சீறும், உலகை வெல்லப் பாயும்
சிங்கங்களே, அடக்க வியலா
வீறும் கொண்ட இளஞ் சமுதாயமே
விண்ணை வளைக்கும் நம்பிக்கையும்
மீறும் உழைப்பும் துணிவுள்ளமும்
மிஞ்சும் இளைஞரைக் காணும்
பேறும் எமக்கிலையோ வென்றிருந்தேன்
பாரத ஏறுகளை காணும்வரை
நமதருமை பாரதத்தை சூழ்ந்திடும்
நயவஞ்சகர் தம்மிடம் தந்திடவே
உமதுள்ளம் பொறுத்திடுமோ - அன்றி
உயிர் துடித்திடுமோ உடல் கொதித்திடுமோ
சமன்பாடு பரப்பிய எம்மாருயிர்
சத்தியத்தாய் உயிரின்விலை என்ன என்ன
எமக்குள்ளே எம்மிளைய சமூகத்தினுள்ளே
என்றும் நிலவும் ஒற்றுமையே
- 03/05/1984