Monday, February 1, 2010

உள்ளோடும் நதி 1

இரு கைகளின்
ஆட்காட்டி விரல்கள் சேர்ந்து
இடதிலிருந்து வலதும்
வலதிலிருந்து இடதும்
அலைந்து அலைந்து
மேலும் கீழும்
மிதந்து பறக்கும்
கால்களுக்குப் பதில் சிறகுகள்
மரப்பலகைச் சட்டம்
ஒருபுறம் கழன்றாடும்
கன்னங்கரிய (பள்ளியின்
வேலி படர்ந்த
கோவை இலை பறித்து
தேய்த்த)
சிலேட்டில் வாங்கிய
மதிப்பெண்
மொட்டைமாடியின் காய்கின்ற
சித்திரை வெயிலில்
தண்ணீர்தொட்டியின்
அடியில்
விரித்துப் படுத்து
ஓயாது பேசுகின்ற
பள்ளிக் கதைகளில்
அவ்வப்போது
அச்சத்துடன் அக்கம்பக்கம்
பார்த்துப் பேசும்
பாலியல் கதைகள்
முதன்முதல் வாங்கிய
வாகனமேறிய
நண்பனுடன் காடுமேடு சுற்றி
வழக்கமாய்
புகைப்படம் எடுத்தலையும்
இயற்கையும் செயற்கையும்
தாண்டி
எங்கோ ஒரு ஊரில்
ஏதோ ஒரு கடையில்
அடைக்கப் போகும் பொழுதில்
அருந்தும் பேச்சில்
பசியற்ற உணவு
உலகின் கற்பனை அனைத்தும்
தத்துவம் அனைத்தும்
பேசித் தீர்த்துவிட
இருண்டு குளிர்ந்த
சாலைப்படியோரம்
புகைத்துத் தீர்ந்த
எண்ணங்களை எண்ணி
முடிப்பதற்குமுன்
சந்தேகத்தின்பேரில்
முதன்முதல்
அழைத்து செல்லப்பட்ட
(அப்பாவுக்கு இன்னும் தெரியாத)
காவல் நிலையம்
நூலக வாசலில்
பார்வை செல்லாத
புத்தக விரிப்பின் ஊடே
எனக்கு பிடிக்கும் என்று
பச்சைசேலை அணிந்து
கௌரவமும்
கர்வமும்
தந்த முதல் தோழி
ஆளரவமற்ற கிராமத்தின்
ஆளரவமற்ற கோயிலில்
இயலாமையில்
மனம் வெந்த
கண்ணீர் கறைகளின்
சாட்சியாய் நின்ற
முருகன்
ஒன்றுக்குள் ஒன்று
உருமாறிக்கொள்ளும்
நிகழ்வுகளின்
தொடர்வாய் வாழ்க்கை
நல்லவேளை
பிறப்பைப்போல
இறப்பும் ஒன்று

1 comment:

Anonymous said...

Cast not the first stone. .........................

Pandit Venkatesh Kumar and Raag Hameer