப்புனர் விலாசம் இல்லை; அஞ்சல் முத்திரை இல்லை; வெறும் பெறுநரின் பெயர் மட்டுமே.  சோக்லோஸ் யார் அனுப்பியிருப்பார்கள் என்று சந்தேகிக்கக் கூடும், ஆனாலும் ஒருக்காலும் உறுதியாக கண்டுபிடித்துவிட முடியாது. நல்லது, குழம்பட்டும் என்று  எண்ணிக்கொண்டார் ஹெண்டர்சன்.

விரைந்து காரை எடுத்துக்கொண்டு கல்லூரி வளாகத்தை விட்டு நீங்கி, அழுக்குப்படிந்த வீடுகள் நிறைந்த போர்த்துகீசியர் குடியிருப்பை தாண்டி செலுத்திக் கொண்டு போனார். திடீரென்று ஓர் எண்ண உந்துதலில், சருகுகள் பரவிக் கிடந்த, ஆளரவமற்ற ஓர் சந்துக்குள் காரை திருப்பி நிறுத்தினார். ஏதோவொரு தவறு செய்ததுபோல் உறுத்தல்; கழிவிரக்கம் போல் ஏதோவொன்று குடைந்தது. மனதிலிருந்து எடுத்தெறிந்து விட்டு நடந்தார். சலவையகம், வங்கிக்கட்டிடம், மீன் சந்தை…

சந்தின் எதிர்புறம் இருந்தது அந்த தேவாலயம். வண்ணங்கள் பளிச்சிடும் கண்ணாடிசன்னல்களின் கீழ் திறந்த பெரு வாயிற்கதவுகளை நோக்கி அகன்ற படிகள் மேலேறிச் செல்லும் கருங்கல் கட்டிடம். படிகளில் அமர்ந்து புகைத்துக்கொண்டிருந்த வீடற்ற ஒருவனின் அருகே சிறிய அறிவிப்பு – ‘இயேசு காக்கிறார் – சனிக்கிழமை  6 ஞாயிறு 9 1030 1215’.

ஹெண்டர்சன் சந்தைக் கடந்து படிகளில் ஏறி, கனத்த கதவுகளைத் திறந்து உள்ளே நுழைந்தார். தூசியில் நனைந்த ஒளிக்கதிர்கள் உயரத்திலிருந்த சன்னல்களின்வழி வழிந்திறங்கி யாருமற்ற இருக்கை வரிசைகளில் மீது படிந்து கிடந்தன. காற்றில் தூபப் புகையும், ஈரக் கருங்கற்களும்  மணத்தன. கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்ட ஹெண்டர்சன், நிமிர்ந்து மேற்கூரையின் அழகிய வடிவமைப்பை வெறித்துப் பார்த்தார். என்ன அழகான இடம்! இதன் வெறுமை, இந்த அமைதி, தோள்களில் ஒரு  போர்வையைப் போல் கவியும் வெதுவெதுப்பான அடர்த்தியான இந்தக் காற்று… எங்கோ தொலைவில் ஒரு  காரின் அலாரம் அலறுவது சர்ச்சுக்குள் ஒரு குகைக்குள் கேட்பது போல் ஒலித்தது.

கடவுளின் இருப்பை டிடெரோட்டுக்கு ‘நிரூபித்த’ ஆய்லரின் சமன்பாடு ஹெண்டர்சனுக்கு நினைவு வந்தது. முட்டாள்தனம். ஆனால் பாஸ்கலின் வாதம் ஒன்று உண்டு: ஆராயும் அறிவுள்ள மனிதர்கள் கடவுளை நம்பத்தான் வேண்டும். ஏனென்றால் சொர்க்கத்தின் அனுகூலங்கள் நரகத்தின் இடர்களை விட மிக அதிகம். கைகளை கோர்த்தபடி, கீழுதட்டை கடித்தவாறு ஹெண்டர்சன் அமர்ந்திருந்தார். பாஸ்கலுக்கு மட்டும் நிகழ்தகவு கோட்பாடு தெரிந்திருந்தால் ஒருவேளை தனது கடவுள் இருப்பு வாதத்தை நிலைநிறுத்தியிருக்க முடிந்திருக்கலாம். யார் கண்டது, எத்தகைய இழப்பு இதுவென்று.

ஓர் இளம் பாதிரி இருபுற இருக்கைகளியிடையே தந்தநிற மெழுகுவர்த்திகள்  இரண்டையேந்திக் கொண்டு நடந்து வருவதைக் கண்டார். பாதிரியின் கண்களின் கவனத்தை ஈர்க்க முயன்றார். ஓர் எண்ணம் – தான், ஜான் ஹெண்டர்சன் –    துறவியாகி விட்டால்? ஒரே நேரத்தில் அச்சமும், பரவசமும் மேலெங்கும் பரவ  அவரது உடல் நடுங்கியது. யார் விண்ணப்பித்தாலும் ஏற்றுக் கொள்வார்கள் தானே, இல்லை ஏதாவது விதிகள் இருக்குமா? என்னைப் பாருங்கள் – முகம் கவிழ்ந்து மெதுவே நடந்து வந்து கொண்டிருந்த பாதிரியின் முகத்தைப் கூர்ந்து நோக்கியவாறு ஹெண்டர்சன் நினைத்துக் கொண்டார். துறவு பூண்டு, மதத்தையும், நம்பிக்கையையும் சிந்தித்துக்கொண்டு, மன்னிப்பை இறைஞ்சியவாறு  தன் நாட்களை கழித்து விடலாம்.  ஆம். திருச்சபையின் பிரார்த்தனைக் கூட்டத்தின் முன் நின்று தன் தனிமை நிறைந்த நாட்கள் எப்படி அச்சத்துடனே கழிந்தன என்று  அவரால் கூற முடியும். என்னைப் பாருங்கள், தயவுசெய்து என்னைப் பாருங்கள், ஹெண்டர்சன் மனதுக்குள் இறைஞ்சினார்.

 ஆனால் இளம் பாதிரி நீண்ட அங்கி மென்மையாக சரசரக்க கடந்து சென்றார்.

 – நிறைந்தது –

Monday, July 18, 2016

சில்கோவ்ஸ்கியின் தேற்றம் : கார்ல் இயாக்னெம்மா – 5

சோக்லோஸும் மரியாவும் வசித்த காண்டோமினியம் கென்மோர் ஸ்கொயர் அருகே காமன்வெல்த் அவென்யுவில் இருந்தது. நகருக்குள் எப்போது வந்தாலும் செய்வது போல ஹெண்டர்சன் இப்போதும் I-93 எக்ஸிட் வழியாக நகரை அடைந்து காரை வீட்டருகே நிறுத்தி பூட்டிவிட்டு நடந்தார். வீட்டின் முன்வாயிலில் அழைப்புமணியை அழுத்திவிட்டு காத்திருக்கும்போது சோக்லோஸுடன் சில நாட்களுக்கு முன் தான் பேசிக்கொண்டிருந்ததை கசப்புடன் நினைத்துப் பார்த்தார். மீண்டும் அவர் ஏமாற்றப் பட்டுவிட்டார்: அவரைக் தூக்கியெறிந்து விட்டு போன பெண்ணை அவர் சமாதானப் படுத்தவேண்டும். அந்த வேலையைக் கொடுத்திருப்பது யாருக்காக அவள் ஹெண்டர்சனை விட்டுவிட்டு போனாளோ அவர். அந்தப் பெண்மணி! அவரை மயக்கி தனது ஆய்வுக்கட்டுரையை  எழுதச் செய்தது மட்டுமல்லாமல் இப்போது அதை எழுதியதற்காக அவரைத் தண்டிக்கவும் போகிறாள். வாயில் ஊறிய கசப்பைக் காறி டுலிப் மலர்ச்செடிகளில் உமிழ்ந்தார் ஹெண்டர்சன். ஹெண்டர்சன் ஆய்வு நிதிக்கு கையேந்தும் வேளையில் சோக்லோஸ் போன்றவர்கள்  நேஷனல் சயின்ஸ் கழகத்தின் மானியங்களில் கொழிக்கிறார்கள் –  ஹெண்டர்சன் பதற்றத்தில் இருக்கும்போது தன்னை படர்க்கையில் எண்ணிக்கொள்வது போல இப்போதும் நினைத்துக் கொண்டார்.

