Saturday, November 14, 2009

Letters to Jeyamohan - 6

அன்புள்ள ஜெயமோகன்,


நீண்ட நாட்களின் வேலைப்பளுவிற்கு பின் 'முறையீடு' பதிவைப் படித்தேன்.

அலங்காரங்கள் ஏதுமற்ற, சொற்கள் உணர்வின் வெளிப்பாடுகளை சிதைக்காத, மிக நுண்ணிய ஆனால் மிக நேரடியான, அது, அதை பதிவு அல்லது கட்டுரை என்றெல்லாம் குறுக்க முடியாத, ஓர் உணர்ச்சி...

பொதுவாக பிறவுயிர்களின் அவலம் கூறும் எழுத்துகளில் தன்னேற்றம் ஒரு தடையென மாறி விடுவதுண்டு. அநாதரவான அந்த உயிரின் நிலை ஏற்படுத்த வேண்டிய உணர்வழுத்தம், சுய விவரனையிலோ கழிவிரக்கத்தினாலோ பின்னுக்கு தள்ளப்பட்டு நீர்ப்பதுண்டு.

முறையீட்டில் அது மிக இயல்பாக உருபெற்றிருக்கிறது. காரணம், எவ்வித உடன்பாடுகளும் மறுதளிப்புகளும் இல்லாமல், எந்த கற்பிதமும் இல்லாமல் அந்த உயிரின் வலியை உங்களால் உணர முடிந்திருக்கிறது.

பரிபூரணமாக கைவிடப்பட்டவனின் அழுகையைப் போல இந்த உலகத்தின் அத்தனை அழகுகளையும் இன்பங்களையும் ஒருசேர அருவருப்பாக்கத்தக்க வேறொன்று இல்லவேயில்லை. வேதம் கூறும் மகா வாக்கியம் போலொரு உண்மை. நாம் வாழும் வாழ்க்கையும், அனுபவிக்கும் இன்பங்களும், இடும் போட்டிகளும், கொள்ளும் தந்திரங்களும், இத்தகையதோர் கணத்தில் நம்மை கடையனிலும் கடையனாக உணரச் செய்கின்றன.

சுடர்மிகும் அறிவின் விளைவாய் ஒருபுறம், உயிர்களின் மீதான காதலும், மறுபுறம் மூளையின் கூர்மையை மழுங்கச் செய்ய வேண்டும் ஏற்புகளும்...

ஆனால், எத்தகைய உணர்வையும் சித்திரமாய் வடித்து விடும் வல்லமை வரப் பெற்றவனுக்கு முறையீடுகளும் ஓர் ஓவியவெளிதானோ?

இதயம் தொட்ட பதிவிற்கு மிக்க நன்றி,

வணக்கத்துடன்
சரவணன்
சிங்கப்பூர்

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer