Monday, October 26, 2015

நானும் நானும்

உணர்வின் வெளிப்பாடு 
இயலாமல் ஆகிவிட்டவன் 
சுயம் என்னவாகும் 

உணர்தல் இயலும் அதை 
உரைத்தல் இயலாதான  இது 
சுயமற்றவொரு சடப்பொருள் என 
சூழ்ந்து நின்று விவாதிப்பதை நான் 
விழியசைவின்றி கண்டும் 
உடல் நகர்வின்றி கேட்டும் 
கொண்டிருப்பதை 
எப்படி உணர்த்துவேன் 

நினைவுக் கோளங்களில் 
பளிச்சிடும் 
வெளிச்சத் துணுக்குகளில் 
உங்களைப் போல் நானும் 
அவ்வப்போது
விதிக்கப்பட்டவோர் ஒழுங்குடன் 
நடந்து கொள்வதாக 
நீங்கள் மகிழ்வது புரிகிறது 

எனினும் 
எனக்கும் உங்களுக்கும் 
என்ன வேறுபாடு 
என்னை உங்களைப் போலாக்கும்
தவிப்பெதற்கு

வலிகளில் எது பெரியது 
என்றுதான் 
நீங்களெல்லாம் பேசியும் 
நான் பேசாமலும் 
ஆராய்ந்து கொண்டிருக்கிறோம் 

விட்டுவிடுங்கள் 
நானும் நீயும் ஊடாடுவதின் மூலம் 
நாமும் அவர்களும் 
ஒன்றெனக் காட்ட முயலும் 
இந்தச் சமன்பாடு 
எனக்குப் பிடிக்கவில்லை

பதாகை மின் இதழ்

பதாகை மின் இதழில் வெளி வந்திருக்கும் கவிதை:

http://padhaakai.com/2015/10/25/i/

Sunday, October 18, 2015

மோஹ்சின் மக்மல்பஃப் இயக்கிய நிசப்தம்

குறிப்பிடத்தகுந்த இரானிய இயக்குனர்களுள் ஒருவர் மோஹ்சின் மக்மல்பஃப். விருதுகள் பல வென்ற அவரது படங்களுக்கு பல விமர்சனங்களும் குறிப்புகளும் கிடைக்கின்றன எனினும் முதல் முறை இந்த திகைக்கவைக்கும்படி எளிமையான ஆனால் குறியீடுகள் நிறைந்த The Silence என்ற படத்தை பார்த்தபோது என்னளவில் ஒரு சிறு  பதிவை எழுதும் உந்துதல்.

தாயுடன் வாழ்ந்து வரும் பார்வையற்ற சிறுவன் குர்ஷித் இசைக்கருவி செய்யும் ஒரு கூடத்தில், செய்து முடித்த கருவிகளில் சுதி கூட்டும் பணி செய்கிறான். கல்வியும் தந்தையுமற்ற ஆனால் வறுமை நிறைந்த வாழ்வில், அவன்  வருவாயை நம்பித்தான் அவன் தாய் இருக்கிறாள்.

தினமும் வீட்டிலிருந்து நடந்து ஒரு சந்தையை கடந்து, பேருந்து பயணித்து, உலோக வேலைக்கூடங்கள் தாண்டி அவன் பணியிடம் சேர்வதில் ஒரே ஒரு  சிக்கல்: ஓர் அழகிய பாடலோ, இசையோ, குரலோ கேட்டால் அவன் செய்வதறியாது அந்த இசையின் பின் சென்று விடுகிறான். நடக்கும் போது வழி தவறுவதும், பேருந்தில் இருந்து இறங்கி குரல்களை தொடர்ந்து எதிர் வழி சென்று விடுவதுமாக, பல நாள் பணிக்கு உரிய நேரத்தில் செல்ல முடிவதில்லை.

இசைக் கூட முதலாளி பல முறை கடிந்தும் வேலையை விட்டு நிறுத்தி விடுவதாக மிரட்டியும் கூட, அவனால் அவனறியாமல் செய்வதை மாற்றிக்கொள்ள முடிவதில்லை. மாறாக, சுதியும் லயமும் கூடிய எதுவும் அவனை ஈர்ப்பதை அவன் இயற்கையாகவும் இன்பமாகவும் கருதுகிறான்.

பல நாட்களில் வேலைக்குக் கிளம்பும்போது அவன் தாய் மேலும் பணம் முதலாளியிடம் பெற்று வரா விட்டால் வீட்டு வாடகை கட்ட முடியாமல் (ஏற்கனவே வீட்டுச் சொந்தக்காரன் அடிக்கடி வந்து வாடகை பாக்கி கேட்டு மிரட்டுகிறான்) வீதிக்குத்தான் வரவேண்டியிருக்கும் என்று எச்சரித்து அனுப்புவது அவனுக்கு நினைவில் இருக்கிறது, ஏதோவொரு இனிய குரலோ, இசையோ கேட்கும் வரை.

மிக அழகிய காட்சிகளில் அற்புதமான படப்பதிவுக் கோணங்கள்; மிகக் குறைந்த படப்பதிவு அசைவுகள்; யதார்த்தத்திற்கு  அருகில் இருக்கும் பின்னணி இசைக்கோர்வை என இப்படம் தரும் அனுபவம் உயரியது.

இரு காட்சிகளை குறிப்பிடலாம்:

- இசைக்கருவிக்கூடத்தில் குர்ஷித் கருவிகளுக்கு சுதி கூட்டும்போது அவன் தோழி நாதிரா அந்த இசையற்ற வெறும் சுதிக்கு மெதுவே மிக மெதுவே ஆடுவதும் அபிநயிப்பதும் - கவிதையான காட்சிப்படுத்தல்.

- நாதிராவும் குர்ஷித்தும் கானகத்தின் ஊடாக பொய்கை நோக்கி செல்லும் காட்சிகளில் இயற்கை ஒளியும் காட்சியின் கோணமும்  நடிகர்களின் உணர்ச்சிகளை பெருக்கும் ஒரு ஆடியாக பயன்படுத்தப் பட்டிருப்பது ஒரு சுகானுபவம்.

இது தவிர, படத்தின் பல நிலைகளிலும் குறியீடுகளை உணர முடிகிறது:

- வேலையிழந்த பிறகு தான் கேட்டு மயங்கிய ஏதோவொரு குரலை மீண்டும் கேட்க நகரத்  தெருக்களில் தேடித் திரிவது

- தோழி நாதிரா காட்டுக்குள் ஒருவன் தலையை மறைத்துக் கொள்ளாத பெண்களை  மிரட்டுவதாகக் கூறி குர்ஷித்தை வேறொரு வழியில் கூட்டிச் செல்கிறாள்; அந்த வழியில் அவன் இருக்கிறான், ஒரு அழகிய நரம்பு வாத்தியத்தை மீட்டிக் கொண்டு - அவனிலிருந்து சற்று விலகி அவன் இயந்திரத் துப்பாக்கி!

- உச்சக் காட்சியில் உலோக வேலைக்கூடத்தினூடே மெதுவே நடந்து கொண்டே வேலை செய்பவர்களை தன் தாளத்திற்கேற்ப பின் தொடருமாறு ஆணையிடுவது (மேலிருந்து பொழியும் ஓர் ஒளிக் கற்றையின் கீழ் தன் மேற்சட்டையை கழற்றியவாறு அவன் நிற்கையில் காட்சியும் இசையும் முடிகிறது!)

இந்தக் காட்சிகள் பல படிமங்களை எனக்களித்தது.

தீவிரவாதமும் இசையும்

தீவிரவாதமும் வறுமையும்.

மற்றும் தன்னை அறியாமலேயே ஓர் இசைக்கலைஞனாக உரமேறும் சிறுவனின் கால்களைத்  நகர விடாமல் தளைக்கும் அற்பக் கவலைகள்;

பெரும் வாழ்க்கைப் போராட்டங்களை சித்தரிப்பதான எந்தவொரு பசப்பும் இல்லாது ஆனால் இசை எப்படி எளிய மனங்களின் மிக எளிய மனங்களின் மிக எளிய, மிக இனிய இணைப்பு மொழியாக நிகழ்கிறது என காட்சிப்படுத்தும் இந்தத் திரைப்படம் நிச்சயம் வசியப்படுத்தும் ஓர் அனுபவம்.
Monday, October 12, 2015

பதாகை மின்னிதழ்

பதாகை மின்னிதழில் வெளியாகியிருக்கும் கவிதை - 'இருண்மை'  

http://padhaakai.com/2015/10/11/irunmai/
இருண்மை


கேட்கப்படாத கேள்வியொன்று
நெய் குறையும் தீபத்தின்
சுடர் போல்
வளி கொண்டு அணையலாம்
ஆயினும்
இன்னும் கேட்கப்படாத கேள்வியின்
ஆன்மா
அங்கேயேதான் உறைகிறது
பிறிதொருகணம்
எனவொன்றில்லை
இறவாத அக்கேள்வியுடன்
தனித்து
அச்சுடர் நோக்கி
அமர்ந்திருப்பதில்
இடரொன்றும் இல்லை
அறிந்தது கொண்டு
அறிந்ததை அளத்தல்
இல்லாதது கொண்டு
இருப்பதை உணர்தல் போலும்
சுடரின் நுனி
துடித்தல் போலன்றி
தவித்தல்
எனவுணர்வதிலும்
இல்லை இல்லை
எனுமொரு நிலை
இல்லை இல்லை
கரைதலென்பதென்ன
இல்லாமற் போவதா
இன்னொன்றாய் இருப்பதா
வெற்றிடம் முழுதும்
நிறைந்து பெருகி
எனவொன்றில்லாத
பிறிதொருகணத்தில்
வழிந்தோடி வெற்றிடமாகி
இன்மையும் இருப்பும்
கரைதலென்பதென்ன
இல்லாமற் போவதா
இன்னொன்றாய் இருப்பதா
சுடரணைந்த இருளுக்குள்
தனித்தவொரு கேள்வியும்
சற்றுமுன்
வேறொன்றாய்
இருந்த ஒளியும்

Thursday, October 8, 2015

இன்மையின் எண்

றந்து விட்ட நண்பனின்  
கைபேசி எண்ணை 
என்ன செய்வது 

அழைப்பே வராமல் 
ஆயிரம் எண்கள் 
இருப்பினும் 
அழித்தாக வேண்டிய கட்டாயம் 
வேறெந்த எண்ணுக்கும்
இல்லையே  

கைபேசித் திரையில் 
அடுக்கடுக்காக நகரும் 
பெயர்களில் 
நண்பனின் பெயரும் 
படமும் எண்ணும் 
துணுக்குறாமல் 
கடந்து செல்ல முடியவில்லை 

நானழைக்க முடியாமலும் 
அவனழைப்பை எதிர்நோக்க 
இயலாமலும் 
துயருறும் இந்நிலையை 
நீங்களெப்படி 
எதிர்கொள்வீர்கள் 

அழித்துத்தான் ஆகவேண்டுமா 
அந்த எண்ணை
 
இருந்தால்தானென்ன 
அடிக்கடி 
இருப்பின் திடுக்கிடல் 
தரும் வலியோடு 


Jing'an Temple, Shanghai

And oh, the Jing'an Temple! As per the piece of history printed in their ticket, the shrine was first built in 247 AD in the Wu Kin...