Sunday, August 29, 2010

நண்பனின் கடிதங்கள்

கடிதம் - 2

உத்தமபாளையம்
17 /08 /89

பேரன்புள்ள நண்பா,

நலம், நலமறிய ஆவல்.

மிக்க அவசரத்தில் வந்ததால் உன்னிடம் சொல்லிக் கொள்ள முடியவில்லை. உன்னை பலதடவை இவ்வாறே வருத்த நேர்ந்ததற்கு மிகவும் வருந்துகிறேன்.

நான் இங்கு திங்கட் கிழமை காலை வந்தேன். மிகவும் தட்பமான சூழ்நிலை. நம் மனப் போக்கையும் விஞ்சும் வண்ணம் வினாடிக்கு விநாடி மனதை மாற்றி, தூறலாய் புன்னகைத்தும், மழையாய் காமம் காட்டியும் காதல் செய்யும் பூமிக்கும் வானத்திற்கும் நடுவே, கள்ளங்கபடமற்ற மக்களுடனும், கால்நடைகளுடனும், கால்வாயுடனும்.என் சொந்த தேசத்தில் ஒரு விருந்தினனாய், ஒரு பூ மௌன அமைதியுடனும், சுகத்துடனும் காலத்தை களித்து கழித்துக் கொண்டிருக்கிறேன்.

இன்று மதியத்தில் அருகிலிருந்த சுருளி அருவிக்குச் சென்றிருந்தோம். அதன் பெருமையை என்னென்று சொல்ல. மென்மையான தூறலின் போது அருவியில் குளிப்பதென்பது தேவ சுகம் நண்பா! அந்த நீரின் வேகத்தை எதிர்த்து பலம் காத்தும் போதும், தோற்றுத் துவண்டு வெளிவரும் போதும், வந்த பின் அருகில் மென்மையாய் விழுந்து கொண்டிருக்கும் சின்ன வீழ்ச்சியின் மௌனத் தடவலில் மயங்கி நிற்பதும்...

என் மனத் தேவைகளை உடம்பு தீர்த்துக் கொண்டு கர்வப்படுகிறதே! இவையனைத்தும் என் சொந்த தேசத்து சொர்க்கங்கள் எனத் தெரிய வரும்போது... சரவணா! நான் மிக்க தலைக்கனம் பிடித்தவனோ? இருக்கலாம் நண்பா! எனினும் என் சோகங்களை பகிர்ந்து கொண்ட நீ என் சுகங்களையும் சுகிக்க வேண்டாவா?

நல்லது நண்பா! தற்போது உன் கல்வி, கவிதை, கலை, காதல், கனவுகள் ஆகியனவெல்லாம் எப்படி இருக்கின்றன? உனது கவிதைத் தொகுப்புக்கு நிச்சயமாக ஒரு நல்ல முன்னுரையை, கூடிய விரைவில் எழுதி அனுப்புகிறேன். தம்பி கார்த்தி எப்படி படிக்கிறான்? அப்பா, அம்மா எப்படி இருக்கிறார்கள்? நண்பர் ஹரி எப்படி இருக்கிறார்? இவர்கள் அனைவருக்கும் என் அன்பையும் நல விசாரிப்பையும் தெரிவி. மற்றபடி உனது மற்றும் நமது நண்பர்கள் எப்படி இருக்கிறார்கள்? அனைவருக்கும் என் அன்பைத் தெரிவி.

'மெர்க்குரிப் பூக்கள்' படித்தேன். பாலகுமாரன் தன்னை ஒரு பெண் வயப்பட்ட கபடதாரி என்பதை நிரூபித்துவிட்டான். நேரில் பேசலாம். முழுக்க முழுக்க நமக்கு ஒத்து வராத பாத்திரப் படைப்புகள் . நேரில் பேசலாம் . இனிமேல் யாராவது (எவளாவது) பாலகுமாரனைப் பற்றி பெருமையாகப் பேசினால் சும்மா விடாதே .

வேறு விசேஷமில்லை .

அன்புடன்,
ரமேஷ் சண்முகம்

No comments:

Jing'an Temple, Shanghai

And oh, the Jing'an Temple! As per the piece of history printed in their ticket, the shrine was first built in 247 AD in the Wu Kin...