Saturday, October 13, 2012

விருமாண்டி - நேர்மையின் காதல்

த்தனையோ விமர்சனங்கள், தாக்குதல்களைத் தாண்டி விருமாண்டி வெளிவந்த அந்த காலகட்டத்தை நினைவு கூர்ந்து...


அந்தத் திரைப்படத்தை எத்தனைக் கோணத்தில் பார்க்க முடியுமோ அத்தனைக் கோணத்திலும் பார்த்து விமர்சனங்கள் வந்ததுண்டு.  தேவரினத்தை தூக்கிப் பிடிக்கும் கதை, தென் தமிழகத்தில் நிலவும் கடிய சாதிய அமைப்பை விமர்சிக்கும் படம், இனக்குழுக்களுக்குள் பலியாடாக மாறியலையும் இளைஞர்களின் கதை, மடிந்து வரும் விவசாயத்தை பற்றிய விமர்சனம், காவல் துறை/நீதித் துறை/சிறைத்துறைகளுக்குள் நிலவும் ஊழலைப் பற்றிய விமர்சனம்...

இது போக, அந்தத் திரைப்படமே தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் 'மரண தண்டனைக்கு எதிரான பிரச்சாரம்' என்பதுவும் ஒன்று.

ஆனால், பற்பல வருடங்கள் கழித்து மீண்டும் விருமாண்டியை மீண்டும் பார்த்த போது இயக்குனர் கமல் ஹாசன் அந்த கதைக்குள் பொதிந்திருக்கும் ஒரு மிக அழகிய காதல் - எவ்வித தயக்கங்களுமில்லாத, நேரடியான, உணர்வுபூர்வமான, அதனாலேயே பச்சை வாசனை அடிக்கிற காதல், என்னை தாக்கியது.

என்னைக் கேட்டால் மேற்கூறிய விருமாண்டியை பற்றிய அத்தனை அடையாளங்களையும் மீறி, தமிழ் திரையில் வந்த மிக உணர்வு பூர்வமான ஒரு காதல் கதை என்று ஐயமில்லாமல் கூறுவேன். படத்தின் நீளக் கணக்குப்படி பார்த்தால், அன்ன லட்சுமியும் விருமாண்டியும் திரையில் காதலர்களாக வரும் பகுதி மிகக் குறைவு. ஆனால், அவர்களின் பாத்திரப் படைப்புகளும், வசனங்களும், அபிராமி-கமல் நடிப்பும் என் புலனில், அன்ன லட்சுமி-விருமாண்டி காதலை செதுக்கி விட்டன.

மிகக் குறைந்த உரையாடல்கள்...

இத்தனைக்கும், அவர்களிருவரும் ஒன்றாக இருக்கும் போதெல்லாம் அவனின் துடுக்குத் தனமான பேச்சே முன்னிற்கிறது; அவளின் வெட்டி விடும் வார்த்தைகள். நெருக்கம் கூடக் கூட, அவன் அவளிடம் தன் இயலாமைகள், ஆதங்கங்கள், பொருமல்கள் என தன்னைத் திறக்கிறான். அவள் மெதுமெதுவே ஒரு தோழியாக மாறுகிறாள். கொலைகள் நடக்கும் போது, கிணற்றுக்குள் அமர்ந்து, அன்னலட்சுமியின் மடியில் தலை புதைத்து விருமாண்டி அழுதவாறே பேசும் இடம்!

ஊரை விட்டு கிளம்பி, நள்ளிரவில் நிலவொளியில் காட்டுக்குள் முயங்கும் போதும் ஓர் ஆழமான புரிதலே வெளிப்படுகிறது. அவள் நகத்தால் தன் மார்பில் காயமேற்படுத்தி காமம் கூடக் கூடும் காட்சியில், அப்படியோர் அந்தரங்கத்தை, காதலின் தனிமையை, வஞ்சிக்கப்பட்ட காதலை நான் எப்போதும் உணர்ந்ததில்லை.

யன்னல் கம்பிகளை பிடித்தவாறு நிலவை ஏக்கத்துடன் பார்த்து நிற்கும் புதுக் காதல் மனைவியை, விருமாண்டி கேட்கிறான் - 'என்ன விசனமா இருக்க? என்னடா, இப்படி ஒரு அசட கல்யாணம் பண்ணிக்கிட்டோமேன்னு நினைக்கிறியா?'. ஊரே பயப்படும் சண்டியர், சல்லிக்கட்டு காளையடக்கும் வீரன், ஊரில் பெரிய பணக்காரர்களில் ஒருவன் - கதை முழுதும் மற்றெல்லாவரிடமும் இதுதான் அவன் முகம்; முகங்கள். அவளிடம் மட்டும்தான் - அவன் தன் சுயத்துடன் நிற்கிறான். அவளை முழுமையாக நம்புகிறான்; விளையாட்டுதனத்துக்கும், சிரிப்புக்கும், குறும்புகளுக்கும், நையாண்டிக்கும் இடையே எப்போதும் அவன் கண்களில் அவள் மேலான மதிப்பும் (ஆம், மதிப்பு), நேசமும், காதலும் வழிந்து கொண்டேயிருக்கிறது.

காதலி/மனைவி இறந்து நாயகன் தனித்து வாழும் எத்தனை படங்களை பார்த்திருப்பீர்கள். விருமாண்டி, படத்தில் பேச்சு போக்கில் - 'அன்ன லட்சுமி இல்லாத வாழ்க்கை',  'அன்ன லட்சுமி இல்லாத இந்த வாழ்க்கை', என்று கூறுவதில் தெரியும் அவன் உணர்வு; அவன் நேசம்; அவர்களின் காதல். 'என்ன பெத்தா! (என் தாய் - அன்ன லட்சுமியை சொல்கிறான்), அவ இருந்தா, நான் இன்னிக்கு இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டேன்', என்று அவன் கூறும் போது என் மனதில் எழுந்த உணர்வுகளுக்கு வடிவமில்லை.


ஏஞ்சலாவிடம், சிறைக்கூடத்தில் தன் கதையை விவரிக்க ஆரம்பிக்கும் போது கூட, அன்ன லட்சுமியிலிருந்துதான் அவன் விவரணை தொடங்குகிறது. (மாறாக, கொத்தாளன் அவன் கதையை கூற ஆரம்பிக்கும்போது, தன் குல பெருமை, தன் ஊர் பெருமையில் தொடங்கி விருமனை பழிசொல்லி நகர்வதைக் காணலாம் - இது போல் படம் முழுதும் அவ்வளவு ஒப்புமை விவரங்கள் பொதியப்பட்டிருக்கிறது) மார்பில் அவள் நகத்தால் கீறி ஏற்பட்ட வடுவைக்காட்டி, "இது என்ன தெரியுதா? என்னோட ஆயுள்ரேகை;என் விதி; அன்ன லட்சுமியோட ஞாபகம்; அவ நகம்" என்கிறான்.


ஒரே ஒரு வடு - ஆயுள் ரேகையாகவும், விதிக் கோடாகவும், காதலியின் ஞாபகமாகவும் மாற வேண்டுமென்றால் அந்த காயமும் அதை உண்டாக்கிய காதலும் என்ன வலுவும், வலியும் நிறைந்ததாக இருக்க வேண்டும்! அந்த காட்சியில் ராஜாவின் பின்னணி இசை அத்தனை அவலமும், தன்னிரக்கமும் கூட்டி மறக்க முடியாத நிகழ்வாக மாற்றி விடுகிறது.


என்ன ஓர் உண்மை! வெளிப்பாடுகளில் அற்புதமான நேர்மை!

கொத்தாளத் தேவர், நல்லம நாயக்கர், கொண்ட ராசு, கோட்டைச் சாமி - என ஒவ்வொரு பாத்திரப் படைப்பும், எடுத்துக் கொண்ட கதைக்கான நேர்மையின் உச்சம். இதில் கொத்தாளத் தேவர், நல்லம நாயக்கர் இவ்விருவரிடையே உள்ள போட்டியை - நல்லம நாயக்கரின் வார்த்தைகளிலோ, அவரது ஆட்களின் வசனமாகவோ, கமல் நிரூபிக்கவில்லை. விருமாண்டி - கொத்தாளன் இருவரின் கோணங்களில் சொல்லப்படும் கதையிலும் அதுதான் நிலை. கத்தி மேல் நடப்பது தான் இது! தென் தமிழ் நாட்டில் முக்கிய சாதிய அமைப்பாக விளங்கும் முக்குலதோரியிடையே ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட கதைஅமைப்பு, கமலின் திரைக்கதை அமைப்புக்கு ஒரு சான்றே.

கொத்தாளன் மற்றும் விருமாண்டியின் பாத்திரங்களின் உளவியல் கூறுகளை, இத்திரைக்கதையின் மூலமாகவும், உரையாடல்கள் மூலமாகவும் ஆய்ந்து யாராவது எழுதினால், நல்ல திரைகதை மற்றும் பாத்திர படைப்புகளுக்கு பழகுவோர்க்கு உதவியாக இருக்கும்.

கொத்தாளனின் பாத்திர வார்ப்பு - தமிழ் திரைப்படங்களில் இல்லாத ஒன்று; இனியும் வரும் என்று தோன்றாத ஒன்று. மூக்குத்துவார முடி திருத்தி, அக்குள் மயிர் வழித்து, எப்போதும் நீறணிந்து, சுத்தமான உடைகளில் - வஞ்சமும், வெறியும் வழியும் வார்த்தைகள்! என்ன ஒரு நடிப்புத் திறன், உயரிய நேர்த்தி!


இதற்கிடையே, விருமாண்டியின் (கொரிய திரைப்பட விழாவில்  "ஆசிய சிறந்த திரைப்பட விருது' வழங்குகையில் குறிப்பிட்டது போல்) சிறப்புகளில் மிக முக்கியமானதொன்றாக நான் கருதுவது - பேச்சியம்மா, பேய்க்காமன் முதலிய நாட்டார் காவல் தெய்வங்களின் பின்னணியும், பூசைகளும், நம்பிக்கைகளும், பாடல்களும் படத்தில் பயன்படுத்தியிருக்கும் விதம் விருமாண்டி காலம் கடந்த நிற்கும் வாய்ப்பை உருவாக்குகிறது.

பாடல்கள், பின்னணி இசை, தள அமைப்பு, படப்பதிவு - போன்றவற்றின் ஆதிக்கம் தெரியா வண்ணம் கதையும், பாத்திரங்களும் இருந்தும் ராஜாவின் அற்புத பின்னணி இசை - சிறைக்கூட காட்சிகளில் அபாரம்.

கமல் என்ற அரிய கலைஞனிலும், அரியதாகவே கைகூடும் வெளிப்பாட்டு நேர்மை 'விருமாண்டி'யை ஓர் உன்னத காவியமாக்குகிறது.

2 comments:

எம்.கே.குமார் said...

உண்மை. ஆழமான காட்சிச் சித்தரிப்புகளை உருவாக்கும் படம். பகிர்வுக்கு நன்றி.

Unknown said...

விருமாண்புக்கு நியாயம் கிடைச்சது...ஆனால் எத்தனையோ அன்னலட்சுமி மரித்து போனார்கள்....

Pandit Venkatesh Kumar and Raag Hameer