Monday, August 19, 2019

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை - சுழல்

​சுழல் 


சிறுவிதை
கடித்தெறிந்த கனித்தோல்
கிளையுதிர்ந்த இலை
கனியா பிஞ்சும் பூவும் ​​
அடித்தளம் சுற்றிலும்
உயிரோட்டம்
நில்லாது நடந்தேறும்
நாடகம்
உணவும் உணவின் உணவும்
உண்ணவும் உண்ணப்படவும்
அத்தனைக் களி
எதுவுமில்லை தன்னிரக்கம்
எதிலுமில்லை முயற்றின்மை
பேருரு தாழ்ந்து தாள் சேரும்
எதுவும் ஆவதுமில்லை வீண்

பதாகை மின்னிதழில் வெளிவந்திருக்கும் கவிதை - காத்திருத்தல்

காத்திருத்தல் 

சுருக்கங்கள் நிறைந்த கரங்கள்
வித்வம் நிறைந்தவை
புகைத்துக் கொண்டிருக்கின்றன
காலை நடைபயிலும் கால்கள்
சந்தைவந்த சிறார்
முகர்ந்தலையும் குட்டிநாய்கள்​​
நடுவே இரு நாற்காலிகளில்
ஒன்றில் அக்கரங்களின் தலைவன்
இன்னொன்றில்
நசுங்கிய ஆயினும் அழகிய குவளை
அருகில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கிறது
வாழ்வைப்போல் அதிர்வுதளர்ந்த
தந்திகள் துவளினும்
எதை வேண்டுமென்றாலும்
இசைக்கக் காத்திருக்கும்
கிதார்

Pandit Venkatesh Kumar and Raag Hameer