கதவு திறந்தது. வெளுத்துப் போன ஜீன்சும் மஞ்சள் போலோ சட்டையும் அணிந்து, அக்ரோன் நகரில் பார்த்ததை விட இயல்பாக தெரிந்த சோக்லோஸுக்கு பின்னால் நின்றிருந்தாள் மரியா. அவள் லேசாக சுருங்கிவிட்டது போல் பட்டது அவருக்கு. வலிநிறைந்த துல்லியத்தோடு அவரால் நினைவுகூர முடிந்தது – தலைமுடி ஐஸ்-டீயின் ப்ரௌன் நிறத்திலிருந்து கருப்பாக மாறியிருந்ததைத் தவிர அவளில் வேறொன்றும் மாற்றமில்லை. ஆரஞ்சு நிற மேற்சட்டையும், கருநிற ஸ்கர்ட்டும், ஊதா நிற காற்சட்டையும் அவள் அணிந்திருந்தது அவளின் இயல்பான ஒரு வினோத கவர்ச்சியை ஊட்டுவதாக இருந்தது. அவருக்கு முன்னால் அவள் நின்ற அந்தக் கோலம் ஹெண்டர்சனுக்குள் ஆசையின் வெம்மையை ஊற்றாக பாயச் செய்தது. உள்ளே நுழைந்த ஹெண்டர்சனை மரியா தன் கைகளை சிறு டவலில்  துடைத்தவாறு பார்த்தாள்.

“வாருங்கள், அற்புதமான அறிஞரே! உன்னை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி, ஜான்!” தோள்களை அணைத்து, கன்னங்களில் முத்தமிட்டு கிறங்கிப்போன ஹெண்டர்சனை வரவேற்றாள் மரியா. “உள்ளே வா, ஜான் – எல்லாம் தயாராக இருக்கிறது!”

வீட்டைச் சுற்றிக் காண்பித்தார் சோக்லோஸ். அது ஒரு சுமாரான வீடு – சோக்லோஸ் விரைந்து கடந்த ஒளிகுறைந்த, துணிகள் பொதிகளாக தரையிற்கிடந்த அந்தப் படுக்கையறையைத் தவிர – பெரிதாக ஈர்க்கும்படி ஒன்றுமில்லை. பளபளக்கும் ஒக்மரப் பலகைகள் பதித்த, பெரிய சன்னலுடன் வெளிச்சமும் காற்றோட்டமும் கூடிய   டைனிங் அறையில் அனைவரும் அமர்ந்தார்கள்.அந்த அறை சோக்லோஸ் – மரியா இருவரின் தவறவிடமுடியாத தடயங்களால் நிரம்பியிருப்பதாகப் பட்டது.  பிரேம் செய்யப்பட்ட கணித ஆய்வுக்கட்டுரையின்  பட்டயம்; அருகிலேயே உறைகளில்லாத இசைவட்டுகளும் ஸ்டீரியோவும்.

பொருட்களின் பொருத்தமற்ற அருகண்மை ஹெண்டர்சனின் எரிச்சலைக் கூட்டியது.  மாலை இன்னும் சூடு தணியவில்லை; திறந்து விடப்பட்டிருந்த சன்னல்கள்வழி பக்கத்துவீட்டு தொலைக்காட்சியிலிருந்து ரெட் சாக்ஸ்  ஆடிக்கொண்டிருந்த பேஸ்பால் போட்டியின் ஒளிபரப்பின் சன்னமான ஒலி வழிந்து கொண்டிருந்தது.  ஹெண்டர்சன் சோக்லோஸ் ஊற்றித்தந்த கலங்கிய ரெட் வைனை மூன்று  மடக்குகளில் விழுங்கினார். “வீட்டுக்கான கடன் அதிகம் இருக்குமே? ஆனாலும் ஓர் உதவி பேராசிரியருக்கு பரவாயில்லைதான்!” என்றார் ஹெண்டர்சன்.

“வீட்டின் கீழ்தளத்தில் தண்ணீர் புகுந்து விடும். ரேடியேட்டர் அவ்வப்போது பழுதாகிவிடும். அதைத் தவிர…பிரச்சனை ஒன்றுமில்லை,” என்றார் சோக்லோஸ்.

கொலாப்கி அடுக்கிய தட்டுடன் சமையலறையிலிருந்து மரியா வெளிப்பட்டாள். கொலாப்கி – ஹெண்டர்சனுக்கு  நெஞ்சில் எழுந்து வந்த தீவிர உணர்வெழுச்சியில் கண்கள் கலங்குவது போலிருந்தது. ஒரு குறிப்பிட்ட ஆகஸ்டு மாத பின்னிரவின் நினைவு: இதே கொலாப்கியும் ரெட்  வைனும். அவரும் அவளும் , தரையில் சப்பணமிட்டு உணவருந்திக் கொண்டிருக்கிறார்கள் அந்த வெப்பமிகுந்த இரவில், வெறும் உள்ளாடைகளில். தேய்ந்து போன இசைத்தட்டு ஒன்று படுக்கையறையில் உரக்க ஒலித்துக் கொண்டிருக்கிறது…

அந்தப் பெண்!

உணவு மேசையில் அமர்ந்த ஹெண்டர்சன் முள்கரண்டியால் கொலாப்கியை வெட்டி முட்டைக்கோஸை வாயில் போட்டுக் கொண்டார்.

“உனக்கு காரம் பிடிக்கும் என்று தெரியும் ஆனால் ரொம்பக் காரமாக இருக்காது என்று நினைக்கிறேன்,” என்றாள் மரியா’.

ஹெண்டர்சன் நிமிர்ந்து அவளை பார்த்தார். “ம். பிறகு? சோக்லோஸ் – மிக்லோஸ் – சொன்னான் – நீ மிகவும் மாறி விட்டதாக.மகிழ்ச்சியான செய்தி என்று சொல்லத்தான் நினைக்கிறேன், ஆனால் அப்படிச் சொன்னால் அது சரியாக இருக்காது,” என்றார்.

சிறிய அடிபட்ட மிருகமொன்றை குழந்தையொன்று பார்வையிடும் பாவனையில் மரியா ஹெண்டர்சனை மிருதுவான பார்வையொன்று பார்த்தாள். “நீ மாறவேயில்லை, ஜான். வெட்டிப்பேச்சு உனக்கு பிடிப்பதில்லை இல்லையா?” ஒயினை சுவைத்தவாறே சிரித்தாள். “உருப்படாத என்னுடைய யோசனைகளில் இதுவும் ஒன்று என்று நீ நினைப்பது எனக்குத் தெரியும். ஆனால் அப்படியில்லை. உண்மையாகத்தான் சொல்கிறேன்.”

“J.A.M. கணித ஜர்னலில் நீ ‘ஒத்துக்கொள்ளப்போகும்’ உண்மைக்கு எனது அனுமதி தேவை, இல்லையா? இந்த டின்னரின் காரணமே அதுதான், இல்லையா?”

மரியா சிரித்தாள். உயிரற்ற பார்வையொன்றை அவர் மேல் வீசியபடி, “ஜான், ப்ளீஸ் – உன் அனுமதி வேண்டும்தான், நான் மறுக்கவில்லை,” என்றாள்.

“என் அனுமதி,” ஹெண்டர்சன் தொடர்ந்தார். “நீ பாட்டுக்கு ஆய்வு உன்னுடையதல்ல என்று மறுப்பு வெளியிட்டுவிட்டு போய்விடுவாய். உன் மனசாட்சியின் உறுத்தலில் இருந்து உனக்கு விடுதலை கிடைத்து விடும். எனக்கு? பணிநீட்டிப்பு குழுவின் அவமதிப்பும், கருத்தரங்குகளில் ஒதுக்கப்படுவதும் நடக்கும்.”

ஹெண்டர்சனின் கையை தனது கைகளுக்குள் பொதிந்தவாறு மரியா சொன்னாள், “உனக்கு என் நன்றி கிடைக்கும், ஜான். என்னை மகிழ்வாக வைத்துக்கொண்ட பெருமிதம் உனக்கு கிடைக்கும். அவ்வளவுதான் என்னால் உனக்குத் தரமுடியும், ஜான். என்னிடம் வேறென்ன இருக்கிறது, சொல்?”

“கடவுளே!” மரியாவின் தொடுகையால் திடீரென்று ஹெண்டர்சன் கிளர்ச்சியடைந்தார். “இது மிகவும் அவசியமா? வெளியே Ph.D பட்டதோடு உலவும் அவ்வளவு முட்டாள்களை நினைத்துப் பார். நீ இதற்கு தகுதியானவள், மரியா! பலியொன்றும் இல்லாத குற்றம், அவ்வளவுதான்.”

“பாதிக்கப்படாதவர்கள் இல்லாத குற்றமென்று ஒன்று இல்லை, ஜான்,” மரியா தோள்களை குலுக்கினாள். “மதத்தை நீ கண்டடைந்தால் நான் சொல்வது என்னவென்று நீ புரிந்து கொள்வாய்.”

வெறுப்பாக தலையை அசைத்துக் கொண்டார் ஹெண்டர்சன். மரியா மாறி விட்டாள். கொஞ்சம் மந்தமாக, தன்னிச்சையாக இல்லாமல். அவள் பேசிய ஆங்கிலத்தின் சாயலும் – வசீகரிக்கும் அயல்நாட்டு தொனியைக் கேட்க முடியவில்லை; எரிச்சலூட்டும் அரைகுறை அமெரிக்க இழுவை. மரியாவுக்கு அருகே, சோக்லோஸ் ஏதும் பேசாமல்  தீவிரமான பாவனையுடன் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தார். ரெட் சாக்ஸ் ஆடிக்கொண்டிருந்த ஆட்டத்தின் ஒளிபரப்பில் ரசிகர்களின் சத்தம் வர்ணனையாளரின் உரத்தக் குரலை மீறி உச்சத்தை அடைந்து கொண்டிருந்தது. ஆட்டம் தலா மூன்று என ஐந்தாவது ஆட்டத்தில் சமநிலையில் இருந்தது.

மூவரும் கொலாப்கியை அமைதியாக சாப்பிட்டு முடித்தனர். காலித் தட்டுகளை கொண்டு போய் உள்ளே போட்டுவிட்டு ஆவிபறக்கும் பிகோஸ் நிறைந்த பாத்திரங்களுடன் சோக்லோஸ் உணவுமேசைக்கு வந்தார். இன்னொரு ஒயின் பாட்டிலை எடுக்க சோக்லோஸ் உள்ளே சென்ற போது, ஹெண்டர்சன் கைகளை மேசையின் மீது ஊன்றிக்கொண்டு மரியாவைப் பார்த்துக் கேட்டார், “ஆக, இப்போது நீ மன்னிக்கப்பட வேண்டும்? அதற்கெல்லாம் உங்களை போன்றவர்களுக்கு பாதிரிமார்கள் இருக்கிறார்கள் என்று நினைத்தேன்?” என்றார்.

மரியா உதடுகளை இறுகக் கடித்தபடி அவரை வெறித்துப் பார்த்தாள். அமைதியாக, “இது மனச்சாட்சி சம்பந்தப் பட்டது, ஜான். பல மோசமான காரியங்களை செய்திருக்கிறேன், ஜான். உன்னை ஏமாற்றியது. இன்னொருவரின் எழுத்தைத் திருடியது. மிக்லோஸ் இல்லாத காலைகளில் உன்னை அழைத்தது. எதுவுமே சரியல்ல.”

“அதுவெல்லாம் ஒரு காரணமேயல்ல. ஒன்றும் நடக்கவில்லை! நாம் கண்ட்ரோல் தியரியைப் பற்றித்தானே பேசிக்கொண்டிருந்தோம் – அதுவொரு பாவமா?”

“தவறுதான். உன்னை நான் நடத்தியவிதம் தவறுதான், ” மரியா தலையை அசைத்துக் கொண்டாள். “பல வருடங்களாக நான் மகிழ்ச்சியாக இல்லை.”

“இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறாய்?” ஹெண்டர்சன் வினவினார்.

மரியா நிமிர்ந்து அவரைப் பார்த்தாள். அவள் முகத்தில் உணர்ச்சிகள் சந்தேகத்திலிருந்து வருத்தத்திற்கும் பின்  மென்மைக்கும் கணநேரத்தில் மாறின. “ஆம், இப்போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன்,” என்றாள்.

ஹெண்டர்சன் ஏதோ சொல்ல வாயெடுத்தார், பின் தலையை இல்லையென்பது போல் அசைத்துக்கொண்டு ஒரு பெரிய மிடறு ஒயினை விழுங்கினார். மரியா மகிழ்ச்சியாக இருப்பதை அவரும் விரும்பினார். ஆனால் இப்படியல்ல. மதத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு, பின்வாசல் வழியாக மகிழ்வின் நிழலுக்குள் நுழைவது எளியதுதான். ஆனால் அதுவொரு முட்டாளின் பேரம்.   கோபம் தலைக்கேற அமைதியில்லாமல் மொத்த ஒயினையும் வாயில் கவிழ்த்துக் கொண்டு புறங்கையால் வாயைத் துடைத்துக்கொண்டார்.

