பள்ளியில் படித்து கொண்டிருந்த பதின்ம பருவம். அப்போது என் மிக நெருங்கிய ஒரே தோழனின் பெயர் சுரேஷ். கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளுக்கு அவன் வீட்டுக்கு முதல் நாளே சென்று விடுவேன்; இரண்டு நாட்கள் கழித்து தான் வீடு திரும்புவேன். அதே போல் அவனும், தீபாவளி, பொங்கலுக்கு எங்கள் வீட்டுக்கு வந்து விடுவான்.
அப்படி ஒரு தீபாவளி. வயது 15 அல்லது 16 இருக்கும் என நினைக்கிறேன். ஆளுக்கொரு சைக்கிள் இருந்தாலும், பல இடங்களுக்கு பேசியவாறே நடந்து செல்வதுதான் எனக்கும் அவனுக்கும் பிடித்திருந்தது. அயனாவரத்தில் இருந்த எங்கள் வீட்டில் இருந்து வாரக் கடைசியில் செல்லும் கன்னிமாரா நூலகமாகட்டும் அல்லது எப்போதாவது செல்லும் மெரீனா கடற்கரையாகட்டும், அப்படியே மெதுவாக பேசிக்கொண்டே நடையை போட்டு விடும் எங்கள் பழக்கம் எங்கள் வீட்டில் தெரிந்திருந்ததால், மதியம் அம்மா தந்த கறிச்சோறு சாப்பிட்டவுடன், "கெல்லீஸ் வரைக்கும் போயிட்டு வர்றோம்பா", என்று கிளம்பியதை யாரும் பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை.
திரையரங்குக்கு எதிர் புறம் இருந்த கடைதொகுப்பின் ஓரம் ஒரு பான்பீடா கடை இருக்கும். கடை எல்லாம் இல்லை அது. குடை. குடையின் கீழ் ஒரு பெரிய சதுர பெட்டி; பேட்டியின் மேல் பற்பல நிறங்களில் டப்பாக்கள். அவை அடுக்கப்பட்டிருந்த அழுக்குப்படிந்த தாம்பாளத்தில் முரட்டு வெற்றிலைகள். அதே அள்வு முரட்டுத்தனமும் அழுக்கும் கொண்ட அவனிடம் தான் நானும் சுரேஷும், அபிராமிக்கோ அல்லது நாங்கள் வழமையாக புத்தகம் வாடகைக்கு பெறும் கந்தன் லென்டிங் லைப்ரரிக்கோ, வரும்போது ஸ்வீட் பீடா போடுவது.
கறிச்சோறு நெஞ்சை நிறைத்துகொண்டிருக்க, மிதப்போடு அவனிடம் சென்று, "ரெண்டு பீடா" என்றோம். அப்போதுதான் அவன் அந்த சரித்திரப் புகழ் வாய்ந்த அந்த கேள்வியை கேட்டான், "240 யா, 320 யா?" நானும் சுரேஷும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டோம். "என்னடா சொல்றே" என்றேன். "நீ என்ன சொல்றே' என்றான் அவன். ஒரு மிகச் சிறிய சிந்தனைக்கு பிறகு, "240 " என்றோம் கோரசாக. அதற்கு முன் வரை அந்த பீடாவை போட்டதில்லை. அதில் என்ன இருக்கும் என்றும் தெரியாது. ஹ, என்ன இருந்து விடப்போகிறது என்றுதான் சொன்னது. அப்போதும் அந்தப் பாவி கேட்டது ஞாபகம் இருக்கிறது, "இதுக்கு முன்னாடி போட்டிருக்கீங்க தான?' ஒரு கெத்தில் ஆமென்று விட்டோம்.
பின் மதிய வெயில். சாலையில் இருந்த கூட்டமெல்லாம் திரையரங்குக்குள் சென்று விட, அந்த தீபாவளி தெரு காலியாக இருந்தது. கையில் வாங்கியவுடன் அந்த பீடாவை வாயில் இடாமல், பேசிக்கொண்டே வீட்டை நோக்கி கிளம்பினோம். அப்போந்திருந்த உமா திரையரங்கு தாண்டி, கூவம் பாலம் தாண்டி மேடவாக்கம் நோக்கி இருந்கும் போது, ஆளரவமற்ற அந்த சாலையில், மிக அசால்டாக பீடாக்களை வாயில் போட்டோம்.
ஓரிரு நிமிடங்கள் சென்றிருக்கும். வழமையான ஸ்வீட் பீடா சுவைக்கும்போது எதையும் வெளியே உமிழ்வதில்லை. அதேபோல, வாயில் ஊறிய சாற்றினை கொஞ்சம் உள்ளே இறக்கியது தான் தெரியும். நின்ற இடத்திலேயே உலகம் தலை கீழாக சுற்றுவது போல் ஆடுகிறது. கால்களுக்கு கீழே தரையையே காணவில்லை; நெஞ்சை அடைக்கிறது; கண்கள் இருள்கிறது; ஒரே நொடியில் உயிர்பயம் வந்து விட்டது. 'சரவணா, தீபவளியோடு நீ காலி' என்று நெஞ்சை ஒரு கையால் பிடித்து கொண்டு, இன்னொரு கையால் நடைபாதையின் ஓரம் நிற்கும் சிமின்ட் தடுப்புகளை பற்றிக் கொண்டு, திரும்பி பார்த்தால், அங்கே நிலைமை இன்னும் மோசம். அதே சிமின்ட் தடுப்புகளை தலையால் முட்டு கொடுத்து கொண்டிருந்தான் சுரேஷ். என்னடா என்று கேட்பதற்குள் வாயில் மூக்கில் எல்லாம் வாந்தி. நிற்க வேறு முடியவில்ல இருவருக்கும். கிளாக் வொர்க் போல ஒரே நேரத்தில் பக்கத்தில் பக்கத்தில் நின்று கொண்டு கூட்டாக வாந்தி எடுத்து கொண்டிருந்தோம்.
அடிவயிற்றை சுருட்டி வெளியில் கொண்டு வந்து விடும் போலிருந்தது.
ஒரு நான்கைந்து தடவைகளுக்கு பிறகு மனிதபிறவியாக நின்று கொண்டு பேசுவதோ வாந்தி எடுப்பதோ இயலாத காரியமாகி, மெதுவாக அப்படி அப்படியே அவரவர் எடுத்த வாந்திகளுக்கு அருகிலேயே ஆளுக்கொரு திசையை பார்த்து கொண்டு, நடைப்பாதையிலேயே செட்டிலாகி விட்டோம். வாயில் வழிந்த எச்சிலை கூட துடைக்க திராணியில்லாமல், உள்மனது சிந்தனையின் வாயிலாக நம்மை தாக்கியது 240 பீடாதான் என்று கண்டுபிடித்தோம் (வெளிமனது முழுதும் சிந்திக்க முடியாமல் வாந்தி).
பஸ்ஸில் ஏறி வீட்டுக்கு மட்டுமல்ல, வேறெங்கும் போவதை நினைத்து பார்த்தாலே மீண்டும் ஒங்கரித்தது. ஆகவே இந்த முகங்களோடு வீட்டுக்கு இப்போது போக முயற்சிப்பதை விட, கொஞ்ச நேரம் சென்றால் தெளிந்து விடும், மீண்டும் நடந்து ஆசுவாசமாக போகலாம் என்று உட்கார்ந்திருந்தோம். இனி வெளியே வருவதற்கு குடலை தவிர வேறொன்றும் உள்ளே இல்லை என்றான பிறகு, வானம் மேலேயும் , பூமி கீழேயும் ஒருவாறு நிலைத்தது.
எழுந்து நின்றால், பயங்கரமாக ஆடியதை ஒருவர் தோள் மீது மற்றவர் கை போட்டுக் கொண்டு, ஒரு கூட்டு முயற்சியில் நகர்ந்து நகர்ந்து டீக்கடை ஒன்றிற்கு வந்து விட்டோம். 'என்ன தம்பிகளா, டீயா' என்று கேட்டவர்க்கு பதிலொன்றும் சொல்லாமல், ஆளுக்கு இரண்டு கிளாஸ் தண்ணீர் முகர்ந்து முகத்தில் அடித்து கொண்டதை பார்த்ததும் புரிந்திருக்கும். ஒன்றும் பேசாமல் இரண்டு ஸ்ட்ராங் டீ போட்டு கொடுத்தார் அந்த நல்ல மனுஷன். குடித்து விட்டு டீக்கடையில் ஒரு மணிநேரம் உட்கார்ந்திருந்தோம் என்று மரியாதையாக சொல்வதை விட அவமரியாதையாக கிடந்தோம் என்று சொன்னாலும் தப்பில்லை.
இருட்டி விட்டது. ஆனால் தெளிந்து விட்டது. நாலு கிமீ தூரத்தை மூன்று மணிநேரம் நடந்து (உருண்டு என்றும் பாடம்) வீட்டுக்கு சென்று சேர்ந்தோம். நாங்களிருந்த கோலத்தை பார்த்து பதறிய அம்மாவை, அப்பா, என்ன புரிந்து கொண்டாரோ, 'விடு விடு, நடந்து களைப்பா வந்துருக்கானுங்க, கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடட்டும்' என்றார். என் அறைக்குள் சென்று இருவரும் விழுந்தது தான், நடுநிசியில் எழுந்து தான் அடுக்களையில் சாப்பாட்டுக்கு உருட்டினோம், மறக்க முடியாத அந்த தீபாவளியில்!