Saturday, February 14, 2009

Letters to Jeyamohan- 1

அன்புள்ள ஜெயமோகன்,

தங்களின் விரிவான பதிலுக்கு நன்றி. நிறுத்தாமல் எழுதிக் கொண்டிருப்பதற்கு நடுவிலும் பதிலனுப்ப தீவிரமான கடப்பாடு இருக்க வேண்டும்.

கடைசிக் குடிகாரன் பதிவு படிக்கும்போதே பல கிளைகளாக பிரிந்து சென்றது. பெருமிதமும் சுய நம்பிக்கையும் கொண்டிருப்பவர்கள் பலரும் வாழ்வின் பற்பல தருணங்களில் பிறரிடமும், தன் ஆளுமையில் இல்லாத சூழ்நிலையிடமும், ஏன், தன்னிடமே கூட தோற்க நேரிடுகிறது. இந்த பதிவு சொல்வதில் அது ஒரு கிளை.

சுயத்தை வெல்லச் செய்யும் முயற்சிகள் சுயத்தினுடாக அல்லவா இயலும்? சுயத்தை இழப்பதற்கும் தன்னைப்பற்றி தான் கொண்டிருக்கும் பெருமிதத்தில் இருந்து சரிவதற்கும் உள்ள தொடர்பானது, பல நேரங்களில் நம்மை நாமறியாமலே தடுக்கிறது; மீட்கிறது. இந்தப் பதிவில் அது ஒரு கிளை.

கேட்பதற்கு செவிகளும், சாய்வதற்கு தோள்களும் இல்லாத நிலை எத்தனை கொடுரமானது! நம் வாழ்வில் நாம் கடந்து வந்த அதே போன்றதொரு நிலையில் மற்றொரு உயிர் கண் முன்னே தவிப்பதின் வலி எத்தனை பேருக்கு புரியும்? அதுவும், ஒரே நேரத்தில் நாம் துடிப்பதை போலவே அந்த உயிரும் வதைபடுவதை காண்கையில், மற்ற அனைத்து பிடிமானங்களும் கற்பிதங்களும் இழந்து போய், நாம் அவனாகவும், அவன் நாமாகவும் உணர முடிவது ஓர் உயரிய சாத்தியம்.

கடைசி குடிகாரன் செல்லும் முக்கியமான கிளை இது எனப்படுகிறது. அந்நிய தேசத்து நாய் நம்மூர் தெருவில் கூசி நடப்பது, விளக்கு கம்பங்களின் நிழல் தெருவில் ஓடிச்சென்று மறைவது, நாயின் துணை, படபடத்து அமையும் பாலிதீன் சருகு, உள்ளே செல்லும் எறும்பா வெளியில் வருவது.....

உங்களால் முடியாத காட்சிப்படுத்தல் இல்லை எனலாம்.

நன்றி, ஜெயமோகன்.

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer