Sunday, September 20, 2009

ஓ! எந்தோ!

ஜெயமோகன் ஒரு தடவை அவரது வலைப்பதிவில் திரைப்பாடல்கள் குறித்து எழுதி இருந்தார். சில பாடல்கள் அல்லது இசை துணுக்குகள் அல்லது சில வரிகள் கேட்கும் போது நாம் ரசித்து கொண்டிருப்போம். மெல்ல உள்ளே நுழைந்து நமக்கே தெரியாமல் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு விடும் அவை, பிறகு நமது எல்லா வேலைகளிலும் பின்னணி இசை போல மூளைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும்.


காலை கண் விழித்தவுடன் மனதில் முதலில் ஓடும் அந்த பாடல் வரியாகத்தான் இருக்கும்; பல் தேய்க்கும் போது; குளிக்கையில், உணவருந்தும் போது, பணிக்கு செல்லும் போதும் என தொடர்ந்து மனதின் மூலையில் ஒலித்து கூடவே வரும் அந்த சலனம் சில சமயம் தவிர்க்க கடினமாக இருந்திருக்கிறது. மூன்று நான்கு நாட்கள் கூட சில பாடல்கள் இவ்வாறு ஒலிப்பது உண்டு. மற்ற பாடல்களையோ இசையையோ நுழைய விடாமல் எண்ணத்தை அடைகாக்கும் ஆளுமை இவற்றிற்கு இருப்பதை அவதானிக்கிறேன்.

இவை ஒரு வகை என்றால், இன்னொரு வகை, எப்போதோ எங்கோ கேட்ட அற்புதமான அபூர்வமான சில திரைப்பாடல்கள் அப்படியே மனதின் உச்சக்கட்ட ஆழத்தில் உறைந்து போய் கிடப்பது.

அப்படிப்பட்ட, என்னில் சிறு வயது முதல் எதற்காகவோ பதிந்து, இன்றும் நான் தேடும் இரண்டு பாடல்களை பற்றி...

என்னுடைய பதின்ம வயதில் இளையராஜா தமிழ் திரைஇசையில் அசைக்க முடியாத இடத்துக்கு வந்து விட்டார். அப்போதிருந்து கேட்டு வந்த பாடல்களில் நான் மேற்கூறிய, சிறு வயது பொதிந்து, பின் தேடும் நிகழ்வு ஏற்படவில்லை. ஊடகங்கள் கூடி விட்ட காரணமோ, அன்றி ரசிப்பில் ஏற்பட்ட தெளிவோ நானறியேன்.

ராஜாவின் காலத்துக்கு முந்தைய பாடல்கள் அவை. எனக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கலாம். என்றால் 1975. விஸ்வநாதனின் காலம். ரசித்து கேட்ட அவரின் அத்தனை பாடல்களையும் இன்றும் நினைவுகூர முடிகிறது, அவ்வப்போது கேட்ட முடிகிறது. மிக பெரும்பாலான பாடல்களை பல்வேறு தொகுப்புகளின் கீழ் நானே சேகரித்து வைத்துமிருக்கிறேன்.

ஆனால் இந்தப்பாடல்கள்?

முதல் பாடல் - ஒரு டூயட். பி. சுசீலாவும், ஆண்குரல் யாரென்று ஞாபகமில்லை, யேசுதாசாக இருக்கலாம். வீடுகளில் டேப் ரெக்கார்டர்கள் இல்லாத காலம். எனது வீட்டில் இருந்ததும் ஒரு ரேடியோ மற்றும் ரெகார்ட் பிளேயர் மட்டுமே. அப்போது ஆல் இந்தியா ரேடியோவின் விவித் பாரதி வர்த்தக ஒலி பரப்பில் கேட்டது அந்த பாடல்.

"பெற்றெடுத்தல் அன்னை கடன்
மற்றதெல்லாம் தந்தை கடன் - ஆண் குரல்

பிறந்தேன் ஒரு பிறவி - கண்ணா
உன்னை பெற்றெடுத்தேன் மறு பிறவி - சுசீலா

இது பல்லவி.

