Saturday, March 14, 2009

அனல் காற்று - வருடிச் செல்லும் ஒரு சுகந்தம்

அன்புள்ள ஜெயமோகன்,

'அனல் காற்று'!

தமிழுக்கு என்ன ஒரு வன்மை! உங்கள் எழுத்துக்கு 'அனல் காற்று' ஒரு புத்தம் புதிய சிறகு. மிதந்து செல்லும் நிகழ்வுகளூடே அலைந்து திரிந்து முடித்த உடன் ஏற்படும் களைப்பு புது அனுபவம்.

ஸ்டெல்லா ப்ருசினுடைய 'அது ஒரு நிலாக் காலம்' தந்த சுகம், உணர்வை ரசித்தேன்.
ராம்கி, சுகந்தா, ரோஸ் போன்ற நிலைத்துவிட்ட மாந்தர்கள், அருண், சுசி, சந்திரா மற்றும் அம்மா.

கதை முழுதும் கொஞ்சப்படுகிற சுசி, காதலை தவிர எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அரிய பெண். மற்றவர்கள் அனைவருமே ஒருவரை ஒருவர் உபயோகப்படுத்திக்கொள்ளும் எளிய, நம் வாழ்வில் அனுதினம் சந்திக்கும் நபர்கள்.

அடிக்கடி நீங்கள் கூறுவது போல், அனல் காற்று, உங்கள் படைப்புகளில் புது வார்ப்பு. புது களம்; உரையாடல்கள். ஜோ பேசும் வரிகளில் மட்டும் கிண்டலும், எள்ளலும் ஊறிக் கிடப்பது தேர்ந்த திறனின் வெளிப்பாடு.

இக்கதையை பாலு மகேந்திரா படம் செய்ய எத்தனித்தார் என்று சொல்லி இருந்தீர்கள். இந்த கதைக்குத்தான் தமிழ் வேண்டுமே தவிர, விஷூவலுக்கு மொழி தேவையில்லை. காட்சிபடுத்தலுக்கு அபூர்வமான வார்த்தைக்கூறுகளை முயன்று வெற்றியும் கண்டிருக்கிற இயக்குனர்கள் பலர் உலக திரைப்பட வரலாற்றில் உண்டு.

சொல்லப் போனால், இக்கதையை ஓர் அழுத்தமான, வசனங்கள் குறைந்த, அடர்த்தியான திரைப்படமாக பார்க்கும் ஆசையில் யார் அந்த ஆளுமை என்று என் குறைந்த சுவை அனுபவத்தில் தேடி நிற்கிறேன். ஏன், கமல் ஹாசன் தன் படைப்பு திறனின், பாசாங்கற்ற உச்சத்தில் இருந்த போது செய்திருக்கக் கூடிய முயற்சியே 'அனல் காற்று'.

பலர் காண்பது போலல்லாமல், ஆணின் காமமாக மட்டும் இக்கதையின் அமைப்பு தோன்றவில்லை. மிக எளிய, இரு பாலருக்கும் மிக மிக பொதுவான காதலும், காமமும், காமம் தோன்றும் ஊற்றுக்கண்ணாக சுயநலமும், இன்னும் பல எளிய, தொன்மையான திரையிடப்படாத உணர்ச்சிகளுமே 'அனல் காற்றை' நாம் திகைப்புற வீசி செல்லும் படைப்பாக ஆக்கியிருக்கிறது.

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு, என்னை ஈர்த்த 'அனல் காற்றின்' சில வரிகள் (சில, அமரத்துவம் ததும்பும் அழகு):

"புதிய வெயிலில் நீராடிய பெருநகரம் என்னை நோக்கி பெருகி வந்தது.

உன் உடல் வழியாக ஒவ்வொரு கணமும் புத்தம் புதிதான பேரழகுடன் நிகழ்ந்துகொண்டிருந்தாய். ஒவ்வொரு கணத்திலும் ஒவ்வொரு பெண்ணை உன் உடலில் கண்டபடி கண்கள் மட்டுமே நானாக பிரமித்து அமர்ந்திருந்தேன். சுசி, எத்தனை நூறு அழகுபாவனைகளின் தொகுப்பு பெண்!

பெண்மையின் முடிவிலா ஜாலங்களில் சிக்கி அழிவதையே ஆணுக்கு இன்பமென வைத்திருக்கிறான் உலகியற்றிய முட்டாள்.

உன்னைப்போல் சிந்தனையிலும் சிரிப்பவர்கள் ஆசீர்வதிக்கபப்ட்டவர்கள்.

நெஞ்சில் இல்லாத புன்னகையை முகத்தில் வரவழைப்பதென்பது எத்தனை சிரமமானது…

மிக நெருக்கமாக ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட கணங்கள். பின்னால்செல்லும் ஆட்டை முட்டி முன்னால்தள்ளி நகரும் ஆட்டுமந்தைபோல காலம்…

நாம் மிக நேசிக்கும் ஒருவருக்கு நாமளிக்கும் ஆகச்சிறந்த பரிசே அவர் மிக விரும்பும் ஒரு நடிப்பைத்தான் இல்லையா?

நீ என்னைத் தொட்டிருந்தால் நீர்த்துளி சிறு தொடுகையில் உருவழிவதுபோல் நான் உடைந்திருப்பேன்.

இப்பூவுலகில் இதுவரை மலர்ந்த பெண்களிலேயே நீதான் பேரழகி என்று சற்றும் ஐயமின்றி நான் உணர்ந்த தருணங்கள் எனக்காக உருவாகிக் கொண்டிருந்தன அப்போது…

சொற்களில்லாமல் இரு தொலைபேசிகளுக்கு அப்பாலும் இப்பாலும் சில கணங்கள் நின்றிருந்தோம்.

தன் அம்மாவையும் மனைவியையும் ஒரே சமயம் சேர்ந்து காணும்போது ஆண் ஒரு விசித்திரமான மனக்குழப்பத்தை அடைகிறான்.

காமத்தால் அலைக்கழிக்க விதிக்கப்பட்ட ஆணை அனைவருமே மன்னிக்கத்தான் வேண்டும் சுசி.

ஆண் மனதின் நுண்ணிய மென்பகுதியில் அறைவதற்கு நீ கற்றிருக்கவில்லை. சுசி, அது ஆணுடன் நெருக்கமாக பழகிப் பழகி பெண்கள் கற்றுக்கொள்வது.

மண்ணில் எதையும் நியாயபப்டுத்திவிடலாம். கொஞ்சம் கண்ணீரும் கொஞ்சம் சொற்களும்போதும்."

நன்றி, ஜெயமோகன்.

Pandit Venkatesh Kumar and Raag Hameer