“சரி, நாம் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம்,” ஹெண்டர்சன் திறந்திருந்த ஜன்னல் வழியே கேட்டுக் கொண்டிருந்த பேஸ்பால் ஆட்டத்தின் வர்ணனையை சுட்டிக்காட்டினார். “இந்த ஆட்டத்தில் ரெட் சாக்ஸ் வென்றால் உனக்கு என் அனுமதி உண்டு. உன் மறுப்பை நீ வெளியிடலாம். என்  தொழிலை சீர்குலைக்கலாம். நீ சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் ரெட் சாக்ஸ் தோற்று விட்டால், என்னை மன்னித்துக்கொள் மரியா, நீ உன் மனசாட்சியுடன் வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை. எங்கள் எல்லாரையும் போல்.”

“ஜான்! என்ன இது – என்ன பேசுகிறாய் நீ?” மரியா பதறினாள். அவளும் சோக்லோஸும் உறைந்த பாவனையுடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். “தயவு செய்து எனக்காக இதைச்செய் ஜான். நமது நட்புக்காக. ப்ளீஸ்”

“ஹெண்டர்சன்,”   சோக்லோஸ் கிசுகிசுத்த குரலில் கேட்டார், “இப்படி எளிமையாக தீர்க்கக் கூடிய விஷயமல்ல இது. நம் அனைவருக்கும் இது முக்கியம்.”

தனது நாற்காலியில் சாய்ந்துகொண்ட ஹெண்டர்சன் தோள்களை குலுக்கிக் கொண்டார். இவ்வளவு நாள் விதிகளின் படி ஆட்டத்தை  ஆடி என்ன கண்டார் தோல்வியைத் தவிர? விதிக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்க்க தீர்மானித்து விட்டார்.

சோக்லோஸ் அறையின் மூலையிலிருந்த தொலைக்காட்சியை இதுவரை பார்த்திராத ஒரு பொருளை பார்ப்பது போல வெறித்துப்பார்த்தார். பின் சானல்களை மாற்றி ரெட் சாக்சின் ஆட்டத்தை வைத்தார். மூவரும் தத்தம் நாற்காலிகளை நகர்த்தி போட்டுக்கொண்டு அமைதியாக ஆட்டத்தை பார்க்க ஆரம்பித்தார்கள். ஆறாவதிலும் எட்டாவது ஆட்டத்திலும் ரெட் சாக்ஸ் ஸ்கோர் செய்ய, ஒன்பதாவது ஆட்டத்தில் டைகர்ஸ் மூன்று சுற்று ஓட்டத்தின் மூலம் மீண்டும் ஆட்டத்தை சமன் செய்தது. ஒன்பது ஆட்டங்களின் முடிவில் புள்ளிகள் சமமாக இருந்ததால், ஆட்டத்தை தீர்மானிக்க மேலதிக இன்னிங்ஸ் ஒன்று என்ற கணக்கின்படி ஆட்டம் மீண்டும் துவங்கியது. தனது நாற்காலியில் கைகளை இறுகக் கட்டியபடி முன்னகர்ந்து மரியா அமர்ந்திருக்க, ஹெண்டர்சனோ எதிலும் மனம் நிலையில்லாமல் மைதானத்தின் மேல் பறக்கவிடப்பட்டிருந்த பலூனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.  மூன்று நான்கு என ஒயின் கோப்பை அடுத்து கோப்பையாக அருந்தியபடியே ஹெண்டர்சன் பெரிய ஜன்னல் வழியாக அந்தி  மெதுமெதுவே இளஞ்சிவப்பிலிருந்து  ஆரஞ்சு நிறமாக தொலைவானம் வரை மாறுவதை பார்த்துக்கொண்டிருந்தார். எத்தனை அந்திகள் அவரது அலுவலக ஜன்னல் வழியே வடக்குவானின் வர்ண ஜாலங்களை, செந்நிற தீற்றல்களை தனிமையில் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்! சோக்லோஸ் தன்னை உற்றுப் பார்த்துக்  கொண்டிருப்பதை உணர்ந்து ஹெண்டர்சன் திரும்பிப் பார்த்தார். சோக்லோஸ் திரும்பிக் கொண்டார்.

டைகர்ஸ் அணி பதினொன்றாவது ஆட்டத்தில் ஒரு ஓட்டம் முன்னிலை; ரெட் சாக்ஸ் இரண்டு ஓட்டங்களை தவற  விட, கூட்டத்தில் ஒரு சலசலப்பு.

“இப்போது என்னவாகும்?” மரியாவின் பக்கவாட்டு முகத்தைப் பார்த்து பேசினார் ஹெண்டர்சன். “என்ன நடக்கும் மரியா? நீ மேலும் மேலும் உன் பாவ மன்னிப்புகளை செய்து கொண்டே போவாய். உன் மன நிம்மதியைக் கூட்டிக் கொள்வாய். பிறகு? உன்னைத் சுற்றியிருப்பவர்களை நினைத்துப் பார்த்தாயா? மன்னிப்பு என்பது அவ்வளவு எளிதில் கிடைத்து விடுவதில்லை, மரியா!”

மரியா அவரைத் திரும்பிப் பார்க்கவில்லை. “கணிதம் போல் மதத்திலும் விடை  காண முடியாத கேள்விகள் நிறைய உண்டு. பொறுத்திருந்து பார்,” என்றார் ஹெண்டர்சன்.

அவர்  சொல்லிமுடிக்கவும், கூட்டத்தின் சத்தம் ஒரு பேரிரைச்சலாக எழும்பியது. விசையுடன் அடிக்கப்பட்டு அந்தரத்தில்  பறந்த பந்தை கண்டார் ஹெண்டர்சன். அசைவில்லாமல் தொங்கியது போல் தோன்றிய பந்து, திடீரென ஒரு மாயக்கரத்தினால் அடிக்கப்பட்டது போல் கீழ் நோக்கி விழத் தொடங்கியது. மரியா பரபரப்பில் கைகளை கொட்டிக் கொண்டாள். டெட்ராய்ட் அணியின் வலதுபுற தடுப்பாட்டக்காரர் பின்னோக்கி ஓடி, மைதான சுவரில் மோதுவது போல் விழுந்து எழுந்தான். மைதான கோட்டை தாண்டிப்  பறந்த பந்து, அவன் எழுந்த போது அவனது நீட்டிய கையின் கிளவ்ஸுக்குள். பந்தை பிடித்து விட்டான்! பாஸ்டன் ரசிகர்களிடம் ஒரு நம்பிக்கையில்லாத முனகல்; டெட்ராய்ட் ஆட்டக்காரன் முஷ்டியை காற்றில் குத்தியவாறு பந்தை கைகளுக்குள் மாற்றியவாறு தனது அணியினர் அமர்ந்திருந்த பக்கத்திற்கு செல்வதைக் கண்டார்கள்.

சோக்லோஸ் பெருமூச்செறிந்தார். “நான் கண்களை மூடிக்கொண்டேன். ஆட்டங்களில் என்னால் இந்த பதற்றத்தைத் தாங்க முடிவதில்லை.” மேற்கொண்டு ஏதோ சொல்ல வந்தவர், ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். தொலைக்காட்சியில் ஆட்டக்காரர்கள் ஒருவருக்கொருவர் கைகொடுத்துக் கொண்டு தத்தம் அணியின் டக் அவுட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

ஹெண்டர்சன் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டிருந்தார். மரியா தொலைக்காட்சிப்பெட்டிக்கு அப்பால் மிகத் தொலைவில் ஏதோவொன்றை பார்ப்பவள் போல் அமர்ந்திருந்தாள். உதடுகள் ஒரு மெல்லிய கோடாக இறுகியிருக்க, கைகள் எதையோ வேண்டுவன போல் குவிந்திருந்தன. அவளை பார்த்தபடி, “நான் கொடூரமானவனாக இருந்திருந்தால், இதில் ஒரு நீதியை சுட்டிக் காட்டியிருப்பேன்,” என்றார் ஹெண்டர்சன்.

“ஆனால் நீ கொடூரமானவனில்லை. நீ தயை நிறைந்தவன்; புத்திசாலி, கருணையுள்ளவன்.” மரியா ஹெண்டர்சனின் கையை தான் கைகளில் ஏந்திக் கொண்டாள். “நீ கொடூரமானவனில்லை தானே, ஜான்?”

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் மொழியாக்கச் சிறுகதை - அத்தியாயம்– 5

https://padhaakai.com/2016/07/17/zilkowkskys-theorem-5/

Pandit Venkatesh Kumar and Raag Hameer