மிக எளிமையான வரிகள். வெறும் தபலா மட்டும் ஓடும் இந்த நான்கு வரிகள் மட்டுமே நினைவில் இருக்கிறது. சரணமோ, இடை இசையோ, படத்தின் பெயரோ, இசை அமைப்பாளரின் பெயரோ ஒன்றுமே தெரியாமல் என் நினைவில் நிற்கும் இந்த நான்கு வரிகள் முப்பது வருடங்களுக்கும் மேலாக கூடவே வந்து கொண்டிருக்கின்றன.

இவ்வளவு வியப்புடன் குறிப்பாக சொல்லக் காரணம், மிக மிக பெரும்பாலான பாடல்கள், எனக்கு பிடித்தவையாக இருந்தால், அத்தனை விவரங்கள், வரிகள், இடை இசை, அனைத்தும் பதிந்து விடும் எனக்கு, இந்த பாடல் குறித்த வேறு ஒன்றுமே தெரியாமல் போனது வியப்பு மட்டுமல்லாமல் வேதனையும் கூட.

திரை இசையில் அகராதிகளாக வலம் வந்து கொண்டிருந்த, கொண்டிருக்கும் எனது பல நண்பர்களுக்கு கூட இந்தப் பாடல் குறித்து ஒன்றும் தெரியவில்லை. சிறு வயதில் தொலைந்து போன பிள்ளையின் மிகச் சில சாயல்களை மட்டும் நினைவில் கொண்டு திரியும் தகப்பனைப் போல காத்திருக்கிறேன்.

அடுத்த பாடல் இந்தளவுக்கு துரதிர்ஷ்டம் இல்லை. படம் - பாலச்சந்தரின் நான் அவனில்லை. பாடியவர்கள், ஜெயச்சந்திரன், எல். ஆர். ஈஸ்வரி. இசை- எம்.எஸ்.விஸ்வநாதன். அதே காலக் கட்டத்தில் கேட்டதுதான் இந்தப் பாடலும்.

'மந்தார மலரே, மந்தார மலரே,
நீராட்டு கழினல்லே
மன்மத ஷேத்ரத்தில்
எந்நாளும் பூஜா
நீகூட வருமில்லே - எல். ஆர். ஈஸ்வரி

பிறகு, ஜெயச்சந்திரன், மலையாளத்தில், "மன்மதன் இவிடே தன்னே உண்டு" என்பார்.

ஒரு விரிவான வயலின் இசை கோர்வைக்கு பின், ஈஸ்வரி, " ஓ, எந்தோ!" என்பார் பாருங்கள்!

அந்த இரு வார்த்தைகளின் அசைவுகள், அவற்றிலிருந்த பெண்மை - என்னை மயக்கி விட்டன. மனதில் செதுக்கி இருந்த அந்த இரு வார்த்தைகள்!

இந்தப் பாடலையும் முப்பது வருடங்களுக்கும் மேலாக நான் கேட்கவேயில்லை. மிக யதேச்சையாக இரண்டு வருடங்களுக்கு முன் இந்த பாடலை ஒரு வலைத்தளத்தில் கேட்ட போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!

மந்தார மலரே என்ற இந்த பாடல் பல விஷயங்களுக்காக தனித்துவமான ஒரு பாடல். தமிழில் அதற்க்கு முன்பு இப்படி தமிழும் மலையாளமும் மணிப்ப்ரவாலமாக கலந்தொரு பாடலை நான் கேட்டதில்லை. வரிகளும் மிக உயரிய கவிதைச் சித்திரம். சண்டை மேளம், குழல் என்று விஸ்வநாதன் கொடுத்திருக்கும் மலையாள பண் அசல் கேரள வாசனை வீசும் ஒரு படைப்பு.

மீண்டும் இந்தப் பாடலை கேட்டதும் ஒரு நாளெல்லாம் அனுபவித்து கொண்டிருந்தேன்.

ஓ! எந்தோ!
mandhara malare.mp3

No comments: