Monday, June 27, 2016

சில்கோவ்ஸ்கியின் தேற்றம் : கார்ல் இயாக்னெம்மா

அத்தியாயம்– 2

அன்று  மாலை, தேவைக்கும் அதிகமாகவே குளிரூட்டப்பட்ட அந்த மேரியட் ஹோட்டலின் அறையில், அன்றைய முன்பகலின் கொடிய ஆனால் இனிய  வெற்றியின் பரிசாக ஷாம்பெயினை அருந்திக் கொண்டே தன் பயணப்பையை ஹெண்டர்சன் அடுக்கிக் கொண்டிருந்த போது தொலைபேசி ஒலித்தது.

“ஹலோ ஜான், சிரமப்படுத்தி விடவில்லை என்று நினைக்கிறேன், நீ மகிழ்ச்சியாக இருப்பது தெரிகிறது!”, சோக்லோஸின் குரலில் ஓர் உற்சாக துள்ளல்.

ஷாம்பெயினின் நுரை புரைக்கேற, ஹெண்டர்சன் கமறலில் இருமினார். “இதோ பார் மிக்லோஸ், நீ ஆத்திரப்படுவதற்கு இதில் ஒன்றுமில்லை” என்றபடி பிளாஸ்டிக் கோப்பையை கீழே வைத்துக்கொண்டே திடீரென்று வேர்த்துவிட்ட உள்ளங்கையால் வாயை துடைத்துக் கொண்டார்.

“சேச்சே, அதெல்லாம் ஒன்றுமில்லை, சொல்லப் போனால், நான் நன்றிதான் சொல்ல வேண்டும் – அந்த குறையை நீ சுட்டிக் காட்டியதற்கு,”  சோக்லோஸ் தொடர்ந்தார். “டாக்ஸியில் விடுதிக்கு திரும்பிப் போகும் போது நீ சுட்டிக்காட்டிய குறையை களைவதற்கு ஒரு வழி தோன்றியது. ஓர் அசாதாரணமான ஆனால் எளிய தீர்வு. ஒரு புதிய ஆராய்ச்சியின் பாதையையே திறந்து விடலாம் என நினைக்கிறேன்”.

“நல்லது, மிக்க மகிழ்ச்சி”, ஹெண்டர்சன் தொலைபேசி வயரை இழுத்தவாறே குளியலறைக்குள் நுழைந்து ஷேவிங் பிளேடுகள், டூத் ப்ரஷ் போன்றவற்றை எடுத்து பயணப்பைக்குள் திணித்தார். “மன்னித்துக் கொள் சோக்லோஸ், இப்போது பேச எனக்கு நேரமில்லை. நான் விமான நிலையம் கிளம்பிக் கொண்டிருக்கிறேன்”.

“என்ன, நீ இன்னும் கொஞ்சம்…நாசுக்காக சொல்லியிருந்திருக்கலாம். பரவாயில்லை”.

சோக்லோஸின் குரலில் மதுவின் குழறல் இருந்ததாகப் பட்டது. அந்த எண்ணமே ஹெண்டர்சனுக்கு கலக்கத்தைக் கொடுத்தது. பையை மூடிவிட்டு அறையை நோட்டம் விட்டபடி, “சரி, நான் கிளம்புகிறேன் சோக்லோஸ். அடுத்த கருத்தரங்கில் பார்ப்போம். அல்லது, பாஸ்டனில்,” என்றார் சொக்லோஸ்,

ஹெண்டர்சன், இருவருக்கும் பாஸ்டனில்தான் வேலை, சோக்லோஸ் நகரின் பல்கலைக்கழகமொன்றிலும் ஹெண்டர்சன் புறநகரில் தொழில் நுட்பக் கல்லூரியிலும் பணிபுரிந்தார்கள் என்றாலும், ஹெண்டர்சன் கடந்த நான்கு வருடங்களாக சோக்லோஸை  சந்திப்பதை வெற்றிகரமாக தவிர்த்திருந்தார்.

“நாம் சந்திக்கலாம் என்று நினைத்தேன். ஒரு அரை மணி நேரம்? ஹோட்டல் பாரில்?”

“இந்த ஹோட்டலிலா இருக்கிறாய்?” ஹெண்டர்சன் தாளிட்ட தன் அறைக்கதவை பதற்றமாகப் பார்த்துக்கொண்டார் . “நான் இங்கு தங்கியிருப்பது உனக்கு எப்படித் தெரியும்?”

“கடவுளே, ஏன் இப்படி பேய்ப்படங்களில் வருபவனைப் போல் பயந்து நடுங்குகிறாய் ஜான்? வீதியின் முனையில் கம்போர்ட் விடுதியில் நான் தங்கி இருக்கிறேன்.  என் நினைவு சரியென்றால், உனக்கு பிடித்த மது ‘வைல்ட் டர்கி பர்போன்’ தானே, அதை நான் வாங்குகிறேன், அங்கு வா சந்திப்போம்”.

“முடியுமென்று தோன்றவில்லை, சோக்லோஸ். பழைய கதைகளை பேச எனக்கும் ஆசைதான், ஆனால் எட்டு முப்பது விமானத்தில் நான் கிளம்பியாக வேண்டும்”.

“ஒரு விஷயம் உன்னுடன் பேச வேண்டுமே”, சோக்லோசின் குரல் தளர்ச்சியும் சோகமுமாய் தொனித்தது. தவிர்க்க முடியாத ஆனால் ஒரு துரதிர்ஷ்டவசமான செய்தியை அறிவிப்பவனின் குரல் அது. “உண்மையில், மரியாவைப் பற்றி”.

மரியாவின் பெயரைக் கேட்டதும் ஹெண்டர்சனின் நெஞ்சில் தோன்றிய நடுக்கம் உடலெங்கும் பரவியது. எரியும் தணலில் வாட்டி சட்டென்று கடலளவு குளிர்நீரில் அமிழ்த்தியது போல் உணர்ந்தார். “அவளைப் பற்றி என்ன?”

சோக்லோஸ் ஆழமான, துயரம் பொதிந்த ஒரு பெருமூச்செறிந்தார். “நிறைய இருக்கிறது, போனில் வேண்டாமே”.

ஏக்கமும், அவநம்பிக்கையும் ஒருசேரக் கலந்த, அவருக்கு ஏற்கனவே பழகிய ஒரு வலி தாக்க ஹெண்டர்சன் படுக்கையில் சரிந்தார். கண்ணாடியில் தெரிந்த தனது உருவத்தை சுவாரசியமின்றி பார்த்துக் கொண்டார் – உடைந்த, வரண்ட தலைமயிர், தொங்கும் தாடைச்சதைகள், இறுக்கிப்பிடிக்கும் மேற்சட்டை, அவருக்கேகூட அருவருப்பூட்டும், அவ்வப்போது பதற்றத்துடன் வெளித்துருத்தும்  அவரது நாக்கு; பார்வையை மெல்ல திருப்பி கொண்டு சொன்னார், “சரி, முப்பது நிமிடங்கள் பொறு, என் விமான நேரத்தை மாற்றி விட்டு வருகிறேன்”.

“பிரமாதம், அதைச் செய் ஜான்.”

——-

மேரியட் ஹோட்டலின் வண்ணங்களை இழந்து கொண்டிருக்கும் முகப்பைக் கடந்து  செஸ் ஜியோர்ஜிஸ் ரெஸ்டாரன்டை நெருங்கிய ஹெண்டர்சன்  வாயிலில் சிறிது தயங்கினார். உணவு விடுதியின் புகை படிந்த கண்ணாடிக்கதவுகளூடாக உள்ளே வரிசையாக ஆட்கள் பாரில் அமர்ந்திருப்பதும், தொலைவில் சோக்லோஸை போன்றொரு உருவம், கீழுதட்டு தாடியுடனும், பளபளக்கும் டையுடனும் அமர்ந்திருப்பதும் தெரிந்தது. கதவின் பிடியில் கைவைத்த ஹெண்டர்சன் சட்டென்று விலகி கழிப்பறைக்கு விரைந்தார். பத்திருபது மாடிப்படிகள் ஏறிவந்ததைப் போல படபடக்கும் நெஞ்சுடன் கழிவறைக்குள் நின்று கண்ணை மூடிக்கொண்டார்.  நீண்ட பெருமூச்செறிந்தபடி நின்றிருந்தவரை பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஆள் கேள்விக்குறியுடன் பார்க்கத்துவங்க, பொத்தானை அழுத்தி நீரிறைத்துவிட்டு, வாஷ்பேஸினில் முகத்தில் அறைந்து கழுவிக் கொண்டு, செஸ் ஜியோர்ஜிஸை நோக்கி, சோக்லோஸை நோக்கி லாபியைக் கடந்து நடந்தார்.

லூயிஸ்வில் வழியாக புடாபெஸ்ட்டிலிருந்து வந்தவர் மிக்லோஸ் ஸோல்டன் சோக்லோஸ். முதலாமாண்டு பட்டப்படிப்பு மாணவர்களாக அவர்கள் மிச்சிகன் பொறியியல் கல்லூரியில் சந்தித்துக் கொண்ட போது, இருவரும் துடிப்பான, இளம் கணித ஆராய்ச்சியாளர்கள்; கார்ல் மார்க்ஸையும் ஐரிஷ் பியரையும் ஏற்காமல் புறந்தள்ளி விட்டு, கணிதம் கடவுளின் புதிர் விளையாட்டு – மிக விரிவான, மிக அழகான ஓர் விளையாட்டு, விடுகதைகள் போல் – என்பதை விரும்பி ஏற்றவர்கள். முதல் அரையாண்டில் ஏழடி ஆழ பனிப்பொழிவு   கல்லூரியை மூடிய போது, பாக்மன் நூலகத்தில் ஓக் மர மேசையின் எதிரும் புதிருமாக அமர்ந்தவாறு   சோக்லோசும் ஹெண்டர்சனும் மென்மேலும் கடினமான கணிதச் சமன்பாடுகளை, தேர்ந்த பியானிஸ்ட்கள் தங்கள் விரல்களுக்கான பயிற்சிப் பாடல்களை இசைப்பது போன்றலாகவத்துடன் விடுவித்துக் கொண்டிருந்தனர்.

அந்த அரையாண்டு முடிந்த போது இருவரும் கணிதப்பிரிவுக்கு நான்கு கல் தொலைவில், சோபை இழந்து கொண்டிருந்த ஒரு டச் கலோனியல் வீட்டின் மேற்பாதிக்கு குடிபுகுந்தனர். சோக்லோஸ் தனது விருப்பத்துக்குரிய கணித வல்லுநர் நினைவாக வீட்டிற்கு போயின்கெர் மேனோர் எனப் பெயரிட்டதும், ஆறு வெள்ளிக்கு வாங்கிய அஸ்தி ஸ்புமாண்டே மதுவை ஜன்னலின் நிலையில் ஓங்கி அறைந்து  உடைத்தவாறே உறைந்த டிசம்பர் குளிருக்குள் ஊளையிட்டு சிரித்ததும் அன்றைய நிகழ்வுகள்.

பின்னர் தான் ஹெண்டர்சன் மரியாவைச் சந்தித்தார். வடகிழக்கு போலந்தின் பியலிஸ்டாக் நகரைச் சார்ந்த மரியா சில்கோவ்ஸ்கி. அவளுக்கு கணிதம் பிடிக்கும்; ஆனால் குளியற்தொட்டியில் படுத்துக்கொண்டு அவள் தயாரிக்கும் கியால்பஸாவில் இஞ்சி கூடிவிட்டதா அல்லது கருமிளகு அதிகமா  என்று கவலைப்பட முடியுமேயன்றி கணிதத்தின் மேல் பெரிதான காதலொன்றும் கிடையாது. பின் ஏன் அவள் கணித பட்டப்படிப்பில் சேர்ந்தாள் என்று ஹெண்டர்சனுக்கு புரிந்ததில்லை, அதைப் பற்றி அவர் கவலைப்பட்டதும் கிடையாது. எதற்காக வந்திருந்தாலும் அவள் அங்கு தொடர்ந்து இருப்பதை அவர் விரும்பினார். ஹெண்டர்சன் நூலகத்திற்கு செல்வது குறைய தொடங்கியது. பதிலாக அவரது கட்டிலில் அவளுடன் பின்னிக் கிடப்பதிலும், சார்ல்ஸ் மின்கஸின் இசைக்கோப்புகளை கேட்பதிலும், அவளுடன் ஆவேசமான உறவில் திளைப்பதிலும், தன் பாட்டியிடம் கற்று அவள் சமைக்கும் போலிஷ் உணவுகளை ருசிபார்ப்பதிலும் நாட்கள் சென்றன. கலிஃபோர்னியா மாகாணத்தின் வடிவில் அவள் உடலில் ஒரு மச்சம் இருப்பதைக் கண்டுபிடிப்பதில் தொடங்கி, சமயத்தில் அடக்கமுடியாமல் அவள் சிரிப்பதை, அவளது நாகரிகமற்ற போலிஷ் உச்சரிப்பு அவளை முரட்டுத்தனமாகவும், அறிவிலியாகவும் காட்டிவிடுமோ என்ற அவளின் விதவிதமான  கவலைகள்  வரை அவர் மரியாவை அணுஅணுவாக அறிந்து கொள்ள ஆரம்பித்தார்.

மரியாவின் அவசர குணம் – அணிவதற்கு காலுறைகளை தேர்ந்தெடுப்பது போல் எவ்வித யோசனையுமின்றி சட்டென்று முக்கிய முடிவுகளை எடுத்து விடும் குணம் – ஹெண்டர்சனை எரிச்சலடையச் செய்தாலும்,  அவள் தன் மனதை மாற்றிக்கொள்ளும் வேகமும், மனமுவந்து தவறை ஒப்புக் கொள்ளும் தன்மையும் அவரை பொறாமை கொள்ளவும் செய்தது.  மாலைப்பொழுதுகளில் கபுஸ்டா, பிகோஸ், பியரோகி என்று தட்டுகள் நிறைய பெரும் அளவுகளில் மரியா சமைத்தாள். அப்போது, கணிதவியல் கட்டிடத்திலிருந்து நள்ளிரவுக்கு மேல் திரும்பும் சோக்லோஸ் அவளது போலிஷ் தயாரிப்புகளை ஒரு தட்டில் நிரப்பிக்கொண்டு, சால்வேஷன் ஆர்மியில் வாங்கிய பழைய சோஃபாவில் அமர்ந்துகொண்டு ஹோகன்’ஸ் ஹீரோஸ் தொடர்களின் மறு ஒளிபரப்புகளை பார்த்தபடி அவர்களுடன் இரவுகளை கழித்ததுண்டு. ஹெண்டர்சனும் சோக்லோஸும் கண்ட்ரோல் தியரியின் விடைகாணப்படாத பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என்று தங்குதடையற்ற உரத்த உற்சாகத்தோடு பேசிக்கொண்டிருக்கையில், மரியா அவள் துவங்கப்போகும் ‘மாலா வார்ஸாவா: லிட்டில் வார்சா – போலிஷ் வீட்டுச் சாப்பாடு’ என்ற ரெஸ்டாரெண்ட் பற்றி  விளையாட்டாய்ப் பேசிக் கொண்டிருப்பாள்.

போயின்கெர் மேனோரில் அவர்கள் வசித்த இரண்டாவது வருடம் முடிந்து மூன்றாம் வருடத்திய கோடை துவங்கிய போது ஹெண்டர்சன் ஒரு அடாப்டிவ்- கண்ட்ரோல் கருத்தரங்குக்காக நெவார்க் போக நேர்ந்தது. மரியா இல்லாத நான்கு நாட்கள். மிதமிஞ்சி குளுமைப்படுத்தப்பட்டிருந்த, கருத்தரங்கு அறையின் பின்பகுதியில் தனது வெற்று குறிப்பேட்டில் அவளது அக்கறையற்ற, நெளிகோடுகள் நிறைந்த கையொப்பத்தை வரைந்து வரைந்து பார்த்துக் கொண்டிருந்த ஹெண்டர்சன், ‘மரியா ஹெண்டர்சன்’ என்று எழுதிப் பார்த்தார். ஒரு விளக்க முடியாத கிளர்ச்சி. அடுத்த நாள், வெள்ளிக்கிழமை, கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஊர் திரும்ப பரபரப்புடன் முடிவெடுத்தார். அவர் இயல்புக்கு மாறான, உணர்ச்சிவசப்பட்ட ஒரு திடீர் முடிவு.

அந்த வியாழக்கிழமை மாலை விமான நிலையத்தில் ஹெண்டர்சன் விரைந்தபோது ஆய்லர் தனது கணித ஆராய்ச்சியொன்றில்  முடிவிலியின் மதிப்பு கிட்டத்தட்ட பூஜ்யம் என்று நிரூபித்த தருணம் போன்ற ஓர் அளவிட முடியாத உயரிய நன்றிப்பெருக்கும், பரவசமும் அவர் மனமெங்கும் நிறைந்திருந்தது.  அவரது காலணிகள் நிலையத்தின் டைல்ஸ் பாதிக்கப்பட்ட தரையில் எழுப்பிய சத்தம் கூட அவர் கண்களில் காரணமின்றி நீரை வரவழைத்தது.  வீட்டுக்குள் நுழைந்து சாவியை கதவில் பொருத்தித் திருகும்போது, ஏதோ வழக்கமில்லாத சப்தம் கேட்டது போலிருந்தது. தெரிந்த குரல் ஆனால் கேட்டிராத மாறுபாடு. மனதிலிருந்து அதை விலக்கிவிட்டு, நடுங்கும் கைகளுடன் பூட்டைத் திறந்தார்.

ஹெண்டர்சனின் பை கீழும் விழுந்ததும் மரியா சமையலறை மேடையை விட்டுத் திரும்பிப் பார்த்ததும்  ஓரே  கொடுங்கணம். அவள் சமையலுக்கு அணியும் மேலங்கியைத் தவிர உள்ளே ஒன்றும் அணிந்திருக்கவில்லை. சோக்லோஸ் ஹாலின் தரையில், அருகே ஒரு தட்டில் கொலாப்கியும், நெஞ்சின் மீது அமெரிக்கன் மாத்தமாடிக்ஸ் சஞ்சிகையுமாக, கால்களில் செந்நிற உறைகளைத் தவிர வேறொன்றும் இல்லாத நிலையில் நிர்வாணமாக படுத்துக் கிடந்தார்.  ஹெண்டர்சன் அப்பிடியே பின்வாங்கி, கதவை இறுக சாத்திவிட்டு, செய்வதறியாமல் அங்கேயே ஒரு கணம் நின்றார். உள்ளே சோக்லோஸின் தட்டு பைன் மரத்தரையில் விழுந்து சிதறும் சத்தமும், ‘நில்லுங்கள்!’ என்னும் மரியாவின் இறைஞ்சலான, விகாரமான கதறலும் கேட்டது.  படிகளில் தடுமாறி  இறங்கிய ஹெண்டர்சன், இருண்ட முற்றத்தைக் கடந்து தனது அலுவலக அறையின் பாதுகாப்பை தேடி விரைந்து மறைந்தார்.

பின்னர் வந்த தொலைபேசி அழைப்பில் விக்கலும் அழுகையும் தோய்ந்த  போலிஷ் வார்தைகளூடாக மரியா திரும்பத் திரும்ப, ‘செல்லம், நான் ஒரு முட்டாள், என்னை மன்னித்து விடு’ என்று அரற்றிக் கொண்டேயிருந்தாள். ஆனால் அவரை திரும்ப வரச் சொல்லவேயில்லை. அன்று சகிக்க முடியாத ஒரு விஷயம் தெளிவாகி  விட்டது: அவள் அவரை நேசித்தாள் ஆனால் அவரை விட சோக்லோஸை அதிகம் நேசித்தாள். மரியாவின் அவசர குணம் அவளைத்  தன் தேர்வை மாற்றிக் கொள்ளச் செய்து விட்டது. ஏனென்று ஹெண்டர்சனுக்கு விளங்கவில்லை; எப்போதுமே பெண்களும் காதலும் சம்பந்தப்பட்ட  விஷயங்கள் அவருக்கு பிடிபட்டதில்லை.

மரியாவின் ப்ரா சோக்லோஸின் அறைக்குள் தரையில் சுருண்டு கிடப்பதைப் பார்க்கப் பிடிக்காமலும், அவள் உபயோகிக்கும் சானல் 5 சென்ட்டின் நறுமணம் – கிளாசிக் மணம், ஆனால் சோகம் கமழ்வது- குளியலறைக்குள் சோக்லோஸின் துண்டில் வீசுவதை பொறுத்துக் கொள்ள முடியாமலும் ஹெண்டர்சன் தனது அலுவலகத்திலேயே இரவுகளை கழித்தார்.  வீட்டின் குத்தகை டிசம்பர் மாதம் முடிந்த அன்று,  நள்ளிரவில் துணிகளையும், புத்தகங்களையும், குறிப்பேடுகளையும் எட்டு அட்டைப்பெட்டிகளில் அடைத்துக் கொண்டு வீட்டைக் காலி செய்து, ஒரு டாக்சி பிடித்து, கல்லூரிக்கு அருகே நதியைத் தாண்டி ஒரு ஸ்டூடியோ வீட்டுக்கு குடிபெயர்ந்து விட்டார். அடுத்த பதினெட்டு மாதங்களில் சோக்லோஸை கருத்தரங்குகளிலோ, ஆய்வறிக்கை விவாதக் கூட்டங்களிலோ சந்திக்க நேர்ந்தால் ஐஸ் ஹாக்கி பற்றியோ அல்லது கண்ட்ரோல் தியரியை பற்றியோ பேசிக்கொள்வார்களே அன்றி மரியாவின் பெயரைக்கூட இருவரும் உச்சரித்துக் கொண்டதில்லை.

ஆனால் இப்போதும் ஹெண்டர்சன் அவருக்கும் அவளுக்குமான உறவின் நினைவுச்சின்னமாக ஒரு பொருளை வைத்திருக்கிறார் – அலமாரியின் கீழ் ட்ராவில் உள்ளே பொதிந்து கிடைக்கும் அவளுடைய இரு இளஞ்சிவப்பு நிற காட்டன் உள்ளாடைகள். சில வெள்ளிக்கிழமை மதியங்களில், அலுவலகம் காலியாகிவிட்டதும், அலுவல் நேரம் முடிந்ததை அறிவிக்கும் மணிக்கூண்டு தனது மென்சோக இசையை வாசித்து முடித்ததும், தனது அறையின் கதவை அடைத்துக் கொண்டு அறைக்குள் நுழையும் சூரிய ஒளிக்கீற்றில் தனது சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி அவளது உள்ளாடைகளை ஹெண்டர்சன் தனது மோவாய்க்குக் கீழ் சுருட்டிவைத்துக் கொண்டு இருந்ததுமுண்டு.  சில வருடங்களுக்கு முன்னர்  யதேச்சையாக அவை துவைக்கப்பட்டு விட்டிருந்தாலும், இன்னமும் காய்ந்த இலைகளும் இஞ்சியும் கலந்த மரியாவின் அந்த கிழக்கு ஐரோப்பிய வாடையை அவற்றில் முகர முடிவதான ஓரு பிரமை. பார்க்கும் போதெல்லாம் அவர் மனதை பிழியும் மற்றொரு அடையாளமும் அந்த ஆடைகளில் இருந்தது. அவற்றின் பின்பக்க பட்டியில் நீல நிற மார்க்கர் பேனாவினால் அவள் பொறித்திருந்த பெயர் – ‘மரியா’. அதைப் பார்க்கும்போதெல்லாம் அவர் இதயத்தை யாரோ கசக்கிப் பிழிவது போலிருக்கும். அவ்வளவு அழகானதும் அவ்வளவு சோகமானதுமான ஒரு பெயரை பார்த்ததே இல்லை என்று நினைத்துக் கொள்வார்.

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer