Sunday, October 16, 2011

இளையராஜாவின் 'வானம் எங்கே மேகம் எங்கே'

இளையராஜாவின் இசை ஓர் அரிய ஞானம் போல். எது எப்போது தேடி வர வேண்டுமோ அப்போது வரும். எப்போது வரும், வர வேண்டும் என்று யாரும் சொல்லி விட முடியாது.

இந்த ஞானம் எனக்கு மிகச் சமீபத்தில் தான் வாய்த்தது.

அந்த நிகழ்ச்சியை சொல்கிறேன்.

பிறந்ததிலிருந்து (நான் பிறந்ததை சொல்கிறேன்) ராஜாவின் இசையோடு தான் வாழ்ந்து வருகிறேன். அன்னக்கிளி தொடங்கி இப்போதைய 'குன்னத்தே கொன்னைக்கும்' வரை அவரின் பாடல்கள் இல்லாமல் என் காதல்கள், நட்புகள், துக்கங்கள், இழப்புகள், வரவுகள் எதுவும் இருந்ததில்லை. 

எத்தனையோ நல்ல பாடல்களை (உருப்படாத படங்களினால்) கேட்கத் தவறி, மிக பிற்பாடு கேட்டதுண்டு. இன்னும் கேட்காத சில பாடல்கள் இருக்கக் கூடும். நம்ப முடியாத பல சந்தர்ப்பங்களில் அவற்றை தேடி அடைந்திருக்கிறேன். 

ஆனால் 'நெஞ்சிலாடும் பூ ஒன்று' என்ற படத்தில் வரும் 'வானம் எங்கே மேகம் எங்கே' என்ற பாடலை இந்த மாதம் நான் கண்டடைந்த போது ஏற்பட்ட மகிழ்ச்சி கரை காண முடியாதது. 

கர்நாடக சங்கீத ராகங்களில் அமைக்கப்பட்ட ராஜாவின் பாடல்களை தேடி கொண்டிருந்த போது இந்த வைரம் சிக்கியது. அமிர்தவர்ஷிணி ராகத்தில் அமைக்கப்பட்டு, ஜானகி - ஜெயச்சந்திரன் பாடிய பாடல். முதல் முறை கேட்ட போது எப்படி இத்தனைக் காலம் இந்தப் பாடலை கேட்காமல் பிரிந்திருந்தோம் என்ற எண்ணம் ஏற்பட்டது. 

மீண்டும் மீண்டும் கேட்க, ராஜாவின் இசை ஓர் அரிய ஞானம் போல என்ற தெளிவு தோன்றியது.

அப்படி என்ன விசேஷம்?

நான் முன்பொரு பதிவில் கூறியிருந்தது போல், ராஜாவின் பல அருமையான வெற்றி பாடல்களில் ஒரு கிரியேடிவ் ரஷ் இருக்கும்; சில பாடல்களில் மட்டுமே மிக மென்மையான நிதானம் கூடும். 'வானம் எங்கே மேகம் எங்கே' அப்படியொரு பாடல்.

பல்லவி, இரு சரணங்கள் மற்றும் இரு இடையீடு இசைக்கோர்வைகள் அனைத்தும் மிக மென்மையாக, மிக நளினமாக மிதக்கின்றன. ஆரம்பம் பேஸ் கிடாரோடு ஆரம்பித்து ஒவ்வொரு இசைக்கருவியாக சேர்ந்து வேறொரு தளத்திற்கு போக ஆரம்பிக்கும் போது, குழுவின் கோரஸ் சேர்க்கிறது. 

கவுன்ட்டர் பாயிண்ட் உத்தியில் இசைக்கப்பட்டது என்று தோன்றும் வண்ணம் அந்த கோரசுடன் ஜானகி லீடில் சேர்ந்து பாட, பாடல் மெதுவே எடை குறைந்து லேசாகிறது. நம் மனமும்.

பல்லவி முடிந்து முதல் இடையீடு இசையில் ஆரம்பிக்கும் ஒரு பிரமாத வயலின் பிட் முடிந்ததும் மீண்டும் கோரஸ். இந்தப் பாடலின் அற்புதத் தன்மைக்கு முக்கிய காரணிகளில் ஒன்று கோரஸ். ராஜா கோரசை வயலின் ஆர்கெஸ்ட்ரா போன்றே உபயோகித்திருக்கிறார். 

அவரது பாடல்களில் வரும் விரிவான வயலின் ஆர்கெஸ்ட்ரா இசையை ஏறக்குறைய கோரசுக்கும் ஜானகிக்கும் பிரித்து பின்னணி-லீட் என்று அமைத்திருக்கிறார்.

முதல் இடையீடு இசை முடிந்து ஜெயச்சந்திரன் 'விண்மீன்கள் தாலாட்ட' என்று ஆரம்பிக்கும்முன்னால் வரும் குழல் இசை வழக்கம் போல் ஒரு பாரில் முடியாமல் இரண்டு பார் வரை நீள்கிறது. 

இரண்டாம் இடையீடு இசையில் காம்போ ஆர்கனை அடுத்து வரும் ஓர் வயலின் ஆர்கெஸ்ட்ரா மனதை தடவ, கோரஸ், அடுத்து ஜானகியின் ஹம்மிங் உருக்குகிறது. மிக மிக எளிமையான ரிதம். 

தவற விடவிருந்த இந்த வைரத்தை நான் கண்டு கொண்டது முதல் ஒரு நாள் ஒரு தடவையேனும் கேட்காமல் இருப்பதில்லை. நீங்களும் ஆளரவமற்ற இரவின் தனிமையில் கேட்டுப் பாருங்கள் - விழிகளின் அடைப்பில் மனம் திறப்பதை உணர்வீர்கள்.

Click to hear music file

No comments:

Jing'an Temple, Shanghai

And oh, the Jing'an Temple! As per the piece of history printed in their ticket, the shrine was first built in 247 AD in the Wu Kin...