Monday, July 11, 2016

சில்கோவ்ஸ்கியின் தேற்றம் : கார்ல் இயாக்னெம்மா அத்தியாயம்– 4

அத்தியாயம்– 4

மரியா தன் அம்மாவின் வாத நோயைப் பற்றியும், தனது மணிக்கட்டுகளில் அடிக்கடி ஏற்படும் வலியைப் பற்றியும், அவள் அக்காவின் மகனுக்கு தான் தைத்துப் பரிசளித்த பூசணிநிற ஸ்வெட்டரைப் பற்றியும் மூச்சு விடாமல் பேசினாள். மெது மெதுவே அவள் குரல் ஒரு செய்வதறியாத, திக்கற்றுத் தவிக்கும் தொனியை அடைந்தது. இது வரை செய்திராத ஒரு செயலைச் செய்யப்போவதான குறிப்பு தோன்றியது. பேச்சு வளர்ந்தது.ரேகனைப் பற்றி, சார்லி பார்க்கரைப் பற்றி, உடலுறவைப் பற்றி…

ஹெண்டர்சனால் கேட்க சகித்துக் கொள்ள முடியாத ஆனால் கிளர்ச்சியூட்டிய சோக்லோஸுடனான தனது உறவைப் பற்றியும் விவரித்தாள். சமீபமாக வேறு ஒரு பிரச்சனை. முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டது போல் ஆரம்பித்துவிட்டு முடிக்கமுடியாத தனது ஆய்வுக்கட்டுரை. “யாருக்குத் தெரியும்? இதுதான் சரியான நேரமோ என்னவோ, போலந்துக்கு திரும்பிப் போய் ‘மாலா வார்ஸாவா’ ரெஸ்டாரண்ட்டை ஆரம்பிப்பதற்கு?” மரியா பெருமூச்செறிந்தாள்.

“வேண்டாம், கொஞ்சம் பொறு. எனக்கு ஓர் ஆறு வாரம் – ஒரு மாதம் தா,” என்றார் ஹெண்டர்சன்.

மரியா மேற்கொண்டிருந்த ஆய்வு அவரது சொந்த ஆய்விலிருந்து அவ்வளவு ஒன்றும் விலகியதல்ல. ஹெண்டர்சன் நூலகத்திற்கு சென்று தேடத்தொடங்கிய ஒரு வாரத்திற்குள்ளாகவே அவருக்கு பிடி கிடைத்துவிட்டது. அடுத்த ஞாயிறன்று, மரத்திலிருந்து பழங்கள் கனிந்து உதிர்வது போல் கணித சமன்பாடுகள் எழுத எழுத அவரைச் சுற்றிலும் உதிர்ந்து இறைந்து கிடந்தன. திங்களன்று காலை களைப்பாக செய்தியைச் சொல்ல மரியாவை அழைத்த ஹெண்டர்சன், மறுமுனையில் சோக்லோசின் குரலைக் கேட்டதும், கண்களை மூடிக்கொண்டு போனை கீழே வைத்தார்.

எப்போதாவது அப்படி நடப்பதுண்டு; பிரகாசமான வால் நட்சத்திரம் போல் ஒளிரும் ஓர் ஆய்வுப்படிப்பு மாணவன் மேற்கொண்டு ஒளிராமல் அப்படியே எரிந்து மறைந்து விடுவதுண்டு. மரியாவின் டாக்டர் பட்டப்படிப்புக்கான இறுதி ஆய்வறிக்கையை அவள் விவரிக்கக் கேட்ட குழு ஏழு நிமிடங்களில் – ஏழே நிமிடங்களில் – அவள் தேறி விட்டாள் என்று அறிவித்து விட்டது. இனி அவள் Dr. மரியா சில்கோவ்ஸ்கி. அன்றிலிருந்து இது வரை அவள் வேறொரு கட்டுரையையும் சமர்ப்பித்ததில்லை.

“இன்றிரவு உன்னை சந்திக்க வேண்டுமென்று நான் சொன்னதற்கான கடைசிக் காரணம்,” பார் மேடையில் காலிக் கோப்பையை வைத்த சோக்லோஸ் தொடர்ந்தார், “எங்கள் புது வீட்டிற்கு இரவுணவிற்கு உன்னை அழைக்க மரியாவும் நானும் விரும்புகிறோம்.”

இரவுணவின் மேசையில் சோக்லோஸுக்கும் மரியாவுக்கு நடுவிலமர்ந்திருப்பதை நினைக்கவே ஹெண்டர்சனுக்கு கசப்பாக இருந்தது. சோக்லோஸை ஒரு நீண்ட பார்வை பார்த்துவிட்டு இறுதியாக, “டின்னர்,” என்றார்.

“பல புது கலப்பு உணவுகளை அவள் செய்து பார்த்துக் கொண்டிருக்கிறாள் – போலிஷ் – பிரென்ச், போலிஷ் – காண்டோனீஸ் இப்படி,” சோக்லோஸ் தோள்களைக் குலுக்கிக் கொண்டார்.

களைப்பும், குழப்பமுமாக தள்ளாடி எழுந்த ஹெண்டர்சன், “பிரென்சும் வேண்டாம், காண்டோனீஸும் வேண்டாம்; அவள் வெறும் போலிஷ் உணவுகளை சமைத்தால் தான் நான் வருவேன் என்று சொல்லி வை,” என்றார்.

“சரி, பிகோஸ் சமைக்கச் சொல்கிறேன்,” சோக்லோஸின் தெளிவான பார்வையில் ஓர் குறுகுறுப்பு நிறைந்த எதிர்பார்ப்பு கலந்திருப்பது போல் ஹெண்டர்சனுக்கு தோன்றியது. “அது உனக்கு பிடித்த உணவு என்று நினைக்கிறேன், சரிதானே?”

“அவையெல்லாமே எனக்குப் பிடித்தவைதான்,” என்றார் ஹெண்டர்சன்.

அடுத்த நாளிரவு, பாஸ்டனில் தனது வீட்டின் பழைய சோபாவில் சாய்ந்தபடியே ஹெண்டர்சன் சில்கோவ்ஸ்கியின் தேற்றத்தை எழுதியது தான்தான் என்று வெளியில் தெரிந்தால் ஏற்படக்கூடிய பயங்கரமான ஆனால் சாகசமான நிகழ்வுகளை மனதில் திரையிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார். என்னவாகும்? ஒரு சிறிய அவமானகரமான ஊழலாக பார்க்கப்பெறும்; அடுத்தக் கருத்தரங்கில் காப்பி அறைக்குள் அவர் நுழைந்தால் சட்டென்று ஓர் அமைதி கவிழும். நேர்மாறாக அவரது மதிப்பு உயரவும் வாய்ப்பிருக்கிறது, என ஹெண்டர்சன் நினைத்துக் கொண்டார். ஆனால் பதவி நீட்டிப்புக்கான சீராய்வு குழுக்கள் அவ்வளவு இரக்கமும் நகைச்சுவை உணர்ச்சியும் நிறைந்தவையல்ல.

ஆனாலும் என்னவாகிவிடப் போகிறது? அவரது பணி நீட்டிப்புக்கான ஆய்வு கடுமையான கண்டனங்களை பதிவு செய்யலாம்; அதிக பட்சம் அவரை வேறு வேலை தேடிக்கொள்ளச் சொல்லலாம். உண்மையைச் சொல்லப்போனால், ஹெண்டர்சன் கல்வித்துறையை வெறுத்தார். குரோதம் நிறைந்த துறை மீட்டிங்குகளை வெறுத்தார். இளநிலை பட்டப்படிப்பு முடித்த வெறுமே சுய ஈர்ப்பு நிறைந்த மாணவர்களுடனான, ஸ்பானிஷ் இலக்கியம் படிப்பதா அல்லது கணிதமா என்பது போன்ற முடிவற்ற உதவாத உரையாடல்களை வெறுத்தார். இவர்களை பார்க்கும் போது ஹெண்டர்சனுக்கு, அவரது பட்டப்படிப்புக் காலங்கள் நினைவுக்கு வரும்; ஒரு நாளைக்கு பதினோரு மணி நேரம் புத்தகங்களில் மூழ்கியிருந்த நாட்கள்; உறைந்துபோன உணவை சூடு செய்வதற்காக மட்டும் எழுந்த நாட்கள்; பாக்மன் நூலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளின் வழியே பனிவிழுவதை பார்க்க மட்டும் நிமிர்ந்த நாட்கள்; தனிமையேயானாலும் வலியற்ற ஜீவிதம்.

ரஷ்ய கணிதவியலாளர்கள் அவரைப் புரிந்து கொள்வார்கள்; காதலுக்காக தேற்றங்கள் இயற்றப்படுவதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். உயரிய, அழிந்துபோன உன்னதங்களை ரஷ்யர்கள் போற்றுவதுண்டு – ஆனால் ஜெர்மானியர்கள், ஜப்பானியர்கள், அமெரிக்கர்கள் – யாருக்கு தெரியும் அவர்கள் என்ன நினைப்பார்கள் என்று…

ஒரு சூனியவெளிக்குள் தனது மனதை ஹெண்டர்சன் இருத்திக் கொண்டார். அவரது வீட்டுக்கு வெளியே, செல்பேசியில் யாரோ ஒருவன் பேசிக்கொண்டிருப்பது அரைகுறையாக அவர் காதில் விழுந்தது.’எண்ணூறுக்கு படியாது, தொள்ளாயிரத்து ஐம்பது என்றால் பேசலாம். அதுதான் கடைசி.’ எவ்வளவு எளிமையான வாழ்க்கை என எண்ணிக் கொண்டார் ஹெண்டர்சன். அவனுக்கு சில்கோவ்ஸ்கியின் தேற்றம் பற்றி ஒன்றும் தெரியாது.

சமையலறைக்குள் நுழைந்த ஹெண்டர்சன் ஒரு கோப்பை பாலை பாத்திரத்தில் ஊற்றி சுடவைத்தார். பால் சூடாகும் வாசம் வயிற்றை புரட்டவே, பாலை அப்படியே சின்க்கில் கவிழ்த்துவிட்டு, பாத்திர காபினெட்டுக்குள் குனிந்து தேடினார். எப்போதோ குடித்துவிட்டு மீதம் வைத்து, பழங்காலச் சின்னம் போல் புழுதி படிந்து போயிருந்த வைல்ட் டர்க்கி மதுபுட்டி கிடைத்தது. காப்பி கோப்பையில் இரு விரற்கடையளவுக்கு ஊற்றிக்கொண்டு ஹாலுக்கு வந்தார். குவிந்து கிடந்த காஸெட்டுகளில் தேடி பெயின்மெனின் இயற்பியல் உரையை எடுத்து ஓடவிட்டுவிட்டு சோஃபாவில் சரிந்தார். அந்த இயற்பியல் மேதையின் குரல் அந்த சிறிய அபார்ட்மென்டை நிறைத்தது. எப்போதும் அவரை சாந்தப்படுத்தும் அந்தக் குரல், அந்த உரை இன்றென்னவோ அவரது சராசரித்தன்மையை சுட்டிக்காட்டுவது போல் தோன்றியது. ஆனாலும் ஹெண்டர்சன் உரையை நிறுத்தவில்லை. பதிலாக எழுந்துபோய் சத்தத்தை உரக்க வைத்து விட்டு வந்தார் – மிக உரக்க, அக்கம்பக்கத்தோருக்குக் கேட்கும்படி.

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer