Sunday, September 6, 2009

காத்திருத்தல்

கனன்று பொதிந்த
எண்ணங்களின் எச்சங்கள்
உறைந்து உறங்குகின்றன
உன்
மயிரிழை தீண்டல்
குழலுதிர் ஒற்றைப்பூ
மணம்சுமந்த சேலைநுனி
பெருநெருப்பு
மூட்டிவிடும் சாத்தியத்துடன் 

நுண்புலன்



மேசை நுனியை
எதற்காகவோ
பற்றிக் காத்திருக்கும்
உன் விரல்களை
பார்க்கிறேன்
உன் விரல்களன்றி
வேறெதுவுமற்ற
பார்வைக்கோணத்தில்
உன் முகம் சிந்தும்
புன்னகையை
உணர்கிறேன்

நீ-நான்

படியில்
தவறி விழவிருந்த
என்னை இழுத்து நிறுத்திய
உன்னில் நான்
என்னில் நீ

கற்பிதம்

உன்
கொள்கைகள வேறு
என்
சித்தாந்தன்களோ வேறு
பகிருமனைத்திலும்
தேவையில்லை
இணக்கம் என்பதில்
இணக்கம் உண்டு
நம்மிடம்

துணை

இருள்கவிந்து
இலைவழி சொட்டும்
முன்பனிக்கால மரத்தினடியில் நாம்
உறக்கம் குலைக்கும்
உன் குழறல் பேச்சு கேட்டு
அனைத்து செல்வேன்

உணவை சூடு செய்து
மேசையில்
எதிரெதிர் அமர்ந்து
கண்கள் பார்த்து உண்போம்
விடியும் நாளை
நினைக்க மறுத்து

நர்த்தகி



நாட்டிய நாடகம்
காணக் கிளம்புகிறோம்
மெல்லிய இசை
கசியுமுன்
படுக்கைஅறையில்
நீ
உடைமாற்றும் வைபவம்
நடந்தேறுகிறது

நளினங்களின் ஈர்ப்பில்
பார்த்திருக்கிறேன்
அழகும் ஆளுமையும்
மிளிரும்
அசைவுகளின் முடிவில்
கரமொதுக்கி
நீ சிரிக்கிறாய்
'நர்த்தகி நீ' என்கிறேன்

அவை

நீ கேட்டும்
நான் தரக்கூடாத
துயரங்களையும்
அவலங்களையும்
தாங்கியழுந்தி
அன்றொருநாள் வந்தேன்

தோள் உரச
அமர்ந்திருந்தோம்
நீ பேசவில்லை
நான் பேசவில்லை
நாளின் முடிவில்
கிளம்பினேன்
நீ அமர
விட்டுவிட்டு

Pandit Venkatesh Kumar and Raag Hameer