கடிதம் - 4
17/11/89
பிரிய சரவணா,
உன் கடிதம் கிடைத்தது. மகிழ்ச்சி. I.C. ஏன் சரியாக எழுதவில்லை? அது ஒன்றும் அவ்வளவு கடினமான பாடம் அல்லவே. எனினும் நீ அதில் தேர்ந்து விடுவாய் என நம்புகிறேன். இக்கடிதம் உன்னை அடையும் நேரம் எல்லாப் பரீட்சைகளையும் நல்ல முறையில் எழுதிவிட்டு வீடு சேர்ந்திருப்பாய் என நம்புகிறேன்.
ஹரியின் சித்தப்பாவின் மறைவு மிகவும் வருத்துகிறது. வாழ்வு எவ்வளவு அநித்தியமானது.
யதார்த்தம் வேறு. நம் லட்சிய இலக்கு வேறு; வரையறைகள் வேறு. பொதுமை, பெரும்பான்மை இவையே யதார்த்தம் என்றால் என் யாசகம் யதார்த்தம் அல்ல. "சூழலின் சுக வெம்மை" தேவைப்படுகிறதா? சரவணா! இது சிதை வெம்மையோ, பணிக்குடச் சூடோ அல்ல. உனது மூச்சில் எனது மூச்சடைக்கும் புழுக்கம். பொறாமை, அறியாமை, கர்வம் இவை இச்சமூகத்தை தீக்கிரையாக்கியுள்ளன. இச்சூழல் வெம்மையா? எனில் எப்பனி தீர்க்க இவ்வெம்மை நாடுகிறாய்.
'ஒரு பானைச் சோற்றுக்கு....' பழமொழி மனித இனத்திற்கு ஒத்து வராது. சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொரு மனிதனும் ஒரு தனி உலகம். நீ தனி. நான் தனி. நமது ரசனைகள் ஒத்துப் போகலாம். நம் சிந்தனைகள் ஒரே தளத்தில் இறக்கலாம். நம் தேவைகள் ஒரே மாதிரி இருக்கலாம். எனினும் நான் பார்க்கும் உலகம் தனி. நீ பார்க்கும் உலகம் தனி. நம்மை தனி வர்க்கமாய் காணலாம். வரையறுக்க முடியாது. நமது வர்க்கத்தின் குணாதிசயமாய் எதையும் நிர்ணயிக்கவும் முடியாது. இருபதாம் நூற்றாண்டில் ஏறக்குறைய எல்லோருமே சிந்தனையாளர்கள். அவர்களது சிந்தனையின் திக்குதான் வேறு. எனவே விளக்குகளை வைத்து எதையும் நிர்ணயிக்க முடியாது. எனவேதான் சூழல் மறுத்து, யதார்த்த நிர்பந்தம் வெறுத்து, வாழ்வின் ஏதோ ஒரு திசையில் என் பாட்டுக்கு போய்க் கொண்டிருக்கிறேன்.
யதார்த்தத்தை ஏற்காததின் காரணம் பயம் அல்ல. இங்கு கற்பிக்கப்பட்டு வரும் யதார்த்தம் முட்டாள்தனமானது. இவர்கள் தங்கள் போக்கில் வாழ்ந்து கொண்டு, யதார்த்த வாழ்க்கை என்று பீற்றிக் கொள்வது வேடிக்கை. இவர்கள் எப்படி வாழ்ந்தாலும் அதுதான் யதார்த்தமா?
'அனைவரையும் அப்படியே ஏற்றுக் கொள்ளத் தெரிய வேண்டும்; பழக வேண்டும்'. உண்மை. அதற்காக இவர்களது முட்டாள்தனத்தையும் கபடத்தையும் என்னால் அனுமதிக்க முடியாது. இவர்களது பாமரத்தனம் என்னைப் பற்றிய தவறான கணிப்பைத் தோற்றுவிக்கிறது என்றால், அது என் நிஜத்தின் தோல்வி. இதை என்னால் ஏற்க முடியாது. இதுவே இச்சமூகத்தின் பெரும்பான்மை.
நான் பொதுனலவாதியல்ல. இவர்களிடம் போராடி என்னைப் பிரதிபலித்து, ஏதோ ஒரு காலத்தில் என்னைப் பேசுவதற்காய், சிலை வைப்பதற்காய், வெற்றி பெற. நான் ஓர் உன்னதமான சுயநலமி. எனக்கு நிகழ்தேதிதான் நிஜம். இன்றைய நாள்தான் என் வாழ்வின் அனைத்தும். நாளைகள் நிச்சயம் என்றாலும், இன்றைய கணத்தில் நேற்றும் நாளையும் மாயைகளே. என் நிலைப் பிரக்ஞை என்றும் என்னில் உண்டு. என் ஜீவாதாரமே அதுதான்.
நான் எதிர்ப்பது இல்லை. விலகிப் போவதுண்டு. வெறுக்கச் செய்து விலக்கி வைப்பதுண்டு. அந்த வெறுப்பை மீறிய அணுகல் எப்போதாவது ஏற்படுவதுண்டு. அதுவே எனப்பற்றிய மற்றும் என் புரிதல்களுக்கு வழி வகுக்கும். குறைபாடுகளையும் விகாரங்களையும் (மனதின்) என்னால் புரிந்து கொண்டு விலகி நின்று வேடிக்கை பார்த்து, நேசிக்க முடியும். அவற்றை என்னால் மதிக்க முடியாது.
என் குற்றங்களை என்னால் ஒத்துக் கொள்ள முடியும். எனக்குள் என்னால் இருமுகம் காட்ட முடியாது, என் சுய கற்பிதங்களால் என் தவறை வெளியில் மறுத்து விளையாடிக் கொள்ளலாம். என்னிடம் மறைக்க முடியாது. சந்தியில் பல முகம் காட்டுவது நிர்பந்தம். வாழ்க்கை. உள்முகத்திற்கு அது வேடிக்கை. பல முகம் காட்டி, உண்மையாக இருக்க முடியுமா? அடிப்படை உண்மையை பாதிக்காமல் எதனை விதமான முகங்களையும் காட்ட முடியும். எனினும், பல முகம் காட்டுதல் கபடம் அல்லவா? ஆம். கபடந்தான். கபடம் இங்கு கட்டாயம். அம்மணமாய் வெளிவரும் நிஜம் அடிபட்டே சாக. கபடம் ஓர் கேடயம். நிஜத்தை விட்டெறிந்து விட்டால், நம் நிர்வாணம் கூட இவர்களுக்கு நாடகமாய்ப் படும்.
பொறுமை முக்கியம். தணலும் தண்மையும் மாறி மாறிச் சூழ்ந்து நிற்க, கனன்று தணியும் பொறுமை அவசியம். உளம் அணைத்து வழிகளிலும் இம்சிக்கப்பட்டும், அழியாமல் அமைதி காட்டும் பொறுமை அவசியம். இத்தகு பொறுமையை தவமேற்கொள்ளும்போது அவமானம், துக்கம், புகழ் எல்லாமே அந்நியப்பட்டுப் போகும்.
சரவணா! நானும் நீயும் விளக்குகள் அல்ல. விலகத் துடிக்கும் ஜீவன்கள். இன்னும் இச்சமூகத்தில் நாம் விழையும் சிற்றின்பங்கள் ஏராளம். பாலகுமாரன் மிக நன்றாக (significantly) விலகியிருக்கிறான். சுந்தர ராமசாமி, அக்னிபுத்திரன் ஆகியோரும் நல்ல விலக்குகள் அத்தகைய ஒரு தீவிரமான விலகல் தேவை. நாம் விலக்குகள் அல்ல. நாம் எளிதில் உணர்ச்சி வயப்படுகிறோம். பாலியல் நட்பில் அதீத கவனம் செலுத்துகிறோம். நாம் நம் திசை வரையறுக்கப்படாமல், போகும் திசையை நம் திசையை கற்பித்துக் கொண்டு பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
சரவணா! "காலச் சுழற்சியில் காணாமற் போவது" அச்சுழற்சியின் நியாயம்; கட்டாயம். களிப்பும், சிலிர்ப்பும், சோர்வும், சோகமும், சுழற்சியின் அத்தியாயங்கள். இதை அனுபவித்து அதன் போக்கிலேயே போவோம். சுழலும் சக்கரத்தில் நம்மைப் பிணைத்துச் சுற்ற, நமக்குச் சக்கரமும், சக்கரத்திற்கு நாமும் நித்தியங்கள் (relativity). இச்சுழற்சி சத்தியம். நாம் சுழவதும் சத்தியம். இதில் அசத்தியமாய் நான் காண்பது ஏதுமில்லை. எனக்காகப் பிறர் வாழ வேண்டாம். நானும் எவர்க்காகவும் வாழ்வதில்லை. ஆயினும் என்னைப் போருக்க உனது வாழ்வு, எனக்காகத் தான், என்னை சிந்திப்பதாய் தான் அமைய வேண்டும். இதன் நேர்மாறும் நிஜம்.
நேற்றைய உண்மை இன்றைக்குப் பொய்யாகாது. உண்மை என்றைக்குமே உண்மைதான். ஆனால், சில வேளைகளில், உண்மை மறைந்திருக்க, ஒரு சில பொய்கள் வேஷம் போட்டுக் கொண்டிருக்கும். முற்றிலுமான உண்மை என்றுமே பொய்யாகாது. புவியீர்ப்பு தத்துவம் பொய்யாகுமா? இற்றைய கணத்தில் நாம் உண்மை என்று கற்பிதப் படுத்திக் கொண்டிருக்கும் எந்த உண்மையான உண்மையும் என்றுமே உண்மைதான்.
----------பற்றி நான் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ளவும் விடவில்லை. புரிந்து கொள்ள அனுமதிக்காதது கபடமில்ல. ஒரு விழைவு. சிற்றின்பம். கொஞ்சம் sadism கலந்தது. நான் அதீதமாய் கற்பனை செய்யப்பட்டு விடுவேனோ என்ற பயம். என் கடந்த காலங்களில் ஏற்பட்ட சில தவறான புரிவுகளின் விளைவுகள் இன்னும் என்னைத் தண்டித்துக் கொண்டுள்ளன. தவறு செய்யாமலே தண்டிக்கப்படுகிறேன். அந்த தண்டனை உணர்த்தும் எச்சரிக்கை இது. --------இடம் நிறைய பேச வேண்டும். என் நிலை தெளிவாக. நான் தெளிய.
சென்ற ஞாயிற்றுகிழமை சுருளி அருவிக்குச் சென்றோம். லேசான சாறல் வேறு. நண்பர்களாக ஆறு பேர். சரியான குளியல். அதன்பின் இதுவரை சென்றிராத ஒரு பாதையில் சென்ற போது, அருமையான ஒரு இடம் அமைந்தது. வளைந்து செல்லும் ஓடை. சுற்றிலும் அடர்த்தியான மரங்கள். அவற்றைக் கிழித்து உள்வரும் கிரணக் கீற்றுகள். ஓடைக்கரையில் வழுவழுப்பான சரளைக் கற்கள். ஓடையின் நடுவே ஆங்காங்கே பாறைகள். அதில் ஒரு பெரிய பாறையின் நடுவில் அமர்ந்து கொண்டு celebrate பண்ணிவிட்டு, ஒரே பாட்டும் கவிதையும் தான். மிகவும் நன்றாக இருந்தது.
இங்கு நசீமும் (Loyola) அவனது தோழர்களும் வந்திருக்கிறார்கள். அவர்களை கவனித்துக் கொள்வதில் நேரம் போகிறது.
மற்றபடி வேறு விசேஷமில்லை.
அன்புடன்,
ரமேஷா