Sunday, February 7, 2010

உள்ளோடும் நதி - 2

பல நாடுகளுக்கு சென்ற என் அனுபவங்களில், நதிகள் விரையும் பெருவெளிகளையும் பள்ளத்தாக்குகளையும் கண்டிருக்கிறேன். மானுடத்தை வாழ்விக்கும் நீராகவும், போக்குவரவு நடைபெறும் ஊடகமாகவும் நதிகளின் தேவை நின்றுவிடுவதின் எல்லை, மனிதன் வகுத்தது.

நதிகள், இயற்கையையும் இவ்வுலகையும், அண்டசராசரங்கள் தோன்றியநாள் முதல் இணைக்கும் தொப்புள்கொடிகளாய், தங்கள் கரைகளின் கருவெளிச் சூழலில் கோடானுகோடி உயிர்களையும், உன்னதமான நாகரிகங்களையும் படைத்து மனிதத்தின் ஆன்மீக தத்துவ தேடல்களின் விதைநிலமாக ஊற்றுக்கண்ணாக விளங்கும் தாயென இங்கு போற்றப்படுவது போல் வேறெங்கும் காணவில்லை.


மேற்கை போலல்லாமல் எனது நாட்டில் நதிகளுக்கும் மனிதத்துக்குமான உறவு, தாய்க்கும் சேய்களுக்கும் ஆன உறவென்றோ, தலைவன்-வழிபடுனர் என்றோ அல்லது இறைமை-பக்தன் என்றோ பாகுபடுத்த இயலாமல் ஒன்றுடன் ஒன்று முயங்கி, பல்வேறு வடிவங்களில் இயைந்து கிடக்கிறது. ஏனெனில், உயிர் தோன்றுவதிலிருந்து எரிந்து அடங்குவது வரை நதியோடு இணைந்தே வாழ்வுமுறை இயங்குகிறது.


மிக அழகிய ஒரு விஷுக் காலத்தில், ஒரு முறை நான் ஜகத்குரு ஆதிசங்கரர் அவதரித்த கேரளாவிலுள்ள காலடி என்றொரு சிற்றூருக்கு சென்றிருந்தேன். சென்ற களைப்பு தீர அங்காமலி என்னும் ஓரழகிய நகரில் இரவு தங்கி விட்டு, காலை இன்னும் கொஞ்சம் பயணக் களைப்பு மிச்சமிருக்க, சங்கரரின் கோவிலை அடைந்தேன்.

அது ஓரினிய புலர்காலைப் பொழுது. மிக மெல்லிய குளிர்ந்த தென்றல் வருடிச்செல்லும் அப்பொழுதில், பெரியாற்றின் கரையை அடைந்தேன். வேத மந்திரங்கள் எங்கோ தொலைவில் ஓதப்பட, இன்னும் விடியா அந்த குளிரில் என் முன் ஓசையில்லாமல் நகர்ந்துகொண்டிருந்த ஆனால் உறைந்து கிடப்பதுபோல் தோன்றின அந்நதியின் அழகும் அமைதியும் பிரம்மாண்டமும் என்னை உறைய வைத்தது.


தாய் தன் நெடுநாள் பிரிந்த மகன் வந்ததும் மார்போடு அணைத்து தழுவக் காத்திருப்பது போல் நதி ஆழம் அதிகமற்று அகண்ட பெருக்காய் காத்துக் கிடந்தது. கணிக்க முடியாததோர் கணத்தில் இவ்வுலகுடனான என் பந்தங்கள் அனைத்தும் அறுந்து விழுந்தன நானறியாமலே. என் கல்வி, என் கற்பிதம், என் செல்வம், என் குறைகள், என் நிறைகள்... ஒரு மகன், ஒரு கணவன், ஒரு தந்தை என என் உறவுகள் என் கண்முன் இல்லாமலானது. எதுவுமற்று நான் நின்றேன். என் திரைகள் விலகி, முகமூடி கழன்று நானும் நதியும் மட்டும் அங்கிருந்தோம்.


என்ன மனிதம் நமது, என்ன இருப்பு எமது!


வானம் மிக மெதுவாக நிறம் மாறி கொண்டிருக்க, நதியின் முன் பரிபூரண நிர்மலமான நிர்வாணம் நிறைக்க நின்றது போல் நின்றேன். கரையில் நான் மட்டும் இருந்தேன், அல்லது அவ்வாறு உணர்ந்தேன். என்னை அனைத்து புலன்களிலிருந்தும் விடுபட செய்த, என்னையும் அந்நதியையும் படைத்தோனை, எல்லாம் வல்லவனை இன்றும் தொழுகிறேன்.

நதியின் மெல்லிய மேற்பரப்பு பொன்னிறமாக மாறுவதை, குவிந்த கரங்களுடனும் தொழுத மனதுடனும் எத்துணை பொழுது பார்த்தவாறு நின்றிருந்தேன்... அவள் தன் மேனிமூடிய சருகன்ன துகிலை சிற்சிறு பொன்னிற இழைகளால் அலங்கரித்து கொண்டிருந்தாள். அலைகளின் மேல் அலைகளை என் பாதம் படச் செயதவாரிருந்தாள்.

அலைப்பரப்பின் மேல்போலல்லாது உட்புறம் வெதுவெதுப்பாக இருப்பதை உள்ளிறங்கியதும் உணர்ந்தேன். ஆயிரம் ஆச்சர்யங்களை தன்னுள் ஒளித்துக் கொண்டு மகன் வந்ததும் பல்லாயிரம் கைகளால் வாரியணைத்து அன்பும் வெம்மையும் சேர்ந்து விம்மும் மார்போடு இறுக்கி, விளையாட்டுக் காட்டும் என் தாய்.

என் காலடியில் அசையாக் குறுமணல். இடையளவு நிதானமாக ஓடுகின்ற நதிக்குள் கால்கள் மடக்கி சப்பணமிட்டு அமர்ந்ததும், நீர் என் நெஞ்சை உயர்ந்து நாசியின் கீழ் நகர்ந்தது. என் இறைவனை தொழவெழுந்த எண்ணம் பொருளற்றது என உடனே உணர்ந்தேன்.

சிந்தை ஒரு கணம் எதுவுமற்று நிர்ச்சலனமாகி நிலைத்தது; சூன்யம், எண்ணமெதுவுமற்ற சூன்யப் பரவெளி.

எத்தனை கோடிக் காலம் அப்படி அமர்ந்திருந்தேன். எத்தனையோ கோடானு கோடிக்காலம் புவி நனைத்து, உயிர் நனைத்து அழியா இளமையுடனும் பேராற்றலுடனும் ஓடிக்கொண்டிருப்பவள் என்னுள்ளும் தன் அன்பின், காதலின், கருணையின் பல்லாயிரம் வடிவங்கள் சூழ அமிழ்த்தி, எனக்கும் அழியா வல்லமையும் பொலிவும் தந்தாள். அவளுடன் ஒன்றென நானற்று ஒன்றாகி. அவ்வொரு இணைவை கண் திறந்து கலைக்க துணிவற்று மனமற்று எத்தனையோ கோடிக்காலம் அமர்ந்திருந்தேன். எங்கே கண் விழித்தால் அவளிலிருந்து விலகுவதாய், அவளின் இணையற்ற நேசத்தை பொருட்படுத்தாததாய், உலகை விரும்பிப் பிரிவதாய் எண்ணி விடுவாளோ, எண்ணி மருகி விடுவாளோ என்று அஞ்சிக் அப்படியே கிடந்தேன்...


காலமும் நதியும் என்னிலும் என்னைச் சுற்றியும் மிதந்தன.


என்னைச் சுற்றி அவள் பின்னியிருந்த மோனத்தவத்திலிருந்து விழித்தேன்; மெல்லக் கரையேறினேன் அவளுடலின் சூட்டை என்னில் உணர்ந்தவாறே. மேலேழுந்துவிட்ட ஆதவனின் கதிரொளியில் நதியின் அடங்காப் பேரழகும் விரிந்த வடிவமும் துலங்கின.

தோன்றிய நாள்முதல் படைத்தும் காத்தும் அணைத்துக் கிடந்தவளுக்கு, எதுவுமே விட்டுச்செல்லாமல் மறையப் போகும் ஒரு மானிட அணுவினும் சிறியேனையும், அன்பின்பால் பொருட்டாய் சேர்த்தாய் என நன்றியுடன், என் குறைகளுடன் ஏற்று, அமைதி சூழச் செய்து, விலகும்போது ஒரு வார்த்தையேனும் புகலாமல், செல்ல அனுமதித்தாயே என நெகிழ்வுடன் கரையேறினேன்.


அவள் மெளனமாக பார்த்து நிற்க, நான் கரை விலகினேன், வேதங்கள் தொலைவில் தெளிவாக கேட்க.
 
(A translation of my previous post 'The River Within')

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer